Published:Updated:

`சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை’ - மத்திய அரசு பின்வாங்கியது ஏன்?

மக்கள்தொகை
News
மக்கள்தொகை

உச்ச நீதிமன்றம், 'தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரணும் என்றால், என்ன சமீபத்திய கணக்கீடு உங்களிடம் இருக்கிறது?' என்று கேட்கிறது. முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இது தெரியவரும்.

Published:Updated:

`சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பில்லை’ - மத்திய அரசு பின்வாங்கியது ஏன்?

உச்ச நீதிமன்றம், 'தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரணும் என்றால், என்ன சமீபத்திய கணக்கீடு உங்களிடம் இருக்கிறது?' என்று கேட்கிறது. முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இது தெரியவரும்.

மக்கள்தொகை
News
மக்கள்தொகை

கடந்த ஜூலை 19-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜூலை 21-ம் தேதி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எம்.பி-க்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது, ``மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களைச் சேகரிக்க வேண்டுமென மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், எஸ்.சி., எஸ்.டி-யைத் தவிர இதர சாதிகளின் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது'' என்று குறிப்பிட்டார். இந்தச் செய்தி வட இந்தியாவில் எந்தவித விமர்சனத்தையும் கிளப்பவில்லை. ஆனால் தெற்கில், குறிப்பாகத் தமிழகத்தில் விமர்சனங்கள் எழுந்தன. `மத்திய அரசு எதனால் பின்வாங்குகிறது?’ என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசினோம்.

கணக்கெடுப்பு
கணக்கெடுப்பு

``முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் 1931-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வரையில் சாதிவாரி கணக்கெடுப்பும் நடந்தது. அதன் பிறகு, சுமார் 90 ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தப்படவேயில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு எஸ்.சி., எஸ்.டி-க்கு மட்டும்தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறார்கள். அதை இட ஒதுக்கீட்டுக்காக நடத்துவதாகச் சொல்கிறார்கள். மத்திய அரசு முன்னரே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போது நடத்த வேண்டாம் என்கிற கொள்கை முடிவில் இருப்பதாகக் கூறுகிறது.

`முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் என்ன நன்மை’ என்பதைப் பார்ப்போம்.

தமிழகத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட சாதிப் பிரிவுகள் உள்ளன. பெரும்பாலான சாதிகளில் உட்பிரிவுகள் ஏராளம். பொதுவாக, ஒரு சாதிக் கட்சித் தலைவரைக் கேட்டால், 'எங்கள் சமூகத்தினர் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தமிழகத்தில் இருக்கிறார்கள்' என்பார். இப்படியே ஒவ்வொரு சாதித் தலைவரும் சொல்வதைக் கூட்டிப் பார்த்தால் தமிழக மக்கள்தொகை மட்டுமே சுமார் 30 கோடியைத் தாண்டும். இதில் யாரையும் குற்றம் சொல்லவில்லை. முழுமையான தரவுகள் இல்லாததே இப்படிச் சொல்வதற்குக் காரணம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஒவ்வொரு சமூகத்தின் உண்மையான மக்கள்தொகை, சதவிகிதம் தெரிந்துவிடும்.

மக்கள்தொகை
மக்கள்தொகை

இதில் நல்லதும் உண்டு, கெட்டதும் உண்டு. தங்கள் சமூகத்தின் உண்மையான கணக்கு புலப்பட்டால் அதைக்கொண்டு சில சமூகங்கள் இட ஒதுக்கீட்டை உயர்த்திக் கேட்கலாம். இது அவர்களுக்கு நல்லது. அதுவே, கணக்கெடுப்பின் மூலம் குறிப்பிட்ட ஒரு சமூகம் குறைவாக இருந்தால், இட ஒதுக்கீட்டில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இது இத்தகையவர்களுக்கு கெட்டது. அதனால்தான், தமிழக அரசைப் பொறுத்தவரை கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பதுதான் சேஃப் என்று நினைக்கிறது. ஏற்கெனவே, 69 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. கணக்கெடுப்பு நடத்தி உண்மை நிலவரம் வெளியானால், இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்திக் கேட்பார்கள். மற்ற சமூகத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். தேவையில்லாமல் சட்டம், ஒழுங்கு பிரச்னைகூட ஏற்படலாம். அதனால், மத்திய அரசின் அனுமதியோ, உதவியோ இல்லாமல் தமிழக அரசு இந்த விஷப் பரீட்சையில் இறங்காது.

பா.ஜ.க அரசு ஏன் இப்போது பின்வாங்குகிறது என்றால், இந்து என்கிற அடையாளம் அழிந்துவிடும் என அச்சப்படலாம். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் சித்தாந்தமே இந்துத்துவாதான். சாதிரீதியாக அவர்கள் பெயர்களை வேண்டுமானால் வைத்துக்கொள்வார்களே தவிர, சாதியைச் சொல்லி அரசியல் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்தால், இந்து என்கிற அரசியல் அடிவாங்கும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், இந்து ஒற்றுமை என்கிற பா.ஜ.க கோட்பாடு தகர்ந்துவிடும் என்பதாலேயே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவையே எடுத்துவைத்துள்ளனர்" என்கின்றனர்.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

சாதிரீதியான தரவுகளை விரல்நுனியில் வைத்திருக்கும் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். ``ஆரம்பத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொன்னவர்கள் மாறுபட்ட முடிவு எடுத்திருக்கிறார்கள். காரணம், இதனால் ஏற்படும் விளைவு. இந்து ஒற்றுமைக்குக் குந்தகமாக இருக்குமென நினைக்கிறார்கள். பல சாதிச் சங்கங்கள் தங்களுக்குக் கூடுதல் அதிகாரம் தேவையெனத் தெருவிலிறங்கிப் போராடும் என்ற அச்சமும் உள்ளது. இந்திய அளவில் இதற்கான இயக்கம் எழுந்தாலே ஒழிய, சாதிவாரி கணக்கெடுப்பு நடப்பதற்குச் சாத்தியமில்லை.

மத்திய அரசின் அனுமதியுடன், தமிழக அரசு தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். ஆனால், தகவல்களை மாற்றிக் கொடுத்தால் என்ன செய்வது? சந்தேகம் உள்ளவர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம். ஆனால் அது பெரிய புராசஸ். இதுபோல ஒவ்வொருவரையும் சந்தேகப்பட முடியாது. ஒருவேளை தகவல் உண்மையாக இருந்தால் மக்கள் பிரச்னை செய்வார்கள். மக்களைச் சாதிரீதியாக பிரித்தே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினான். அதையும், பல்வேறு கமிஷன்களின் அறிக்கைகளும், கலெக்டர்களின் ரிப்போர்ட்களையும் வைத்து ஒரு மதிப்பீடு அடிப்படையில்தான்  இன்றும் சென்றுகொண்டிருக்கிறோம். வன்னியர் சமூகம் 13 சதவிகிதம் இருப்பதாக அம்பாசங்கர் கமிஷன் சொல்கிறது. அதுவே கலெக்டர் ரிப்போர்ட் பார்த்தால் 8.5 சதவிகிதம்தான் இருப்பதாக ஆணித்தரமாகச் சொல்கிறது. இது போன்ற ஒவ்வொரு சாதி பற்றியும் மாறுபட்ட தகவல்களே உள்ளன. எனினும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய அளவில் ஒன்றிணைத்தால்தான் சாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியம்" என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவது பா.ம.க-தான் என்பதால், மத்திய அரசின் இந்த முடிவு பற்றி பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம்.

``தமிழ்நாட்டில் மட்டும்தான் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. அதை எதிர்த்து பல வழக்குகள் வருகின்றன. அப்போது அதை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், 'தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடரணும் என்றால், என்ன சமீபத்திய கணக்கீடு உங்களிடம் இருக்கிறது?' என்று கேட்கிறது. முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இது தெரியவரும். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கான குழு ஒன்றை நியமித்தது. இது போதுமானதாக இருக்காது. ஏனெனில், சிலர் வேண்டுமென்றே தனது சாதியை மாற்றிக் கொடுக்கலாம். அதைக் கண்டுபிடிப்பது என்பது பெரிய வேலை. ஆனால், சென்சஸ் சட்டத்தின் மூலம் தவறான தகவல் தருபவர்களை தண்டிக்கலாம். அதுவும், தேசிய அளவில் மத்திய அரசு நடத்தினால்தான் இந்தச் சட்டம் பொருந்தும், முழுமையான தகவல்களும் கிடைக்கும்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

முன்னேறிய சமூகத்தில் உள்ளவர்களுள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அமலில் இருக்கிறது. ஆனால், முன்னேறிய சமூகத்தினர் தேசிய அளவில் எத்தனை சதவிகிதம் பேர் உள்ளனர் என்பதற்கான டேட்டாவே இல்லை. அவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்கான தரவுகளும் இல்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு படிவத்தில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் அதர்ஸ் (Others) என்று மூன்று பாக்ஸ் உண்டு. அவற்றில் எஸ்.சி என்றால் அதில் டிக் அடிக்கணும். எஸ்.டி என்றால் அதில் டிக் அடிக்கணும். அதர்ஸ் என்ற பாக்ஸ் அருகில் கோடு போட்டுவிட்டால், அதில் வன்னியர், செட்டியார், யாதவர், நாடார் என மக்கள் தங்களது சாதிகளை எழுதிவிடுவர். இதன் மூலம் சாதிவாரி கணக்கெடுப்பும் எளிதாக முடிந்துவிடும். இதற்கு கூடுதல் செலவும் ஆகப்போவதில்லை. எனவே, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் காலம் வரை, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் இது சமூகநீதிக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம்!" என்றார்.