கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 1,068.50 ஆக உள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் காஸ் சிலிண்டர்களின் விலையால் மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்தத் தொடங்கினர். இப்போது மின்சாரக் கட்டணமும் அதிகரித்து வரும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் புலம்பிக் கொண்டுள்ளனர். கிராமப்புறங்களில் மக்கள் விறகு அடுப்பைக் கூடுதலாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
2017 செப்டம்பர் 25-ம் தேதி அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திரமோடி ஆலோசனை செய்தபோது, சூரிய சக்தியின் மூலம் சமையலறைகளுக்குத் தேவையான தீர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதற்கான முயற்சியை இந்தியன் ஆயில் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் மேற்கொண்டது.
இந்நிலையில், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரத்தில் இயங்கும் இண்டக்ஷன் அடுப்பு ஆகியவற்றுக்கு மாற்றாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் (Surya Nutan) என்ற சூரிய அடுப்பை அறிமுகம் செய்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பழைய சோலார் அடுப்புகளில் இருந்து இந்த சூர்யா நூதன் அடுப்பு முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு, தொழில்நுட்பம் கொண்டதாகும். குறிப்பாக, சூர்யா நூதன் அடுப்பை மாடியிலோ, வீட்டின் வெளியே வெயிலிலோ வைத்து சமைக்க வேண்டிய அவசியமில்லை. சூர்யா நூதன் அடுப்பை நம் வீட்டின் உள்ளே சமையல் அறையில் எளிமையாகப் பொருத்தி பயன்படுத்தலாம். பார்ப்பதற்கு சாதாரண அடுப்பைப் போலவே இருக்கும்.

இதில் ஒரு யூனிட் சமையலறையிலும் மற்றொன்று வெளியில் வெயிலிலும் வைக்கப்படும், சூர்ய ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் தெர்மல் பேட்டரியும் இதில் இடம்பெற்றுள்ளது. பகலில் ஆற்றலைச் சேமித்து வைத்து இரவில் சீராக இயக்க முடியும் என்று கூறப்படுகிறது. பருவமழை மற்றும் கடுமையான குளிர்காலம் போன்ற வெயில் இல்லாத காலங்களிலும், வானிலை மாற்றங் களிலும் தொடர்ச்சியாக சூர்யா நூதன் பயன்படுத்தப்படலாம், அதற்கேற்ப தேவையான அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குத் தேவையான உணவையும் காலை, மதியம், இரவு மூன்று வேலைகளிலும் சமைக்க முடியும். சூர்யா நூதன் மூன்று வெவ்வேறு மாடல்களில் சந்தைக்கு வர உள்ளதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில், தயாரிப்பின் விலை அடிப்படை மாடலுக்கு ரூ.12,000 மற்றும் டாப் மாடலுக்கு 23,000. இருக்கலாம். ஆனால், எரிவாயு செலவு இல்லாமல் சமையல் செய்யலாம்.

இந்த அடுப்பை ரூ.12,000 கொடுத்து வாங்குவதன் மூலம் பல நன்மைகள் இருக்கின்றன. சிலிண்டருக்கு ஆகும் செலவைக் கணக்கிடுமபோது, முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் அடுப்பு வாங்கிய பணத்தை அதில் எடுத்து விடலாம்... என்று கூறுகின்றனர்.
காஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு ஆகியவற்றில் இருந்து சமையல் செலவைக் குறைக்க நிச்சயம் நல்ல தீர்வாக இது இருக்கும். மக்கள் செலவைக் குறைத்து பணத்தை சேமிக்க முடியும். இயற்கையான சூரிய சக்தியை பயன்படுத்துவதால் சூழலுக்கும், மக்கள் நலனுக்கும் தீங்கு ஏற்படுவதில்லை.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், இந்த சூர்யா நூதன் சோலார் சூரிய அடுப்பு விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. இந்தியன் ஆயில் காஸ் ஏஜென்சி மற்றும் பெட்ரோல் பம்ப் ஆகிய இடங்களில் விற்பனை ஆகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.