சமூகம்
Published:Updated:

மின்சார வசதியில்லை... ‘சாதிச் சான்றிதழ்’ கிடைக்கவில்லை!

திருமலையம்பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமலையம்பாளையம்

கோவைக்கு அருகே உள்ள சுதந்திரத்துக்கு முந்தைய கிராமம்

வகுப்பறையிலிருந்து ஆன்லைனுக்கு கல்வி மாறிவிட்ட நிலையில், மின்சாரம் இல்லாததாலும் சாதிச் சான்றிதழ் இல்லாததாலும் கோவையில் ஒரு கிராமம் கல்வியிலிருந்து விலக்கிவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

‘இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்துவிட்டோம்’ என்றது மத்திய அரசு. ‘தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் நலனும் எங்களுக்கு முக்கியம்’ என்றது மாநில அரசு. ஆனால், கோவை மாநகரத்துக்கு அருகே உள்ள அந்தக் கிராமத்தை ஒருமுறை நேரில் சென்று பார்த்தால், அரசு நிர்வாகங்கள் அப்பட்டமாகப் பொய் சொல்வது தெரியும்.

கோவை - பாலக்காடு சாலையில் அமைந்திருக்கும் மதுக்கரையிலிருந்து விலகி உள்நோக்கி 5 கி.மீ தூரம் பயணித்தால், திருமலையம்பாளையம் பேரூராட்சி வருகிறது. ‘திருமலையம்பாளையத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களின் வீடுகளில் மின்சாரமில்லை, சாதிச் சான்றிதழ் இல்லை. இதனால், அந்தப் பகுதி குழந்தைகளால் கல்வியைத் தொடர முடியவில்லை’ என நமக்கு புகார் வரவே, உடனடியாக களத்துக்குச் சென்றோம். கிழிந்து தொங்கும் கூரைகள், கரடு முரடான நிலப்பரப்பு, அறியாமை நிறைந்த முகங்கள் என, திரும்பிய பக்கமெல்லாம் அரசின் அலட்சியங்களையும் அவலங்களையும் காண முடிந்தது.

நாற்பது வயது மதிக்கத்தக்க வள்ளி வேலுசாமி என்பவர், ‘‘நாங்க பொறந்ததுல இருந்தே இங்கதான் இருக்கோம். வெள்ளைக்காரன் காலத்துல இருந்து இங்கே இருக்கிறதா எங்க அம்மா சொல்வாங்க. சிலரு இதை `ரொட்டிக் கவுண்டனூர்’னு சொல்வாங்க. சிலரு `முனியப்பன் கோயில் வீதி’னு சொல்வாங்க. ஆரம்பத்துல 50 வீடுங்க இருந்துச்சு. எந்த வசதியும் இல்லைனு சிலர் இங்கயிருந்து போயிட்டாங்க. இப்ப 25 குடும்பங்கதான் இருக்கு. அப்ப இருந்தே கூரைவீடுதான். ரொம்ப வருஷம் போராடி, சில வீடுகளுக்கு மட்டும் பட்டா கிடைச்சுது. இன்னும் சில வீடுங்களுக்குக் கிடைக்கலை. அப்புறம் தண்ணி வசதி கொடுத்தாங்க. தெருவிளக்கு வெச்சாங்க. கழிவறை கட்டி ரெண்டு வருஷம் ஆச்சு. இப்பவரைக்கும் திறக்கலை.

கொட்ற மழைனாலும் கொளுத்துற வெயில்னாலும் இந்தக் கூரைதான். நைட் நேரத்துல மெழுகுவத்தி, பேட்டரி லைட் வெச்சு சமாளிச்சுப்போம். நாங்கெல்லாம் காட்டு வேலைக்குத்தான் போயிட்டிருக்கோம். அதுல ஒரு நாள் வேலை இருக்கும்... ஒரு நாள் வேலை இருக்காது. எங்க பொழப்புதான் இப்படி ஆகிடுச்சு... எங்க வாரிசுங்களையாவது படிக்கவைக்கலாம்னு பார்த்தா, அதுலயும் நிறைய சிக்கல்.

தாயுடன் சங்கவி - திறக்கப்படாத கழிவறை
தாயுடன் சங்கவி - திறக்கப்படாத கழிவறை

கரன்ட் இல்லாம படிக்கிறதே பெருசு. அப்படியே ஸ்கூலுக்குப் போய் நல்லா படிச்சாலும், சாதிச் சான்றிதழ் கேக்குறாங்க. எங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிக்கே அதெல்லாம் இல்லை. இவ்வளவு ஏன்... இங்க பலருக்கு ரேஷன் கார்டே இல்லை. அதையெல்லாம் கேட்டு பலமுறை அலைஞ்சு பார்த்துட்டோம். வேலை நடக்கலை. அரசுதான் மனசுவெச்சு எங்களுக்கு நல்ல வீடு, கரன்ட், கல்வி எல்லாம் கொடுத்து, எங்கள மேல கொண்டுவரணும்” என்று கோரிக்கைவைத்தார்.

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும், இந்தக் கிராமத்திலிருந்து சங்கவி என்கிற பெண் ப்ளஸ் டூ படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். டாக்டர் ஆக வேண்டும் என்பது அவரின் கனவு. ஆனால், நீட் தேர்வில் நூலிழையில் தோல்வி, சாதிச் சான்றிதழ் தடை போன்றவற்றால் சங்கவியால் கல்வியைத் தொடர முடியவில்லை. சங்கவியின் தந்தை சமீபத்தில் உயிரிழந்துவிட்டார் என்பது சோகம்.

சங்கவியிடம் பேசினோம். ‘‘வீட்ல நான் ஒரே பொண்ணு. அப்பாவுக்கு கூலிவேலை. அவருதான் எங்க தேவைகளை நிறைவேத்திட்டு இருந்தாரு. நான் நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டாரு. சின்ன வயசுல இருந்தே டாக்டர் ஆகணுங்கிறதுதான் என் ஆசை. அதுக்காகவே ப்ளஸ் டூவுல சயின்ஸ் குரூப் எடுத்தேன். சயின்ஸ் குரூப் படிச்ச எல்லாருக்கும் ரெக்கார்ட் நோட் எவ்வளவு முக்கியம்னு தெரியும். மெழுகுவத்தி வெளிச்சத்துல ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி, மழைக்காலத்துல மழையில நனையாம அதை பத்திரமா பாதுகாத்துப் படிச்சேன்.

அரசோட நீட் பயிற்சி வகுப்புல சேர்ந்தேன். ஆனா, சில காரணங்களால நீட்ல நான் ஆறு மார்க் குறைவா எடுத்து ஃபெயில் ஆகிட்டேன். அதுக்கப்பறம் ஒரு பாலிடெக்னிக் காலேஜ்ல சேர்ந்தேன். அவங்க சாதிச் சான்றிதழ் வேணும்னு சொன்னதால, அதையும் தொடர முடியலை. போன வாரம் திடீர்னு அப்பா இறந்துட்டாரு. அப்பா இருந்தவரை ரொம்ப நம்பிக்கை இருந்துச்சு. அம்மாவால வேலைக்குப் போயெல்லாம் என்னைப் படிக்கவைக்க முடியாது’’ என்றவர், தங்கள் பகுதியின் பிரச்னைகளையும் விவரித்தார்.

சிலம்பரசன் - வள்ளி வேலுசாமி - இராசாமணி
சிலம்பரசன் - வள்ளி வேலுசாமி - இராசாமணி

‘‘எங்க ஏரியாவுல இடி விழுந்து ஒருத்தர் இறந்துட்டார். எப்ப எந்த விஷப்பூச்சி கடிக்கும்னே தெரியாது. இங்க இருக்கிற எல்லா வீடுகள்லயும் இதுதான் நிலைமை. எங்க பெற்றோருங்க யாருக்கும் படிப்பறிவு இல்லை. அறியாமைதான் அவங்களை சூழ்ந்துட்டிருக்கு. எங்க பழங்குடி சமுதாயத்துக்கு எத்தனையோ நலத்திட்டங்கள் இருக்கு. சாதிச் சான்றிதழ் இல்லாததால எங்களால அதைப் பெற முடியலை. கல்வி மூலமாதான் இதெல்லாம் மாறும். நானும் படிக்கணும். படிச்சுட்டு வேலைக்குப் போகணும். அதுதான் என்னோட ஒரே ஆசை. அராசங்கம்தான் அதை நிறைவேத்திவைக்கணும்” என்றார்.

அந்த மக்களின் பிரச்னைகளுக்காக குரல்கொடுத்துவரும் வழக்கறிஞர் சிலம்பரசன், ‘‘சுதந்திர இந்தியாவுக்கு முன்பிருந்தே இந்தக் கிராமம் இருக்கிறது. இப்போதுவரை அங்கு முதல் பட்டதாரி உருவாகவில்லை. அந்த மக்கள் கல்வியைத் தொடர முடியாததற்கு, சாதிச் சான்றிதழ் இல்லை என்பது முக்கிய காரணம். இங்கே ஆறு பசுமை வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதுவரை இரண்டு வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப் பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து, அரசியல் கட்சியினர் வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். பிறகு, அவர்கள் எட்டிகூடப் பார்க்க மாட்டார்கள். இனியாவது, அரசு இயந்திரம் இந்த மக்களின் குரல்களைக் கேட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

இந்த மக்களின் குறைகளை, அரசு நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கினோம்.

திருமலையம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் குமார், ‘‘நான் இங்கு பணியில் சேர்ந்து இரண்டு மாதம்தான் ஆகிறது. பேரூராட்சி தரப்பில் என்ன செய்ய முடியுமோ, அவை அத்தனையும் செய்து கொடுத்துள்ளோம். கழிவறை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

மின்சார வசதியில்லை... ‘சாதிச் சான்றிதழ்’ கிடைக்கவில்லை!

மின்சாரத் துறையின் கோவை தெற்கு கண்காணிப்பு அலுவலர் ஸ்டாலின் பாபு, ‘‘தெருவிளக்கு இருக்கும்பட்சத்தில் மின்சாரம் கொடுப்பது கடினமான காரியமல்ல. இதற்கென அரசு சில வழிமுறைகளை வைத்திருக்கிறது. அவையெல்லாம் சரியாக இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து, மின்சாரம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ-வான எட்டிமடை சண்முகம் (அ.தி.மு.க), ‘‘அந்தப் பகுதிக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால், நீங்கள் சொல்லும் பிரச்னையை என்னிடம் யாரும் சொன்னதில்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன். என்னவென்று விசாரிக்கிறேன்’’ என்றார்.

கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி, ‘‘முதல் நடவடிக்கையாக அடுத்த 15 நாள்களுக்குள் அந்தக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ரேஷன் கார்டு மற்றும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். சங்கவி தன் கல்வியைத் தொடர அரசு உதவி செய்யும். சங்கவிக்கு மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் அங்கு நேரடியாக ஆய்வுசெய்து, அந்த மக்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் நிறைவேற்றித் தருவோம்’’ என்றார்.

அந்த மக்களின் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பரவட்டும்!