
விற்பனையாகாத வீடுகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இவற்றை விற்க மத்திய அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது!
நாடு முழுக்க வீடுகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய வீடுகளை விற்பனை செய்யும் பில்டர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரிச்சலுகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்தச் சலுகையைப் பற்றி கோவைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்க, விரிவாக எடுத்துச் சொன்னார்.
வருமான வரி சட்ட விதிமுறைகள் தளர்வு...
‘‘வருமான வரிச்சட்டம் பிரிவு 43 சிஏ மற்றும் வருமான வரிச்சட்டம் 56(2) (எக்ஸ்) ஆகியவற்றின்படி இந்தச் வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.2 கோடி வரையிலான மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனையை வழிகாட்டி மதிப்புக்கு (Guideline Value) 20% குறைவான விலையில் விற்பனை செய்ய அனுமதித்து ரியல் எஸ்டேட் துறையினர், வீடு வாங்குவோர் வரிச்சலுகை பெறும் வகையில் வருமான வரி சட்ட விதிமுறைகள் தளர்த்தப்படுகின்றன.

அரசின் வழிகாட்டு மதிப்புக்கும், விற்பனை விலைக்கும் இடையே ஏற்கெனவே இருந்துவந்த 5% வித்தியாசம் என்பது 10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு வரிச் சலுகை அனுமதிக்கப்பட்டு வந்தது. தற்போது ரூ.2 கோடி வரை மதிப்புள்ள வீடுகளின் முதல் விற்பனைக்கு இந்த வித்தியாசம் 20% அளவுக்குத் தளர்த்தப்படுகிறது. இது 2021, ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.
வருமான வரி இல்லை...
ஓர் உதாரணத்துடன் இதைப் பார்ப்போம். ஒரு பில்டரிடமிருந்து ஒருவர் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அரசு வழிகாட்டி மதிப்பு ரூ.60 லட்சமாக உள்ளது. வருமான வரிச் சட்டப்படி, உண்மையில் வாங்கிய விலைக்கும் அரசு வழிகாட்டி மதிப்புக்கும் இடையிலான வித்தியாசம் 10 சதவிகிதத்தைத் தாண்டும்போது, வீட்டை விற்கும் டெவலப்பர் ரூ.60 லட்சத்துக்கு விற்றதாகக் கணக்கிடப்பட்டு, அதற்கு அவர் வரி கட்ட வேண்டும். அதாவது, அவர் பெறாத ரூ.10 லட்சம் லாபமாகக் கணக்கிடப்படும். அதற்கு அவர் வரி கட்ட வேண்டும்.

இதேபோல், வீட்டை வாங்குபவர், இந்த வீட்டை வாங்கியது மூலம் அதாவது, ரூ.60 லட்சத்துக்குப் பதில் ரூ.50 லட்சத்துக்கு வாங்கிய தாகக் கருதப்பட்டு, அவருக்கு ரூ.10 லட்சம் அவரின் இதர வருமானமாகக் கணக்கிடப்பட்டு, வரி விதிக்கப்பட்டது. இப்போது இந்த வித்தியாசம் 20 சதவிகிதத்துக்குள் இருந்தால் வருமான வரி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலே காட்டப்பட்ட உதாரணத்தில், உண்மையான விற்பனை விலைக்கும் அரசு வழிகாட்டி மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் 20 சதவிகிதத்துக்குள் அதாவது, 20 சதவிகிதமாக இருப்பதால் வரி கட்ட வேண்டியதில்லை” என்றார்.
வெறும் வாணவேடிக்கை அறிவிப்பு...
நிதி அமைச்சரின் இந்தச் சலுகை பில்டர்கள் மற்றும் வீடு வாங்குபவர்களுக்கு லாபமா என நவீன்ஸ் ஹவுசிங் நிறுவனத்தின் நிறுவனர் ஆர்.குமாரிடம் கேட்டோம். ‘‘இந்த அறிவிப்பு வெறும் வாணவேடிக்கையாக உள்ளது. பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுக்க லட்சக்கணக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ளன. விலை வீழ்ச்சி என்பது மனைகளைப் பொறுத்தவரை 30%, 40% என்கிற அளவிலும், அடுக்குமாடிக் குடியிருப்பு களைப் பொறுத்தவரை, பில்டர்கள் 10% - 15% வரையும் குறைத்தும் விற்பனை செய்கிறார்கள்.
எந்தப் பலனும் இல்லை...
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், முதல் விற்பனை என்கிறபோது யு.டி.எஸ் எவ்வளவு சதுர அடியோ அதற்கான அரசு வழிகாட்டி மதிப்புக்குத்தான் வீடுகள் பதிவு செய்யப்படு கின்றன. அரசு வழிகாட்டி மதிப்பு, விற்பனை விலை இரண்டில் எது அதிகமோ, அதில் 11% மனையின் யு.டி.எஸ்-க்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணமாகக் கட்ட வேண்டும். எனவே, நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பால் பில்டருக்கோ, தமிழ்நாட்டில் வீட்டை வாங்குபவருக்கோ எந்தப் பலனும் இல்லை. குஜராத், மகராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் ஃபிளாட்டின் முழு மதிப்புக்கும் வழிகாட்டி போடப்பட்டு, அது பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. அங்கே வித்தியாசம் 20% அளவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் அங்குள்ளவர்களுக்கு இந்த அனுமானிக்கப் பட்ட வருமான வரி மிச்சம் ஆக வாய்ப்பு இருக்கிறது” என்றவரிடம், ‘தமிழ்நாட்டில் மனையின் விலை அரசு வழிகாட்டி மதிப்பை விடக் குறைந்து, குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டால் மத்திய அரசின் இந்தச் சலுகையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது’ எனக் கேட்டோம்.
மனையை வாங்கினால் பலன்...
‘‘மனையை மட்டும் வாங்கினால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு பயன் இல்லை. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் விலை ரூ.50 லட்சம். இந்த ரூ.50 லட்சத்தில் ரூ.30 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்பின் விலை எனவும் ரூ.20 லட்சம் மனையின் விலை எனவும் மனையின் அரசு வழிகாட்டி மதிப்பும் ரூ.20 லட்சம் என வைத்துக் கொள்வோம். இப்போது பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொரானா பாதிப்பால் மனையின் விலை ரூ.16 லட்சத்துக்கு இறங்கிவிட்டது. தேவை குறைந்திருப்பதால், இந்த ஃபிளாட்டை பில்டர் ரூ.45 லட்சத்துக்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது ஒப்பந்தப் பத்திரம் மற்றும் கிரயப் பத்திரத்தில் நிலத்தின் விலை ரூ.16 லட்சம் எனக் குறிப்பிட்டால் மட்டுமே, அரசு வழிகாட்டி மதிப்புக்கும் (ரூ.20 லட்சம்) உண்மை விற்பனைக்கும் உள்ள வித்தியாசம் 20 சதவிகி தத்துக்குள் இருக்கிறது என எடுத்துக் கொள்ளப் பட்டு விற்பவர் மற்றும் வாங்குபவருக்கு விதிக்கப்படும் அனுமான வரி இருக்காது. ஆனால், நடைமுறையில் மனையின் விலை ரூ.20 லட்சம் என்றே குறிப்பிட்டு வீடு கட்டிய மதிப்பு ரூ.25 லட்சம் என்றே போட்டுவிடுகிறோம். இதனால் தமிழ்நாட்டில் மத்திய நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பால் எந்தச் சலுகையும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்” என்று முடித்தார்.