சமூகம்
Published:Updated:

வட மாநில பக்தர்களுக்கு பேருந்து ஏற்பாடு... பா.ஜ.க நிர்வாகி மீது பாயும் புகார்!

பேருந்து
பிரீமியம் ஸ்டோரி
News
பேருந்து

இவர்கள் ஒவ்வொரு பேருந் துக்கும் 2.75 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம்.

ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்துவந்த வெளிமாநில மக்களை, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதை சிலர் சேவையாகச் செய்கின்றனர்.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிமாநில மக்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த விவகாரத்தில், பா.ஜ.க நிர்வாகி மீது புகார் பாய்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமியைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால், அவர்கள் இங்கே சிக்கிக்கொண்டனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அவர்களை பேருந்துகள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பியது மாவட்ட நிர்வாகம். இதில்தான் பா.ஜ.க நிர்வாகி மீது புகார்.

செந்தில் - முனீஸ்குமார் - முரளிதரன்
செந்தில் - முனீஸ்குமார் - முரளிதரன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரான சி.ஆர்.செந்தில், ‘‘உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 173 பக்தர்கள் மே 9-ம் தேதி, ஆறு பேருந்துகளில் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்கான பேருந்துகளை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் முரளிதரன் நடத்திவரும் பாரத் டிராவல்ஸ் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. 5,000 முதல் 6,000 கி.மீ தூரத்துக்கு ஒரு பேருந்துக்கான அதிகபட்ச கட்டணமே 1.90 லட்சம் ரூபாய்தான். ஆனால், இவர்கள் ஒவ்வொரு பேருந் துக்கும் 2.75 லட்சம் ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். இதில் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம். இதற்கு அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தியிருந்தால் அரசு பணம் விரயமாகியிருக்காது’’ என்றார்.

ராமேஸ்வரத்திலிருந்து சில பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்து ஏற்பாடு செய்து வட மாநிலங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்துகொடுத்த கணேஷ் டிராவல்ஸ் உரிமையாளரான முனீஸ்குமார், ‘‘எங்களை நாடிய வட மாநில பக்தர்களுக்கு 1.90 லட்சம் ரூபாய் கட்டணத்தில் தான் பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தோம். சுங்கச்சாவடிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் எங்களைச் சார்ந்தது. இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் டிராவல்ஸ் என்பதற்காக அரசு அதிக தொகை நிர்ணயித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களிடம் கொட்டேஷன் கேட்டிருந்தால் குறைவான தொகைக்கு பேருந்துகள் கிடைத்திருக்கும்’’ என்றார்.

இதுகுறித்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் முரளிதரனிடம் பேசியபோது, ‘‘வட மாநில பக்தர்களை எங்கள் டிராவல்ஸ் மூலம் அனுப்பி வைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களிடம் பேசி பேருந்துகளுக்கான தற்காலிக பர்மிட் வாங்கிக் கொடுத்த வேலையை மட்டும்தான் நான் செய்தேன். மற்றபடி அந்தந்த பஸ் கம்பெனிக்காரர்களே கலெக்டரிடம் வாடகையை நேரடியாகப் பேசிக்கொண்டனர். பொறாமை யின் காரணமாக சிலர் என்மீது பழி சுமத்துகின்றனர்’’ என்றார்.

வட மாநில பக்தர்களுக்கு பேருந்து ஏற்பாடு... பா.ஜ.க நிர்வாகி 
மீது பாயும் புகார்!

ராமேஸ்வரம் வட்டாட்சியர் அப்துல் ஜப்பாரிடம் பேசியபோது, ‘‘பேருந்துகளுக்கான கட்டணத்தை நிர்வாகம் இன்னும் வழங்கவில்லை. அவசர தேவை கருதி பேருந்துகள் உடனடியாக ஏற்பாடு செய்து அனுப்பப்பட்டது. வெளிநபர்கள் சொல்வதுபோல் கூடுதல் தொகை நிச்சயம் வழங்கப்படாது’’ என்றார்.