அரசியல்
அலசல்
Published:Updated:

தமிழகத்தில் அதிகரிக்கின்றனவா வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள்?

வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள்?

கலவரம்... கஞ்சா கடத்தல்... திருட்டு... பாலியல் வழக்குகள்:

சம்பவம் 1: கலவரம்...

ஏப்ரல் 7: ஈரோடு மொடக்குறிச்சியிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில், வட மாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையொட்டி, போராட்டம் நடத்திய வட மாநில இளைஞர்கள் அந்நிறுவனத்தின் அலுவலகங்களை அடித்து நொறுக்கினர். மேலும், பேச்சுவார்த்தைக்கு வந்த பெண் காவலர்கள் உட்பட ஏழுக்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் கடுமையாகத் தாக்கியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது!

சம்பவம் 2: திருட்டு...

மார்ச் 4: திருப்பூர், யூனியன் மில் ரோடு பகுதி நகைக்கடையின் இரும்புக் கதவுகளை உடைத்து, 375 பவுன் நகை, 9 கிலோ வெள்ளி, 25 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்தக் கொள்ளையர்களைப் பிடிப்பதற்காக, ஐந்து தனிப்படைகளை அமைத்துத் தேடியது தமிழக காவல்துறை. திருப்பூர் ரயில் நிலைய சிசிடிவி கேமராவில், அந்தக் கும்பல் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறித் தப்பிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பீகார் செல்லும் வழியிலுள்ள பல்லார்ஷா ரயில் நிலையத்தில் வைத்து, பீகாரைச் சேர்ந்த அந்த நான்கு கொள்ளையர்களையும் ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்!

சம்பவம் 3: கஞ்சா விற்பனை...

வட மாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலமாக கஞ்சா கடத்திவந்து, அவற்றைத் தமிழகத்திலுள்ள முக்கியத் தொழில் நகரங்களைக் குறிவைத்து விற்பனை செய்யும் போக்கு அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதத்தில் மட்டுமே பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நாமக்கல், பள்ளிபாளையம் அருகே இயங்கிவரும் 50-க்கும் மேற்பட்ட நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களைக் குறிவைத்து, கஞ்சா விற்பனை செய்துவந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டிருக் கிறார்கள். சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த வட மாநில இளைஞர்களைக் கைதுசெய்த போலீஸார் அவர்களிடமிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய 10 கிலோ கஞ்சாவைக் கைப்பற்றினர். இது தவிர, ஆவடியில் மூன்று மேற்கு வங்க இளைஞர்கள், தரமணியில் இரண்டு திரிபுரா இளைஞர்கள் என அடுத்தடுத்து கஞ்சா விற்பனை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டனர்.

தமிழக காவல்துறையின் `ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால், கடந்த மார்ச் 29-ம் தேதியில் மட்டும், கோவை மாவட்டப் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த சுமார் 32 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தவர்கள்!

தமிழகத்தில் அதிகரிக்கின்றனவா வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள்?


சம்பவம் 4: பாலியல் தொல்லை...

கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னை சேத்துப்பட்டு மேத்தா மருத்துவமனையில் 9 வயது சிறுமி கணையச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தாய் மருந்து வாங்கச் சென்ற நேரம் பார்த்து, சிறுமியிடம் ஒரு மர்மநபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். சிறுமி சத்தமிட்டு அலறவும், உடனடியாக வெளியேறியிருக்கிறார் அந்த நபர். திரும்பி வந்த தாயிடம் நடந்ததைக் கூறி சிறுமி அழவே, தாய் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினார். விசாரணையின் முடிவில், மருத்துவமனையில் உணவக ஊழியராகப் பணியாற்றும், உ.பி மாநில இளைஞர் போக்சோவில் கைதுசெய்யப்பட்டார்.

இதேபோல, சென்னை ஆதம்பாக்கத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு, திருப்பூர் ஊத்துக்குளியில் 9 வயதுச் சிறுமிக்கு, ஈரோடு பெருந்துறையில் 10 வயது சிறுமிக்கு, கோவை சுந்தராபுரத்தில் 12 வயதுச் சிறுமிக்கு என வட மாநில இளைஞர்களால் ஏராளமான பாலியல் தொந்தரவுகளும், வன்கொடுமைச் சம்பவங்களும் நடந்துள்ளன. ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., பீகார் எனப் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குற்றங்களில் சிக்கி போக்சோவில் கைதாகியிருக்கிறார்கள்.

கடந்த ஆண்டில் சென்னை உட்பட தமிழகம் முழுக்க ஏ.டி.எம் மையங்களில் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. கோவையில் போலீஸ் ஒருவரை ஜார்க்கண்ட் இளைஞர் போதையில் பிளேடால் கீறியது, திருப்பூர் பல்லடத்தில் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து நடத்துநரை அடித்தது, திருவண்ணாமலை ஆரணியில் ப்ளஸ் ஒன் பள்ளி மாணவியைக் கடத்திச்சென்றது, திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஐந்து வீடுகளில் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்தது, அவிநாசி பனியன் கம்பெனியில் தமிழக இளைஞரைக் கும்பலாகத் தாக்கியது, சேலம் அரசுப்பள்ளி ஆசிரியரிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது, ஈரோடு, சேலம், கோவை வழியாக ஓடும் ரயில்களில் ஜன்னலோரம் பயணிக்கும் பெண்களைக் குறிவைத்து செயின் பறிப்பது என வட மாநிலத்தவரின் குற்றப் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. இவை தவிர, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் 300 வட மாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பது பள்ளி கல்வித்துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கின்றனவா வட மாநிலத்தவர்களின் குற்றச் செயல்கள்?

“உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்!”

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை, உடல் உழைப்பு சார்ந்த பணிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாகத் தேவைப் படுகிறார்கள். ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஹோட்டல் தொழில், மெட்ரோ, மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் எனப் பலவற்றுக்கு வட மாநிலத் தொழிலாளர்களின் பங்கு அவசியமாக இருக்கிறது. அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அப்படி “வேலைக்காக வருபவர்களை முறைப்படுத்தாமல், கண்காணிக்காமல் விடுவதால்தான் இது போன்ற பாதிப்புகள் அதிகரிக்கின்றன” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

“வேறு மாநிலத்திலிருந்து வருபவர்கள் புரியும் குற்றச்செயல்களைத் தடுக்க வேண்டுமெனில், தமிழ்நாட்டுக்குள் பணிக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவுசெய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச்சீட்டு (ILP - Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்த வேண்டும், அதற்கு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தனிச் சட்டம் இயற்ற வேண்டும்” என சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

“தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிப்போவார்கள்!”

``வேலைக்காகத் தமிழகத்துக்கு வரும் வட மாநிலத்தவர்களில் பெரும்பாலானோர், வேலை முடிந்தவுடன் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்வதில்லை. மாறாக இங்கேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்று என அனைத்தையும் பெற்று நிரந்தரமாகத் தமிழ்நாட்டிலேயே குடியேறிவிடுகிறார்கள். அப்படியானவர்களின் எண்ணிக்கை தற்போது 50 லட்சத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதனால், மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், பொருளாதாரம் என அனைத்தும் பாதிப்புக்குள்ளாகின்றன. இதை தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. ஓட்டுரிமை பெற்ற வட இந்தியர்கள் ஒருபோதும் தமிழ்நாட்டிலுள்ள மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இந்த நிலை நீடித்தால், தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் சிறுபான்மையினராக மாறிப்போவார்கள்!” என அச்சம் தெரிவிக்கிறார் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன்.

தொடர்ந்து பேசியவர், ``ஹரியானா, குஜராத், கர்நாடகா மாநிலங்களைப்போல தனியார், அரசுத் துறைகளில் மண்ணின் மக்களுக்கே 90% வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், தி.மு.க தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, 75% வேலைவாய்ப்பையாவது தமிழர்களுக்கு வழங்க, தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும். தமிழகத்துக்கு வரும் வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்து, கண்காணிக்க உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்” என வலியுறுத்தினார்.

வேல்முருகன், பெ. மணியரசன், சி.வி.கணேசன்
வேல்முருகன், பெ. மணியரசன், சி.வி.கணேசன்

“வட மாநிலத்தவரைக் கண்காணிக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்!”

“வட மாநிலத்தவர்களால் சட்டம்-ஒழுங்கு மட்டுமல்ல, எல்லாமே பாதிக்கப்பட்டுவருகின்றன. ஓட்டுரிமை வாங்கி அரசியலைக் கையிலெடுக்கிறார்கள். ரேஷன் அட்டை வாங்கி உணவுப்பொருள் மானியங்களில் கைவைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு பி.சி., எம்.பி.சி., பிரிவுகளில் சாதிச் சான்றிதழ் வாங்கி கல்வியைக் கையகப்படுத்துகிறார்கள். இவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களைக் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர் களைக் கணக்கெடுத்து, புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வேண்டும். பெருநகரங்களில் குவிந்து காணப்படுகிற வட மாநிலத்தவர்களைக் கண்காணிக்க, காவல்துறையில் தனிப்பிரிவை அமைக்க வேண்டும். வட மாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்று ஆகியவை வழங்குவதை அரசு கைவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார் த.வா.க தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன்.

“முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்!”

இந்தக் குற்றச்சாட்டுகள், கோரிக்கைகள் குறித்து, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனிடம் பேசினோம், ``தமிழகத்தில் வெளிமாநில-புலம்பெயர் தொழிலாளர்கள், எத்தனை பேர், எந்தெந்த நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்ற கணக்கெடுப்பு நடத்தவும், அவர்களைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டிருக்கிறோம். மேலும், அதிகமான குற்றச் செயல்கள் நடைபெறும் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறை என்பது வரவேற்கக்கூடியதுதான். நிச்சயம் இந்தக் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று, அவரது அனுமதியுடன் தமிழகம் வரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றார்.

அரசு உடனடியாகக் கவனம் செலுத்தவேண்டிய பிரச்னை இது!