அரசியல்
அலசல்
Published:Updated:

ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?

வடகொரியா
பிரீமியம் ஸ்டோரி
News
வடகொரியா

ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டவுடன் ஜப்பானின் ஹோன்ஷு தீவிலுள்ள சில மாகாணங்களில் சைரன் ஒலித்தன.

வடகொரியா - கடுமையான சட்ட திட்டங்கள்கொண்ட ஒரு மர்ம தேசம். `வடகொரியாவின் தந்தை கிம் இல் சங்-கின் நினைவுதினத்தன்று யாரும் சிரிக்கக் கூடாது’, `ஆண்கள் 10 விதமான ஹேர் ஸ்டைல் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்; அதிலும் அதிபர் கிம் ஜாங் உன்னின் ஹேர்ஸ்டைலை யாரும் வைக்கவே கூடாது’, `அதிபர் லெதர் கோட் அணிந்து கொள்வதால், பொதுமக்கள் யாரும் அதை அணியக் கூடாது’ எனப் பல விசித்திர சட்டங்கள் வடகொரியாவில் இருக்கின்றன. இந்தச் சட்டங்களைக் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தாலும், இவற்றை மீறும்போது கொடுக்கப்படும் தண்டனைகள் மிகக் கொடுமையானவை. இப்படிக் கடுமையான தண்டனைகள் மூலம் உள்நாட்டு மக்களை அச்சுறுத்தும் வடகொரியா, அண்டை நாடுகளையும் ஏவுகணை சோதனைகள் மூலம் அச்சுறுத்திவருகிறது. உலக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில், கடந்த 10 நாள்களில், ஐந்து ஏவுகணைகளை விண்ணில் ஏவியிருக்கிறது. வடகொரியாவின் திட்டம்தான் என்ன?

ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?

ஜப்பான்மீது ஏவுகணை!

அக்டோபர் 4-ம் தேதி அன்று, ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் பாலிஸ்டிக் ரக ஏவுகணை ஒன்றை வானில் செலுத்தியிருக்கிறது வடகொரியா. வடகொரிய நேரத்துக்குச் சரியாகக் காலை 7:23 மணி அளவில், சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து `Hwasong - 17’ என்ற பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டிருக்கிறது. ஜப்பானின் வடக்கிலுள்ள ஹோன்ஷு தீவைத் தாண்டி பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது அந்த ஏவுகணை. 2017-க்குப் பிறகு, ஜப்பானுக்கு மேலே வடகொரியா செலுத்திய முதல் ஏவுகணை இதுதான்.

ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டவுடன் ஜப்பானின் ஹோன்ஷு தீவிலுள்ள சில மாகாணங்களில் சைரன் ஒலித்தன. இதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடினர். சில மாகாணங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதுடன், `மக்கள் வெளியே வர வேண்டாம்; ஏவுகணையிலிருந்து சில பாகங்கள் பிரிந்து விழும் அபாயம் இருக்கிறது’ என்றும் ஜப்பான் அரசு எச்சரித்தது.

2017-ம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த வாரம்தான் ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கடற்படை ஒத்திகையில் கூட்டாக ஈடுபட்டன. இதனால் ஆத்திரமடைந்த வடகொரிய அதிபர் கிம், எந்தவித முன்னறிவிப்புமின்றி ஜப்பானுக்கு மேலே செல்லும் வகையில் ஏவுகணைச் சோதனையை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது. 1,000 கி.மீ தூர உயரத்தில் பறந்த இந்த ஏவுகணையின் வேகம், மேக் 17 (Mach 17) என்கின்றனர். `மேக் 1’ என்றால் ஒலியின் வேகம். ஒலியின் வேகத்தைவிட 17 மடங்கு வேகமாகப் பாய்ந்திருக்கிறது இந்த ஏவுகணை.

ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?

சுமார் 4,500 கி.மீ தூரம் பயணித்த பிறகே இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுந்திருக்கிறது. இதன் மூலம் வடகொரியாவிலிருந்து 3,300 கி.மீ தூரத்திலுள்ள அமெரிக்கத் தீவான குவாம் தீவையும் தங்களால் தாக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த ஏவுகணைச் சோதனைக்குக் கடும் கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து மஞ்சள் கடலில், கூட்டுக் குண்டுமழை ஒத்திகையில் ஈடுபட்டன. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஜப்பானுக்கு என்ன பாதிப்பு?

எந்த பாதிப்புமில்லாமல் இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுந்துவிட்டதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இருந்தும் இந்த ஏவுகணைச் சோதனை தோல்வியில் முடிந்திருந்தால், ஜப்பானின் ஹோன்ஷு தீவிலோ அல்லது வடகொரியாவிலோகூட விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், குறிவைக்கப்பட்ட தூரத்தை அடையாமல் கொஞ்சம் முன்னரே விழுந்திருந்தால், ஜப்பானின் டோஹோகு மாகாணத்தில் வசிக்கும் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அணு ஆயுத சோதனை என்பதால் தலைமுறை தலைமுறையாக இந்த பாதிப்புகள் மக்களை வாட்டியெடுத்திருக்கும்.

ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?
ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?

அணு ஆயுத சோதனைகள் ஏன்?

தங்களைச் சக்திவாய்ந்த நாடாக எதிரி நாடுகளிடம் காட்டிக்கொள்ளவே கிம் இப்படியான சோதனைகளை மேற்கொள்வதாகச் சொல்லப்படுகிறது. ``மேற்குலக நாடுகள் வடகொரியாமீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இதன் பின்னணியில் பெரும் பங்காற்றியிருக்கின்றன. எனவே, அவர்களை அச்சுறுத்தவே கிம் இந்தச் சோதனைகளை மேற்கொண்டுவருகிறார். ஆனால், இந்தச் சோதனைகளின்போது தப்பித் தவறி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும்’’ என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். சமீபத்தில் வடகொரிய நாடாளுமன்றத்தில், `எதிரி நாடுகளால் வடகொரியாவுக்கு ஆபத்து ஏற்படும் சூழலில், எந்தவித முன் அனுமதியுமின்றி தன்னிச்சையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்திக்கொள்ளலாம்’ என்று அபாயகரமான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார் கிம். ஐ.நா தீர்மானத்தை மீறிக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டம், பேரழிவை ஏற்படுத்துமென உலக நாடுகள் எச்சரித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கு மேல் ஏவுகணை... கொரிய தீபகற்பத்தில் பதற்றம்... வடகொரியாவின் திட்டம் என்ன?

கடந்த ஆண்டு இறுதியில், `நாட்டில் உணவுப் பஞ்சம் நிலவுவதால், 2025 வரை மக்கள் அளவாகவே சாப்பிட வேண்டும்’ என்று கட்டளையிட்டு அதிர்ச்சி தந்தார் கிம். அணு ஆயுதங்களுக்காக அளவில்லாமல் செலவிடுவதுதான், இந்த உணவுத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்று அந்தச் சமயத்தில் சொல்லப்பட்டது. தன்னைச் சக்திவாய்ந்த தலைவனாகக் காட்டிக்கொள்ள, மக்களைப் பட்டினியில் ஆழ்த்தும் ஒருவன், ஒருபோதும் சிறந்த தலைவனாக இருக்க முடியாது.

கிம்முக்குப் பிறகு, வடகொரியாவின் முதல் பெண் அதிபராக அவரின் தங்கை கிம் யோ ஜாங் பொறுப்பேற்பார் என்ற செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன. அப்படி, அவர் அதிபரானாலாவது வடகொரிய மக்களுக்கு விடுதலை கிடைக்குமா... விடியல் பிறக்குமா... உலக அமைதிக்கு அது வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!