அலசல்
Published:Updated:

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

பெண்கள் 18 விதமான ஹேர் ஸ்டைலும், ஆண்கள் 10 விதமான ஹேர் ஸ்டைலும் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மர்ம தேசமான வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள உலக மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அந்த மர்ம தேசத்தின் அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்று, 2021 டிசம்பரோடு 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த 10 ஆண்டுகளில் வித்தியாசமான, விநோதமான, விசித்திரமான பல உத்தரவுகளைப் பிறப்பித்து உலக மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்தார் கிம். அப்படியான வடகொரியாவின் `ஷாக்’ சட்ட திட்டங்களைத்தான் இங்கே தொகுத்திருக்கிறோம்!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

பெண்கள் 18 விதமான ஹேர் ஸ்டைலும், ஆண்கள் 10 விதமான ஹேர் ஸ்டைலும் மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும், யாராவது அதிபர் கிம் ஜாங் உன்னின் ஹேர் ஸ்டைலை வைத்துக்கொண்டால் நிச்சயம் சிறைதான்!

2019 முதல் லெதர் கோட்டுகளை அணியத் தொடங்கினார் கிம். மக்கள் பலரும் அதைப் பின்பற்றவே கடுப்பான கிம், பொதுமக்கள் லெதர் கோட் அணியத் தடைவிதித்தார்!

அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜொங் இல்-லின் 10-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, 10 நாள்களுக்கு யாரும் சிரிக்கக் கூடாது, ஷாப்பிங் செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தார் கிம்!

வடகொரியாவின் தந்தையும், கிம்-மின் தாத்தாவுமான கிம் இல் சங்-கின் நினைவுதினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் ஜூலை 8-ம் தேதியன்று யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கேளிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கெனவே சட்டம் இருக்கிறது!

அண்மையில், `நாட்டில் உணவுப் பஞ்சம் நிலவுவதால், 2025 வரை மக்கள் அளவாகவே சாப்பிட வேண்டும்’ என்று உணவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து அதிர்ச்சி தந்தார் கிம்!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

வடகொரியத் தலைநகர் பியொங்யாங்-கில் (Pyongyang) வசதி வாய்ப்பு படைத்தவர்களும், செல்வாக்கு பெற்றவர்களும் மட்டுமே வசிக்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, யாராவது தலைநகரில் குடியேற விரும்பினால், அவர்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டும்!

மேற்கத்திய கலாசாரத்தின் அடையாளமாக பைபிள் திகழ்வதால், வடகொரியாவில் யாரும் அதை வைத்திருக்கக் கூடாது. சுற்றுலாப்பயணிகள்கூட பைபிள் வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது!

வடகொரியாவில், 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிப்பது கட்டாயம். ஆனால் வாக்குச்சீட்டில், கிம் ஜாங் உன்னின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும். ‘ஜனநாயகத்தை நிலைநாட்டி’, 100 சதவிகித வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துவருகிறார் கிம்!

உள்நாட்டு ரகசியங்கள் கசிந்துவிடும் என்பதற்காக, சர்வதேச அழைப்புகள் மேற்கொள்வதற்கு வடகொரியாவில் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் அழைப்புகள் கண்காணிக்கப்படும். வெளிநாட்டு அழைப்புகள் என்றால் கேட்கவே வேண்டாம். சீன போன்களைப் பயன்படுத்தி, சுற்றிவளைத்து வெளிநாட்டு கால் செய்தாலும் பிடித்துவிடுவார்கள்!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளைக் கண்காணிக்க, வடகொரிய அரசு தனிப்படை ஒன்றை வைத்திருக்கிறது. குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். உள்ளூர் ஆட்களுடன் தேவையின்றி பேசினால், சுற்றுலாப்பயணிகள் கைதுசெய்யப்படுவார்கள்!

வடகொரியாவின் முக்கிய அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே இன்டர்நெட் வசதிகள் கொடுக்கப்படும். மற்றவர்களுக்குக் குறிப்பிட்ட இணையதளங்களை மட்டுமே பார்க்கும் வண்ணம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இன்டர்நெட் வசதி வழங்கப்படுகிறது!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

`புளூ ஜீன்’ என்பது முதலாளித்துவத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் காட்டுவதால், அதை யாரும் அணியக் கூடாது. மீறி அணிந்தால்... அரெஸ்ட்!

வடகொரியாவில் நான்கு தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே உள்ளன. அந்த சேனல்களில் அரசு அனுமதியளிப்பவை மட்டுமே ஒளிபரப்பப்படும்!

வெளிநாட்டுப் படங்கள், பாடல்கள் பார்ப்பது வடகொரியாவில் பெருங்குற்றம். அதிலும் குறிப்பாக, தென்கொரியா, அமெரிக்க நாடுகளின் படங்களைப் பார்த்தால், 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள்!

‘கிம்’ தேசத்து விசித்திரங்கள்!

குடும்பத்தில் ஒருவர் தவறு செய்தாலும், `மூன்று தலைமுறை விதி’ என்ற சட்டப் பிரிவின்கீழ் குற்றம் செய்தவரின் பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள் என மூன்று தலைமுறையினரும் சிறையிலடைக்கப் படுவார்கள்!