பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாவின் கார் அந்த மாளிகை நோக்கிப் புறப்பட்டது. அவரோடு கலைஞர், நாவலர், அன்பில் போன்ற தம்பிகளும் உடன்வந்தனர். 1967 தேர்தலில் வென்ற அண்ணா தன் அமைச்சரவையை யாருக்கு சமர்ப்பித்தாரோ அவரைப் பார்க்கத்தான் இந்தப் பயணம். காலை பத்து மணிக்கு கவர்னரைப் பார்த்துவிட்டு நேராக பெரியாரைப் பார்க்கத்தான் அண்ணா வந்தார்.
பெரியாருக்குக் கூச்சம். நேற்றுவரை அவர்களை 'கண்ணீர்த் துளிகள்' என்றோமே என்ற சங்கடம். ஆனால் அரசியலை மீறிய பாசம் அவரை ஆட்கொண்டது. அண்ணாவின் மேதைமையும் நன்றியும் வெளிப்பட்ட நாள் 1967, மார்ச் 2. இன்று நாம் பேசுகிற 'சமூகநீதி + பொருளாதார வளர்ச்சி = திராவிட மாடல்' என்ற கோட்பாட்டுக்கு அடித்தளம் அமைத்த நாள் அதுதான். இன்றுவரை தமிழ்நாட்டின் பாதையாய் உலகம் கவனிக்கும் அந்தத் திராவிடப்பாதையை அண்ணாவும் பெரியாரும் தொடங்கிய இடம் திருச்சி புத்தூரில் உள்ள பெரியார் மாளிகைதான். பெரியாரின் முதல் தலைமைச்செயலகம் அது. மாதத்தில் பல நாள்கள் பெரியார் தங்கிப் பணிசெய்த இடம் அது.

“அவரே பார்த்துப் பார்த்துக் கட்டியது” என்ற ஆசிரியர் வீரமணியின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. இந்த இடத்தை அய்யா எப்போது வாங்கினார் என்ற நம் கேள்வியில் உள்ள மகிழ்ச்சியைப் புரிந்துகொண்ட அவர் இந்த மாளிகை அமைந்துள்ள இடத்தின் பத்திரத்தையே நமக்குக் காட்டினார். 1950ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் நாள், ‘திராவிட தன்மான பிரசார’ இயக்கத்தின் பெயருக்கு இந்த இடத்தை ரூபாய் ஐம்பது ஆயிரத்துக்கு டி.வி.அய்யாசாமி முதலியார் குடும்பத்தாரிடமிருந்து பெரியார் வாங்கியுள்ளார்.

வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து 1950 டிசம்பர் 3 அன்று பெரியார் இந்த இடத்தில்தான் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவ மாநாட்டை' நடத்தினார். அப்போது கட்டடங்கள் இல்லை. இந்த மாநாட்டின் தொடர்ச்சியே இந்திய அரசியல் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தவைத்து இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தது. இம்மாநாட்டின் தலைவராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் இரத்தினசாமி இருந்தார்.
மாளிகை வளாகத்தின் இடத்தை முழுமையாகப் பயன்படுத்த விரும்பிய பெரியார் 1955இல் ஆண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை இங்கு தொடங்கினார். பத்தாயிரம் ஆசிரியர்களாவது இந்த வளாகத்திலிருந்து உருவாகி தமிழ்நாடு முழுவதும் பணியமர்ந்ததாக ஆசிரியர் வீரமணி சொல்கிறார்.
அதுபோலவே, ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தைத் தனது துணைவியாரான நாகம்மையார் பெயரில் 1959லும் 1957இல் சாதாரண மக்கள் படிக்க ஒரு நடுநிலைப்பள்ளியையும் பெரியார் தொடங்கி நடத்தினார். இதைத் தொடர்ந்து பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை 1961இல் தொடங்கினார். அறிவு சார்ந்த தனது பல பணிகளையும் பெரியார் முதலில் தொடங்கிய இடம் என்ற பெருமை இந்தப் பெரியார் மாளிகைக்கு உண்டு.

நிறுவனங்கள் வளர்ந்தபிறகு பள்ளி வளாகங்கள் அனைத்தும், கே.கே நகர் செல்லும் வழியிலுள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்கு 1980 மார்ச் 8 ஆம் நாள் மாற்றப்பட்டன. நூறு ஏக்கர் பரப்புள்ள அந்த இடத்தை பெரியார் 1958இல் ஒரு ஏலத்தில் எடுத்தார்.
திராவிடர் கழகத்தால் மாதமிருமுறை இதழாக நடத்தப்படும் உண்மை இதழை பெரியார் இந்த மாளிகையிலிருந்தே தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு ஜனவரி 14இல் தொடங்கிய உண்மை இதழுக்கு ஆசிரியராகப் புலவர் இமயவரம்பனை பெரியார் நியமித்தார். அதை வெளியிடும் பெருமையை ஆசிரியர் வீரமணிக்குத் தந்தார். இயக்க நாளிதழான விடுதலையின் இரண்டாம் பதிப்பும் இங்கிருந்தே இயங்கியது. மொழிப்பற்று குறித்தெல்லாம் அதிகம் பேசாத பெரியார் தான் நடத்திய எல்லாப் பத்திரிகைகளுக்கும் குடியரசு, விடுதலை, உண்மை என்று நல்ல தமிழில் பெயர் வைத்துள்ளதை கவனிக்கவேண்டும்.

'மெட்ராஸ் டெரஸ்' என்று சொல்லப்படும் பழையகால ஓட்டு முறையை விரும்பி பெரியார் இந்த மாளிகையைக் கட்டியுள்ளார். நல்ல உயரமாக உள்ளது. இந்தக் கட்டடத்தின் வரைபடத்தை பெரியாரே வரைந்தாராம். நடுக்கூடத்தில் ஊஞ்சல் இருந்துள்ளது. ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபடியே பேசுவது அவருக்குப் பிடிக்குமாம். இந்த மாளிகையின் பழைமையை இன்றும் பாதுகாத்துவருகின்றனர். பெரியார் மாளிகை என்பது மக்கள் வைத்த பெயர். மாளிகைக்குரிய எந்த வசதியையும் பெரியார் செய்துகொள்ளவில்லை. அவருக்கான படுக்கை அறையே மிகச்சின்னதாக உள்ளது. அந்த அறையில் அவர் பயன்படுத்திய பொருள்கள் நம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதில் நாட்டு நடப்பைத் தெரிந்துகொள்ள அவர் பயன்படுத்திய GEC ரேடியோ நம்மை உணர்ச்சியில் தள்ளியது. எந்த அலைவரிசையிலும் சேராமல், தன் சுய அலைவரிசையை எல்லோரையும் கேட்கவைத்தவரல்லவா அவர்.
1949இல் பெரியாரை விட்டுப் பிரிந்த அண்ணா, 1967 மார்ச் 2இல் பெரியாரைத் திருச்சி மாளிகையில் சந்தித்தபோது அவர் முதல்வராகப் பதவி ஏற்கவில்லை. அண்ணா பதவி ஏற்றது 1967 மார்ச் 6 அன்றுதான். முதலமைச்சரான பின்னும் பெரியாரை அண்ணா சந்தித்தது திருச்சியின் இதே மாளிகையில்தான். இந்தச் சந்திப்பு பெரியாரின் 88ஆம் பிறந்தநாள் விழாவின்போது நடந்தது.
பெரியாருக்குச் சிலை இல்லாத பெரிய ஊர்களே இன்று தமிழ்நாட்டில் இல்லை. பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவருக்கு முதல் சிலை எழுப்பிய ஊர் திருச்சிதான். திருச்சி சந்தித்த பெரும் விழாவாக அது மாறியது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திற்கு எதிரே சிலை அமைக்கப்பட்டது. சிலை அமைப்பதில் டி.டி.வீரப்பா, நோபிள்பிரஸ் கோவிந்தராஜன் போன்றோர் பெரும்பங்காற்றினர். நடிகர் திலகம் சிவாஜியின் பங்களிப்பும் சிறப்பானது. காலையில் பெரியாரின் 88ஆம் பிறந்தநாள் பொதுக்கூட்டம். முதல்வர் அண்ணா தலைமை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு தந்தையை இரண்டாம் முறையாக மகன் சந்தித்த கொண்டாட்டமது. அண்ணா விருந்தினர் மாளிகையிலிருந்து நேராக பெரியார் மாளிகைக்கு வந்துவிட்டார். தன் முதல்வருக்கான காரில் ஏறாமல் பெரியாரின் வேனில் ஏறிக்கொண்டார். இருவரும் ஒன்றாக மெயின்காட்கேட்டுக்குச் சென்றார்கள். அங்கு நின்ற அலங்கார சாரட் வண்டியில் பெரியார்-அண்ணா இருவரும் அமர்ந்தனர். ஊர்வலங்களை அதிகம் விரும்பாத அண்ணாவும் ஆடம்பரங்களை ரசிக்காத பெரியாரும், தங்களின் மனசு மகிழ்ந்திருப்பதைப்போலவே மக்களின் மனங்களைப் புரிந்துகொண்டு ஊர்வலமாக வந்தனர். சாரட் வண்டியை அன்பில் தர்மலிங்கம் ஓட்டினார். அந்த அரசியல் அதிசயம் புறப்பட்ட இடம் திருச்சி பெரியார் மாளிகைதான்.

காலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாவின் பேச்சு அமர்க்களமாக அமைந்தது. மாலையில் பெரியாரின் முதல் சிலையை 1967 செப்டம்பர் 17ஆம் நாள், முன்னாள் முதல்வர் காமராசர் திறந்துவைத்தார். குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்றார். பெரியார் சிலைக்குக் கீழே பெரியாரே நிற்கும் அரிதான படமொன்று இன்றும் உண்டு. பெரியார் சிலை வைக்கப்பட்டபோது இப்போதுள்ள மத்தியப் பேருந்து நிலையம் இங்கு அமையவில்லை. மத்தியப் பேருந்து நிலையம் உள்ள இடத்தில்தான் அன்று அண்ணாவின் பொதுக்கூட்டம் நடந்தது. அங்குதான் பேருந்து நிலையம் அமையப்போகிறது என்று தெரிந்தே - சாதாரண மக்களுக்காகவே வாழ்ந்த பெரியாருக்கு எளிய மக்கள் கூடுகிற இடத்தில் முதல் சிலை அமைந்ததும் பொருத்தமாகவே படுகிறது.
'காவியும் கறுப்பும்' என்று அதிசயம்போல் பார்க்கப்பட்ட ஒரு நட்பு குன்றக்குடி அடிகளாருக்கும் பெரியாருக்கும். அது முகிழ்த்ததும் திருச்சியில்தான். 78வது பெரியாரின் பிறந்தநாளில் அடிகளாரின் பெரியாரைப்பற்றிய மதிப்பீடும் புகழுரையும் ஆன்மிக உலகில் புதிய திறப்பைப் பெரியாருக்குத் தந்தது. நல்லவர் நட்பு என்பதால் அது வளர்ந்தது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்ததும் திருச்சிதான்.
'சாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப்பிரிவை எரிப்பது' என்ற பெரியாரின் போராட்டம் திராவிட இயக்க வரலாற்றில் சட்ட எரிப்புப் போராட்டம் என அழைக்கப்பட்டது. 10,000 க்கும் அதிகமானவர்கள் கைதானார்கள். நவம்பர் 1957இல் நடந்த இந்தப் போராட்டத்தில் 3,000 பேர் சிறை சென்றனர். லால்குடியைச் சேர்ந்த பலர் இதில் கலந்துகொண்டனர். திருச்சி சிறை நிரம்பி வழிந்தது. 18 பேர் சிறையிலேயே இறந்தார்கள். அவர்களில் பட்டுக்கோட்டை ராமசாமியும் மணல்மேடு வெள்ளைச்சாமியும் சிறையிலேயே மரணமடைய, அவர்களின் உடல்கள், யாருக்கும் சொல்லாமல் போலீஸால் புதைக்கப்பட்டன. பெரியாரும் சிறையில். மணியம்மையாரின் போராட்டத்தால் புதைக்கப்பட்ட இருவரின் சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டு பெரியார் மாளிகைக்குத்தான் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச்சென்று ஓயாமரியில் மீண்டும் புதைத்தனர். அவர்களின் சமாதி இன்றும் ஓயாமரியில் உள்ளது.

பெரியாரின் மறைவுக்குப்பிறகு திராவிடர் கழகப் பொதுக்குழு கூடியதும் இந்தப் பெரியார் மாளிகையில்தான். இங்குதான் மணியம்மையார் கட்சியின் தலைவராக 1974 சனவரி 6ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். “உலகளவில் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரு நாத்திகக் கட்சியின் தலைவராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்த இடம் இது” என்றார் ஆசிரியர் வீரமணி.
இந்த வளாகத்தில் நடந்த சுவாரஸ்யமான திருமணமாக ஆசிரியர் வீரமணியின் திருமணம் பேசப்படுகிறது. சிதம்பரம் - ரெங்கம்மாள் இருவரும் விதவையர். வேறுவேறு சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களின் விதவை மறுப்பு கலப்புத் திருமணத்தைப் பெரியார்தான் 1934இல் நடத்திவைத்தார். இவர்களின் திருமணத்தைத்தான் செல்லாது என்றது சென்னை உயர்நீதிமன்றம். அந்தப் புகழ்பெற்ற வழக்குதான் தெய்வானை ஆச்சி VS சிதம்பரம் வழக்கு. தான் நடத்திவைத்த திருமணம்தான் இது என்று பெரியாரே சாட்சி சொல்லியும் சாஸ்திர முறைப்படி நடக்காததால் செல்லாது என்றது நீதிமன்றம். அண்ணா முதல்வரானதும் சுயமரியாதைத் திருமணம் செல்லும் எனச் சட்டம் இயற்றியது எவ்வளவு நியாயம் என்பதை நமக்குப் புரியவைத்த திருமணம் சிதம்பரம்-ரெங்கம்மாள் திருமணம். இந்த முற்போக்கான தம்பதியரின் மகள்தான் மோகனா.
வீரமணிக்குத் தந்தி கொடுத்து வரவழைத்து மோகனாவின் தந்தை சிதம்பரத்துக்கு அறிமுகம் செய்தார் பெரியார். “மோகனா நல்ல பெண். இயக்க வாழ்க்கைக்கும் நல்லது” என்ற பெரியாரின் முடிவின்படி வீரமணி-மோகனா திருமணம் 1957 டிசம்பர் 7 ஆம் தேதி நடந்ததும் இதே பெரியார் மாளிகையில்தான். தனது திருமணத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை படித்ததை ஆசிரியர் வீரமணி சொல்லும்போது மோகனா அம்மாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. நடிகவேள் ராதா பேசும்போது, “இந்தக் கல்யாணத்தை தாராளமா அய்யா பண்றாருன்னா, செலவால இல்ல. முன்னெல்லாம் பொண்ண ஒளிச்சுவச்சுப் பண்ணுவாறு. இப்போ தாராளமா எல்லாருக்கும் காட்டிப் பண்றாரு” என்ற ராதாவின் பஞ்ச் பேச்சை ஆசிரியர் வீரமணி சொல்ல, கேட்டபோது ராதாவின் மாடுலேஷன் நம் மனசுக்குள் வருவதைத் தடுக்க முடியவில்லை.

பல ஆளுமைகள் வந்துபோன இடம் இந்த மாளிகை. காமராசர், அடிகளார், ஈழத்துத் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் என்ற வரிசை நீளமானது. அய்யா வே.ஆனைமுத்து தொகுத்த, பெரியாரைக் கற்க முக்கிய நூலாக அமைந்த 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள்' மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டதும் இந்த மாளிகையில்தான்.
நிறைய மிளகு போட்ட (கறுப்புக்கறி) ஆட்டுக்கறியை மணியம்மையார் பக்குவமாகச் சமைத்துத் தருவாராம். பல் இல்லாமல் ஈறாலேயே மென்று அய்யா சாப்பிடுவதே ஒரு அழகாக இருக்குமாம். முறுக்கைக்கூட வாயில் ஊறவைத்து சாப்பிடுவார் என்று தங்காத்தாள் பழைய நினைவுகளை மெல்கிறார். சாப்பாட்டுக்கு ஒரு கறி போதும் என்பாராம் பெரியார். நிறைய தொட்டுக்கல் ஆடம்பரம் என்பது அவர் கட்சி. சூடான காபியும் இட்லியும் எப்போதும் அவருடைய விருப்பம். மலைவாழைப்பழம் விரும்பிச் சாப்பிடுவாராம். அவரைக் குளிக்கவைக்கத்தான் அம்மா போராடுவாராம். சர்க்கரை வியாதியோ ரத்த அழுத்தமோ அந்த வயதிலும் அவருக்கு இல்லை என்று அவரோடு வாழ்ந்த அங்குள்ளவர்கள் சொல்லச் சொல்ல நாமும் அய்யாவின் நினைவு ஊஞ்சலில் ஆடுகிறோம்.
திருச்சி பெரியார் மாளிகை விசிட் - பிரத்யேகப் படங்கள்
தமிழ்நாட்டின் அரசியலை, சமூக வாழ்வை, இந்தியாவின் போக்கைத் தீர்மானித்த ஒரு சக்தி மையம்கொண்டிருந்த இடமாகத் திருச்சியில் இருப்பது பெரியார் மாளிகை. அவர் படுத்துறங்கிய கட்டில் அதன்மேல் அவர் ஆசையாக வளர்த்த நாயின் அடையாளமாக ஒரு நாய் பொம்மை. “இது நான் அய்யாவுக்குக் கொடுத்தது” என்று சொல்லும்போது மோகனா அம்மாவின் கண்களில் ஒரு ஈரம். தரையில் உட்காரும்போது பயன்படுத்துவதற்காகப் பாரிசில் வாங்கிய ஒரு வித்தியாசமான டேபிள் ஃபேன் நாங்கள் போன அன்றும் சுற்றியது. அவர் நடத்திய குடியரசு ஏட்டின் பைண்ட் செய்த வால்யூம்கள் கண்ணாடி அலமாரிக்குள். இவ்வளவுதான் பெரியாரின் அறை. 'ஒரு சகாப்தம்' என்று அண்ணாவால் சொல்லப்பட்ட பெரியாரின் நினைவைச் சுமந்துகொண்டு அந்த மாளிகை இன்றும் இயங்குகிறது.

அது மாளிகைதான். ஆனால் குளிர் கருவியை (ஏசி) பயன்படுத்தமாட்டேன் என்று வசதியை மறுத்த ஒரு துறவியின் வாழ்விடம். 'திராவிடம்' என்ற தனது சித்தாந்தத்தைப் பரப்ப ஓடிக்கொண்டே இருந்த ஒருவர் கொஞ்சம் இளைப்பாற வந்த இடம் அது. காலத்தின் சாட்சியாய் பெரியார் மாளிகை இன்றும் நம்மோடு வாழ்கிறது.
பெரியாரின் பிறந்தநாளை 'சமூக நீதி நாளாக' அறிவித்த தமிழ்நாடு அரசின் ‘அரசியல் உறுதியை’ நினைத்து அந்த 70 வயதைக் கடந்த திராவிட மாளிகை மகிழவே செய்யும்.
(இன்னும் ஊறும்)