அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஓ.பி.சி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு... காரணமின்றி காலம் தாழ்த்தும் பா.ஜ.க அரசு!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

ஓ.பி.சி-க்கான இட ஒதுக்கீடு 1993-ல் நடைமுறைக்கு வந்தபோதிலும் இன்று வரை மத்திய அரசுப் பணியில் ஓ.பி.சி பிரிவினரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டைக்கூடத் தாண்டவில்லை.

ஓ.பி.சி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை உயர்த்தாமல், கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க அரசு காலம் தாழ்த்திவருவதாகக் குற்றச்சாட்டுகள் வலுத்துவருகின்றன.

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது. 1993-ம் ஆண்டு ஓ.பி.சி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், ஒரு லட்சத்துக்குக் கீழ் வருமானமுள்ளவர்கள் (Non-Creamy Layer) இட ஒதுக்கீட்டைப் பெற்றாலும், அதற்கு மேலுள்ளவர்கள் (Creamy Layer) இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியாமல்போனது.

அதன் பிறகு, பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களைக் கருத்தில்கொண்டு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த 2004-ம் ஆண்டில் ஓ.பி.சி-க்கான வருமான உச்சவரம்பு ரூபாய் 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. பின்னர், 2008-ல் இது ரூ.4.5 லட்சமாகவும், 2013-ல் ரூ.6 லட்சமாகவும், கடைசியாக 2017-ம் ஆண்டில் ரூ.8 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் ஓ.பி.சி பிரிவினருக்கு வருமான உச்சவரம்பு அதிகரிக்கப்பட ல்லை எனத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

ஓ.பி.சி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு... காரணமின்றி காலம் தாழ்த்தும் பா.ஜ.க அரசு!

இது குறித்து சி.பி.எம் மூத்த தலைவர் பேராசிரியர் அருணனிடம் பேசினோம். “ஓ.பி.சி-க்கான வருமான உச்சவரம்புத் தொகையை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசு மாற்றியமைக்க வேண்டும். அதன்படி, 2017-ல் 8 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்ட வருமான உச்சவரம்பை கடந்த 2020-ம் ஆண்டே குறைந்தது ரூ.15 லட்சமாக உயர்த்தியிருக்க வேண்டும். 2015-ல் தேசிய இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் (NCBC) இதைத்தான் பரிந்துரைத்திருக்கிறது. ஆனால், ஒன்றிய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இதை மறுபரிசீலனையே செய்யாமல் கிடப்பில் போட்டிருக்கிறது. இதனால், ஓ.பி.சி மாணவர்கள் ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலைகளிலும் சேர்வது தொடர்ந்து தடைப்பட்டுவருகிறது. குறிப்பாக, ஐஐடி-யில் 70% ஓ.பி.சி பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க-வினர் இந்த ஆட்சி `இந்துக்களுக்கான ஆட்சி’ என்பார்கள். ஆனால், ஓ.பி.சி பிரிவில் மிக அதிகமாக இருக்கும் இந்துக்களைப் புறக்கணிப்பார்கள். காரணம், இது வர்ணாஸ்ரம மனுவாதிகளுக்கான ஆட்சி. இங்கு, பிரதமரே ஓ.பி.சி-யாக இருக்கலாம். ஆனால், ஓ.பி.சி பிரதமரை வைத்தே ஓ.பி.சி-களுக்கு வஞ்சகம் செய்வார்கள். பணவீக்கம், விலைவாசி உயர்வு என நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில், நியாயமாக ஓ.பி.சி-களுக்கான வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக உடனே உயர்த்த வேண்டும்” என்றார்.

அருணன், ராமதாஸ்
அருணன், ராமதாஸ்

``ஓ.பி.சி-க்கான இட ஒதுக்கீடு 1993-ல் நடைமுறைக்கு வந்தபோதிலும் இன்று வரை மத்திய அரசுப் பணியில் ஓ.பி.சி பிரிவினரின் எண்ணிக்கை 10 விழுக்காட்டைக்கூடத் தாண்டவில்லை. மொத்தத்தில் கிரீமிலேயர் என்பது ஓ.பி.சி இட ஒதுக்கீட்டைத் தடுப்பதற்கான ஒரு தந்திரமே” என்பது மருத்துவர் ராமதாஸின் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், ஓ.பி.சி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் தெரிவித்திருக்கிறார்.

பார்க்கலாம்!