நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், ஆசிரியர்கள் ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் கணினிப் பாடம் நடத்துவதற்காக புரொஜெக்டர் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பறையிலிருந்தபோது, புரொஜெக்டரில் திடீரென ஆபாச வீடியோ திரையிடப்பட்டிருக்கிறது.

இதைக் கண்ட மாணவிகள் புத்தகத்தால் முகத்தை மூடியவாறு வகுப்பறையைவிட்டு உடனடியாக வெளியேறினர். ஆபாச வீடியோவை நிறுத்தத் தெரியாத ஆசிரியை, பள்ளியின் மற்றோர் ஆசிரியரை அழைத்து புரொஜெக்டரை நிறுத்தியிருக்கிறார். மேலும், `இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்கக் கூடாது' என மாணவ, மாணவிகளைப் பள்ளி நிர்வாகம் மிரட்டி அனுப்பியதாம்.
இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெற்றோருடன் வந்த மாணவி ஒருவர், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரித்தார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் அருண் தம்புராஜ் பள்ளியில் உரிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி அவர்கள் மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழும மனநல ஆலோசகர்கள் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர். ஆபாசப் படத்தை மாணவர்களுக்கு ஒளிபரப்பிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.