
பழங்குடி மக்களுக்கு நிரந்தர விடியல் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் சுமார் 7.94 லட்சம் பழங்குடி மக்கள் வசித்துவருகிறார்கள். இவர்களில் சுமார் 40,000 பழங்குடிக் குடும்பங்கள் பல்வேறு காரணங்களால் குடும்ப அட்டை கிடைக்காமல் அல்லாடிவருகிறார்கள். இதனால், அரசாங்கத்தின் எந்தவோர் உதவியையும் அவர்களால் பெற முடியவில்லை. அதிலும், கொடிய கொரோனா காலத்தில் இவர்கள்பட்ட துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல... குடும்ப அட்டை இல்லாததால் உணவுப் பொருள்களையும் பெற முடியவில்லை... இன்னொரு பக்கம் வேலையும் இல்லை. இப்படி இவர்கள் படும் துயரங்களை, ‘‘எத்தனை நாளைக்கு கிழங்கைத் தின்னே உசுரு வாழ முடியும்? பழங்குடி மக்களின் துயர் துடைக்குமா அரசு?’’ என்ற தலைப்பில் 23.6.21 தேதியிட்ட ஜூ.வி இதழில் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம்.
கூடவே பழங்குடியினர் துயரங்களை அமைச்சர்கள் சக்கரபாணி, கயல்விழி ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம். நாம் பேசியவுடனே அதற்கான பணிகளை அரசு இயந்திரம் தொடங்கிவிட்டது. கட்டுரை வெளியானவுடன் அதிகாரிகளும் களமிறங்கினார்கள். பல்வேறு பழங்குடி கிராமங்களுக்கு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் நேரடியாகச் சென்று ஆய்வுசெய்து, குடும்ப அட்டைகள் தேவைப்படுவோரின் விவரங்களை வாங்கியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையில், தன்னுடைய வேதனைகளைப் பகிர்ந்திருந்த தங்கராஜின் மதுரை அழகம்மாள்புரம் கிராமத்துக்கு மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரடியாகச் சென்றார். அப்போது சிலருக்கு ஏற்கெனவே குடும்ப அட்டை வந்துவிட்டதும், அதைச் சம்பந்தப்பட்டவர் களுக்குக் கொடுக்காமல் ரேஷன் கடை ஊழியர்கள் துணையுடன் சிலர் சட்டவிரோதமாகப் பயன்படுத்திவந்ததும் தெரியவந்துள்ளது. அதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அடுத்தடுத்து ஆர்.டி.ஓ., வி.ஏ.ஓ ஆய்வு செய்ததால், பழங்குடி மக்களுக்கு அதிகாரிகள் நேரடியாக குடும்ப அட்டைகளை விநியோகம் செய்திருக்கிறார்கள். அதேபோல, கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடும்பன்பாறை கிராமத்திலும் சிலருக்கு குடும்ப அட்டை கொடுத்திருக்கிறார்கள். குடும்ப அட்டை கிடைத்தவர்களுக்கு அரசின் 4,000 ரூபாய் கொரோனாகால நிவாரணமும், 14 வகை நிவாரணப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பகுதிகளிலுள்ள பழங்குடி கிராமங்களிலும் அதிகாரிகள் நேரடியாக ஆய்வுசெய்து குடும்ப அட்டை தேவைப்படுவோர் விவரங்களை வாங்கிச் சென்றிருக்கிறார்கள். அதேசமயம், நமக்குப் பேட்டியளித்திருந்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ்வரி, இப்போதும்கூட குடும்ப அட்டைக்காகக் காத்திருக்கிறார்.
அரசாங்கத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் சற்று திருப்தியளிக்கின்றன. ஆனாலும், நீண்ட ஆண்டுகளாக குடும்ப அட்டைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அனைத்துப் பழங்குடிக் குடும்பங்களின் வாழ்விலும் விடியலைக் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது!