அரசியல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘ஜொள்ளு அதிகாரியின் பாலியல் மிரட்டல்!’’ - மயிலாடுதுறை கசமுசா

மயிலாடுதுறையில் ஓர் உயரதிகாரியின் நேர்முக உதவியாளர் ஒருவர், அரசுத் துறைகளில் பணிபுரியும் இளம்பெண்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி ஜொள்ளுவிடுகிறாராம். சமீபத்தில் சுகாதாரத்துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு பாலியல்ரீதியாகப் பேசி தொல்லை கொடுத்ததுடன், ‘சம்மதிக்கவில்லையென்றால், உன் வேலையை காலிசெய்துவிடுவேன்’ என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த மிரட்டல் பேச்சை அந்தப் பெண் தனது செல்போனில் பதிவுசெய்து, உயரதிகாரிகளிடம் முறையிடவிருக்கிறார் என்று தகவல் பரவியிருக்கும் நிலையில், ‘யார் அந்த அதிகாரி?’ என்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பட்டிமன்றமே நடக்கிறது!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

அமைச்சர் பெயரைச் சொல்லி ஆட்டம்... - மதுரையில் சக அதிகாரிகள் காட்டம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் அப்போதைய அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் கொடிகட்டிப் பறந்தார் கலெக்டரேட் தொடர்புடைய அந்தப் பெண் அதிகாரி. கிரானைட் மோசடி தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் விசாரணை நடத்தியபோது இவர்மீது பல்வேறு புகார்கள் சொல்லப்பட்டன. இவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. ஆனாலும், செல்வாக்கு குறையாமல் வலம்வந்தார். இப்போது ஆட்சி மாறியும், இவரது ஆட்டம் அடங்கவில்லை என்கிறார்கள் வருவாய்த்துறையினர். இப்போது அமைச்சர் மூர்த்தியின் பெயரைச் சொல்லி, ‘அவர் நான் சொன்னதைத்தான் கேட்பாரு’ என்று அதிகாரம் செய்கிறாராம். மாவட்ட கலெக்டரால்கூட இவரது ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதால் மொத்த அதிகாரிகளும் இவர்மீது காட்டத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து, தனது பெயரைத் தவறாக பயன்படுத்தும் விஷயம் அமைச்சருக்குத் தெரியுமா என்று முணுமுணுக்கிறார்கள் சக அதிகாரிகள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘கையில காசு... டேபிள்ல லைசென்ஸ்!’’ - கடலூர் கறார் ஆபீஸர்

கடலூர் மாவட்ட துணை அதிகாரி ஒருவர் கடந்த தீபாவளியின்போதே பட்டாசுக் கடைகளுக்கு லைசென்ஸ் கொடுத்த வகையில் அரைக்கோடி வரைக்கும் அள்ளிவிட்டார். இந்த விவகாரம் வில்லங்கமானபோது, தன் உதவியாளரை அதில் சிக்கவைத்து தப்பிவிட்டார். சமீபத்தில் சிதம்பரத்திலிருந்து ஒரு தியேட்டர் உரிமையாளர், தனது தியேட்டரின் லைசென்ஸைப் புதுப்பிப்பதற்காக தென்மாவட்ட அமைச்சர் ஒருவரின் சிபாரிசுடன் கையில் காராச்சேவு, ஸ்வீட் பொட்டலங்களுடன் வந்திருக்கிறார். ‘‘காராச்சேவு கொடுத்து முடிக்குற விஷயமா இது... யாரா இருந்தா எனக்கென்னா... கையில காசு கொடுத்தா டேபிள்ல லைசென்ஸை வெக்கப்போறேன்... கிளம்புங்க, கிளம்புங்க!” என்று கதவை இறுக ‘சாத்து சாத்து’ என்று சாத்தியிருக்கிறார். இதையடுத்து, கடுப்பான அமைச்சர் தரப்பு, துணை அதிகாரியை அங்கிருந்து தூக்கியடிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறதாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘புது கலெக்டர் எப்படி?’’ - ஆழம் பார்க்கும் நீலகிரிப் புள்ளிகள்...

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா மாற்றப்பட்டு, அந்தப் பொறுப்பில் அம்ரித் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில், `ஆழம் பார்க்காம காலைவிடக் கூடாது’ என்று நினைக்கும் மாவட்டத்தின் சட்டவிரோதத் தொழில் புள்ளிகள் பலரும், “புது கலெக்டர் எப்படி... ஃபார்மாலிட்டீஸ் பண்ணிடலாமா, சிக்கலாயிடுமா?” என்று ஆட்சியர் அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்ட சீனியர் குமாஸ்தாக்களிடம் நூல்விட்டுக்கொண்டிருக்கிறார்களாம். அவர்களோ, “எங்களுக்கே பிடிபடலை... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!” என்று சொல்லி, சமாளித்துவருகிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

கமிஷனில் திளைக்கும் மாநகராட்சி அதிகாரி! - திருச்சி வி.ஐ.பி-க்குத் தொடர்பா?

திருச்சி மாநகராட்சியில் பணிபுரியும் ‘குமார’ அதிகாரி ஒருவரை கமிஷனை அடைமொழியாக வைத்துத்தான் மாநகராட்சி வட்டாரத்தில் அழைக்கிறார்கள். விதிமீறல் கட்டடங்களைப் பார்த்தாலே குஷியாகிவிடுபவர், அதன் உரிமையாளர்களிடம் பெரும் தொகையை அமுக்கிவிடுகிறார். “மாவட்டத்தின் மூத்த வி.ஐ.பி-க்கு நான் நெருக்கம்” என்று கூறியே உயரதிகாரிகளையும் வாயடைக்கச் செய்துவிடுபவர், பதவியேற்ற குறுகியகாலத்திலேயே ரங்கம் பகுதியில் பெரிய அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியிருக்கிறார். மாநகராட்சி டெண்டர்கள் பலவும் இவர் வழியாகத்தான் பாஸ் ஆவதால், ஒப்பந்ததாரர்களின் கூட்டம் இவரது அறையில் எப்போது நிரம்பி வழிகிறது என்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘எஃப்.ஐ.ஆர் போட்டதோட விட்டுருங்க!’’ - கிடப்பில் ஈரோடு ரெய்டு...

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில், சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்ட 51 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டு உதவி செயற்பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர்கள் லீலாவதி, செல்லமுத்து, அலுவலர்களான செல்வம், வெங்கடேஷ் பிரபு ஆகிய ஐந்து பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், இவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை. விசாரித்தால், ‘‘ரெய்டில் சிக்கியவர்கள், ‘அந்தப் பணத்துக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அமைச்சர் ஒருவருக்கு போய்ச் சேரவேண்டிய கமிஷன் அது’ என்று கூறினார்களாம். கிராஸ் செக் செய்ததில் அவர்கள் சொன்னது உண்மை என்று தெரிந்ததால், ‘எஃப்.ஐ.ஆர் போட்டதோட விட்டுருங்க. மிச்சத்தை கோர்ட்ல பார்த்துக்கலாம்’ என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. இதையடுத்தே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்’’ என்றார்கள்.