அரசியல்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கலெக்டரை மாற்ற காய்நகர்த்தும் அதிகாரி!

நெல்லை மாவட்டத்தில் திட்டமிடும் இடத்தில் இருந்த அதிகாரிமீது தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து, கடந்த ஆட்சியில் கலெக்டர் அவரை இடமாற்றம் செய்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், மாவட்டத்தின் ஆளுங்கட்சி வி.ஐ.பி ஆசியுடன் மீண்டும் பழைய இடத்துக்கே பணியிட மாறுதல் பெற்று வந்துவிட்டார் அதிகாரி. ஆனால், இப்போதும் அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்கிறார்கள். கரன்சி இல்லாமல் ஒரு பேப்பரைக்கூட நகர்த்த மறுக்கிறார் என்று தற்போதைய கலெக்டரிடம் புகார் சென்றுள்ளது. இதையடுத்து, அந்த அதிகாரிக்கு செக் வைக்கும் வகையில் அவருக்குக் கீழுள்ள அதிகாரியைவைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதனால் அதிருப்தியில் இருக்கும் கரன்சி அதிகாரியோ, ‘சீக்கிரமே கலெக்டரை டிரான்ஸ்ஃபர் பண்றேன் பாரு...” என்று தனக்கு நெருக்கமான அதிகாரிகளிடம் சொல்லிவருகிறார்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்த இனிப்பான அந்த மருத்துவர், சில மாதங்களுக்கு முன்பு கைதிகள் வார்டில் காவலுக்கு இருந்த காவலர்கள் தனக்கு சல்யூட் அடிக்கவில்லை என்று வசை மாரி பொழிந்திருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சையாகி, மருத்துவ உயரதிகாரிகள் அந்த டாக்டரை அழைத்து கண்டித்துவைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் மூதாட்டி ஒருவருக்கு வலது காலில் கொழுப்புக்கட்டி ஆபரேஷன் செய்வதற்கு பதிலாக, இடது காலில் ஆபரேஷன் செய்துவிட்டார் டாக்டர். இதையறிந்து பதறிய மூதாட்டியிடம், “பாட்டிம்மா... ஒண்ணும் பிரச்னை இல்லை. இடது கால்லயும் ஆபரேஷன் செஞ்சுடுவோம்” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். சம்பந்தப்பட்ட நோயாளியின் குடும்பத்தினர் அளித்த புகாரில், இனிப்பான டாக்டரை ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு டிரான்ஸ்ஃபர் செய்துவிட்டார்கள் அதிகாரிகள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வசூலில் கறார் காட்டும் மாநகராட்சி அதிகாரி!

திருச்சி மாநகராட்சி, கோ-அபிஷேகபுரத்தில் பெரிய கடவுள் பெயரைக்கொண்ட இளநிலை அதிகாரி ஒருவர், வசூலில் கறார் காட்டுகிறார். ஏதேனும் அப்ரூவலுக்காக இவரிடம் சென்றால், “இதுல என்னங்க இவ்ளோ பிரச்னை இருக்கு... அப்ரூவல் கிடைக்கிறது சிரமம்” என்று கூறியே கரன்சியைக் கறந்துவிடுவாராம். கமிஷன் வாங்காமல் பில்டிங் அப்ரூவல், குடிநீர்க் குழாய், பாதாளச் சாக்கடை இணைப்பு என எந்த ஃபைலும் இவரிடமிருந்து மூவ் ஆகாது என்கிறார்கள் சக பணியாளர்கள். இந்த நிலையில்தான், சில நாள்களுக்கு முன்பு மீசைக்கார வி.ஐ.பி-யின் உதவியாளர் ஒருவர், ஒரு அப்ரூவலுக்காக சிபாரிசு செய்திருக்கிறார். வழக்கம்போல, “சார், இதுல சட்டரீதியா நிறைய பிரச்னை இருக்கு...” என்று சொல்லித் திருப்பி அனுப்பிவிட்டாராம் அதிகாரி. இதையடுத்து, “இந்தச் சின்ன விஷயத்தை மீசைக்காரர்கிட்ட கொண்டுபோகலாமா இல்லை... வேற எப்படி அந்த அதிகாரியை வழிக்குக் கொண்டுவருவது?” என்று யோசித்துவருகிறது மணியான அந்த உதவியாளர் தரப்பு!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

நாய்க்கு வாக்கிங்... செங்கல், மணல் மாமூல்!

தேனி வனச்சரகத்தில் பணியாற்றும் ‘சாந்த’மான அதிகாரி, தனக்குக் கீழ் வேலை பார்க்கும் வனத்துறை ஊழியர்களைத் தனது வீட்டு நாயை வாக்கிங் அழைத்துச் செல்லவும், வீட்டுக்குக் காய்கறி வாங்கித் தரவும் பயன்படுத்துகிறார். தவிர, தேனியில் அவர் கட்டிவரும் வீட்டுக்குத் தேவையான செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களை மாமூலுக்கு பதிலாக வாங்கித் தர வேண்டும் என்றும் ஊழியர்களை மிரட்டுகிறாராம். இவற்றையெல்லாம் பட்டியலிட்டு, 13 பக்கக் கடிதத்தை உயரதிகாரிக்கு ஊழியர்கள் சிலர் அனுப்பியிருக்கிறார்கள். இதையடுத்து, இந்த விவகாரம் பற்றிக் கேள்வி கேட்ட உயரதிகாரியிடம், தன்மீது வீண்பழி சுமத்தப்படுவதாகச் சாமர்த்தியமாகச் சொல்லிச் சமாளித்துவிட்டு, வழக்கமான வேலையைத் தொடங்கிவிட்டாராம் சாந்தமான அதிகாரி.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு உபசரிப்பு!

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டத்துக்கு உணவு கட்டுப்பாட்டு அதிகாரி இல்லை. எனவே, வாரம்தோறும் புதுச்சேரியிலிருந்து அங்கு டெபுடேஷனுக்குச் செல்லும் ‘நிலவு’ அதிகாரியை, ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சிலர் காமராஜர் சாலையிலுள்ள ஹோட்டலில் தங்கவைத்து ‘சகல’விதத்திலும் உபசரிக்கிறார்கள். அவருடன் வரும் உதவியாளர் மட்டும் கடைகளுக்குச் சென்று வசூல் வேலைகளைக் கச்சிதமாக முடித்துவிடுவதால், அதை மட்டும் பெற்றுக்கொண்டு அலுங்காமல் குலுங்காமல் திரும்பிவிடுகிறாராம் ஆபீஸர்.