அரசியல்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘பட்டாசு’ மாவட்டத்தில் புதிதாக மதுக்கடை பார்களை ஏலம் எடுத்தவர்கள், கரூர் டீமின் கமிஷன் வேட்டையில் சிக்கித் தவிக்கிறார்கள்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

எஸ்கேப்பான ‘பெல்’ பேராசிரியர்!

கவிஞர் பெயர்கொண்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் ‘பெல்’ பேராசிரியர், அதே துறையில் பணியாற்றும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்தாராம். சம்பந்தப்பட்ட பெண்கள் கண்ணீருடன் சென்று புகார் அளிக்கவே, ‘பெல்’ பேராசிரியரை அழைத்துக் கண்டித்திருக்கிறார் துணைவேந்தர். “மரியாதையாக, நீங்களாகவே துறைத் தலைவர் பதவியிலிருந்து விலகிவிடுங்கள். இல்லையெனில் போலீஸில் புகாரளிப்பேன்” என்றும் எச்சரித்திருக்கிறார். பதறிப்போன ‘பெல்’லும் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டுவிட்டு வழக்கில்லாமல் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

காலாவதி சங்கமும் கலெக்‌ஷனுக்குப் பயன்படும்!

‘ஐந்தறிவு’ ஜீவன்களுக்கான பராமரிப்புத்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் அறிவின் பெயரைக்கொண்ட அந்த அதிகாரி, உதவி மருத்துவர்கள் நியமன சர்ச்சையில் சிக்கியவர். கடந்த ஆட்சியில், ‘எல்லாம் அவன் செயல்’ என்று கரைவேட்டியைக் கைகாட்டிவிட்டுத் தப்பியவர், இப்போது செம உஷார் பேர்வழியாகிவிட்டாராம். துறையிலுள்ள ‘காலாவதி’ சங்க நிர்வாகிகள் சிலருடன் சிண்டிகேட் போட்டுக்கொண்டு, போஸ்ட்டிங்குக்கு 15 லட்சம், டிரான்ஸ்ஃபருக்கு 5 லட்சம் என ஃபிக்ஸ் செய்து வசூல் வேட்டையாடியிருக்கிறார். இந்த லட்சணத்தில் அறிவானவருக்கு சமீபத்தில் புரொமோஷன் கொடுத்து மகிழ்ந்திருக்கிறது ஐந்தறிவுத்துறை!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

சூர்ய புத்திரரின் ‘பண’ போதை!

‘பட்டாசு’ மாவட்டத்தில் புதிதாக மதுக்கடை பார்களை ஏலம் எடுத்தவர்கள், கரூர் டீமின் கமிஷன் வேட்டையில் சிக்கித் தவிக்கிறார்கள். ‘எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை லாபம்’ என்கிறரீதியில் டாஸ்மாக்கின் அதிகாரி ஒருவரும், தன் பங்குக்கு வசூல் வேட்டையாடிவருகிறாராம். ‘கட்டிங்’ சரியாகத் தராத கடைக்காரர்களுக்கு, சிறிய ரக மது பாட்டில்களை சப்ளை செய்யாமல் நிறுத்திவைக்கிறாராம். எப்போது மீதத் தொகையைக் கொடுத்து கணக்கு சரி செய்யப்படுகிறதோ அப்போதுதான் ஒழுங்கான முறையில் மதுபாட்டில் ‘சப்ளை’ நடக்கிறதாம். இதுபோக பினாமி பெயரிலும் சில பார்களை நிர்வகிக்கிறாராம், அந்த சூர்ய புத்திர அதிகாரி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘100 ரூபா வேண்டாம்.... 1,000 ரூபா போதும்!’’

கடலோரக் கவிதைபாடும் மாவட்டத்தின் வருவாய்த்துறையிலிருந்த ‘மேஜிக்’ அதிகாரி, ரேஷன் கார்டு வாங்கிய பயனாளி ஒருவரிடம் லஞ்சம் கேட்டு போன் செய்தாராம். குசும்பரான அந்தப் பயனாளி, ‘100 ரூபாய் போதுமா?’ என கேட்க... சட்டெனக் கூடுதலாக ஒரு ஜீரோவைச் சேர்த்து, ‘1,000 ரூபாயாகக் கொடு’ என்று பேரத்தை இறுதி செய்திருக்கிறார் அதிகாரி. இந்த உரையாடல் ஆடியோ லீக்காகிவிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார் மிஸ்டர் ‘மேஜிக்.’ கடந்த மாதத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட புதிய ரேஷன் கார்டுகளை மேஜிக் அதிகாரி வழங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகவே... அந்த கார்டுதாரர்கள் ஒவ்வொருவரும் லஞ்சமாக எவ்வளவு தொகையைக் கொடுத்தார்கள் எனக் களத்தில் இறங்கி கணக்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

நான் இருக்கும்போது புரோக்கர் எதற்கு?

உப்பு விளையும் மாவட்டத்தில் இருக்கும் பட்டினத்தை ஆண்டுவரும் ‘அரசர்’ அவர். காந்தி சிரிக்காமல், எந்தச் சான்றிதழும் கொடுப்பதில்லை என்கிற கொள்கை உறுதியோடு இருப்பவர். அந்தக் காந்தியையும்கூட தன் அலுவலக உதவியாளர் வழியே சிரிக்கவைப்பதில், அரசருக்கு நம்பிக்கையில்லை. எனவே, தனது நம்பிக்கைக்குரிய பெண் புரோக்கர் மூலமே அனைத்து டீலிங்குகளையும் செய்துவருகிறாராம் அரசர். தன்னை நம்பாததோடு, தனக்குரிய பங்கையும் தராமல் ‘அராஜக வசூல்’ செய்துவரும் அரசரை மாட்டிவிட எண்ணிய அந்த உதவியாளர், புரோக்கர் பெண்மணி பணம் வாங்குகிற காட்சியை வீடியோவாகப் படம்பிடித்து மாவட்ட உயரதிகாரிக்கு அனுப்பிவிட்டாராம். இந்த விவகாரத்தால் அரசருக்கும் உதவியாளருக்கும் இடையே கைகலப்பே ஆகிவிட்டது. மேலதிகாரிகளுக்கு என்ன சிக்கலோ, ‘விரைவில் நடவடிக்கை பாயும்’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.