
- ஆபீஸ் பாய்

‘அழகான டீச்சரெல்லாம் முன்வரிசைக்கு வாங்க!”
‘ஜில்’ மாவட்ட மைய நகரின் படிப்புத் துறையில், தமிழ் மாதத்தின் பெயரைக்கொண்டவர் அதிகாரியாக இருக்கிறார். ஏற்கெனவே ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கூட்டங்களை சம்ஸ்கிருதத்தில் நடத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார் ஐயா. இந்த நிலையில், பெண் தலைமை ஆசிரியர்களிடம் ஜொள்ளுவிட்ட சமாசாரத்தில் இப்போது சிக்கியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தின்போது, ‘‘அழகான டீச்சரெல்லாம் முன்வரிசையில் வந்து உட்காருங்க” என ஓப்பன் மைக்கில் ஜொள்ளுவிட்டிருக்கிறார். இதைக் கேட்ட பெண் தலைமை ஆசிரியர்கள் முகம் சுளித்திருக்கிறார்கள். ‘‘இவர்கிட்ட ட்ரெயினிங் எடுத்துட்டுப்போய் உருப்படவா?” எனத் தலையிலடித்துக்கொண்டு புலம்புகிறார்கள் ஆசிரியர்கள்.

சரக்கு, ஸ்வீட், ஜாலி அதிகாரி!
பட்டாசு மாவட்டத்திலுள்ள கோட்டையூரில், போக்குவரத்து அதிகாரியின் ஆட்டம் தாங்கவில்லையாம். பணி நேரத்திலேயே சரக்கு போதையில் மிதப்பது, லைசென்ஸ் குறைபாட்டைச் சரிசெய்ய ‘ஸ்வீட்’ கேட்பது, வாரத்துக்கு இரண்டு நாள்களே பணிக்கு வருவது என அதிகாரியின் சேட்டைகள் உள்ளூர் ஆட்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. வாகன விபத்து ஆய்வுக்கும், ஆன்லைன் கோரிக்கைகளை அப்ரூவ் செய்வதற்குமே ஆதாயம் எதிர்பார்க்கும் ‘தீராத விளையாட்டு’ அதிகாரியின் கொடுமைகளை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அனுபவிக்க வேண்டுமோ எனப் புலம்புகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.

ஆள் இல்லாத கடையில், டீ ஆற்றும் அதிகாரி!
பக்கத்து மாநிலத்தில் இயங்கிவரும் அரசு பொறியியல் கல்லூரியை, கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் என்று அறிவித்த மத்திய அரசு, அதற்கு ஒருசில அதிகாரிகளை மட்டும் நியமித்துவிட்டு அமைதியாகிவிட்டது. அதில் ‘மைக்’ நடிகர் பெயர்கொண்ட அதிகாரி பதவியேற்றவுடன் செய்த முதல் வேலை, பல்கலைக்கழகச் செலவில் விலையுயர்ந்த ஐ போனும், ஐ பேடும் வாங்கியதுதானாம். அதேபோல ‘கடற்கரை சாலையில்தான் வீடு வேண்டும்’ என்றும் அடம்பிடித்து அரசாங்கச் செலவில், சுமார் ஒரு லட்சம் ரூபாய் வாடகையில் வீடு பிடித்திருக்கிறாராம். தன்னைச் சந்திக்க வரும் பேராசிரியர்கள், ஊழியர்கள் தன்னையோ, தனது பேச்சையோ பதிவுசெய்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை உணர்வில், ‘செல்போன்களை வெளியிலேயே வைத்துவிட்டுத்தான் உள்ளே வர வேண்டும்’ என்று வாய்மொழி உத்தரவும் போட்டிருக்கிறாராம். ‘‘பெயரில் மட்டும்தான் பல்கலைக்கழகமாக மாறியிருக்கிறது. கட்டமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைகூட இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இவ்வளவு அட்ராசிட்டியா... ஆளே இல்லாத கடையில் யாருக்குத்தான் டீ ஆத்துகிறாரோ?” என்று புலம்புகின்றனர் ஊழியர்கள்!

‘‘லைசென்ஸ் தேவையில்லை... கமிஷன் கொடுத்துடுங்க!’’
பின்னலாடை மாவட்டத்தின் கனிம வளத்துறையில் பணியாற்றிவரும் உயரதிகாரி அவர். பெயரில் கொடையை வைத்திருந்தாலும் செயலைப் பொறுத்தவரையில், வசூலில் மட்டுமே குறியாக இருக்கிறாராம். ஏற்கெனவே அவர் பணியாற்றிய மஞ்சள் மாவட்டத்தில், ஒரு டஜன் சர்ச்சைகள் அவரைச் சுற்றிச் சுழன்றன. தற்போது இந்த மாவட்டத்திலும் அது தொடர்கிறது. “லைசென்ஸ் இருந்தாலும், இல்லாட்டியும் ஓட்டுங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன். என்னோட கமிஷனை மட்டும் கரெக்டா கொடுத்துடுங்க. இல்லாட்டி உங்களுக்குத்தான் பிரச்னை” என்று கமிஷனில் படு கறார் காட்டுகிறாராம்.

‘கடத்தல்காரர்களுக்கு ஆசி வழங்கும் அதிகாரி!’
இனிப்பு மாவட்டத்தின் வளமான துறை அதிகாரியின் அலுவலகம், பழைய பொருள்களைப் போட்டுவைக்கும் குடோன்போலக் காட்சியக்கிறது. அந்த அலுவலகத்துக்கு அவதாரப் பெயர்கொண்ட அதிகாரி வருவதே இல்லையாம். கலெக்டர் நடத்தும் கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வதில்லை என்கிறார்கள். விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற முடியாமல் அலைக்கழிக்கப்படும் நிலையில், மணல் புரோக்கர்களின் மொத்தக் கன்ட்ரோலில் இருக்கிறதாம் அந்த அலுவலகம். ஏற்கெனவே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கல், மண் கொள்ளை அமோகமாக நடந்துவரும் நிலையில், கேரளாவுக்கு கல், மண்ணை லாரி லாரியாகக் கடத்தும் கடத்தல்காரர்களிடம் மட்டும் ‘தாராளமாக’ நடந்துகொண்டு ஆசி வழங்கிவருகிறாராம் அவதார அதிகாரி!