அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘நான் இந்த ஊர்லதான் இருப்பேன்...’’ - அடம்பிடித்த அதிகாரி... அடக்கிய மேலிடம்!

அவார்டு மாவட்டத்தில் சமீபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார் ஆட்சியர். இதில் ‘நரி’ ஒன்றியத்தில் பணியாற்றிவந்த ‘இளவரசர்’ அதிகாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்தார். ‘சிங்கத்துக்கு வாலாக இருப்பதைவிட, எலிக்குத் தலையாக இருந்தால்தான் மரியாதை’ என்று நினைத்த அந்த இளவரசர் அதிகாரி, இடத்தையும் காலி செய்யாமல், தன்னுடைய இடத்துக்குப் புதிதாக வந்தவரிடம் பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் அடம்பிடித்திருக்கிறார். இதனால் பொறுப்பேற்க வந்தவர் டென்ஷனாகி, ‘இளவரசரின்’ பக்கத்திலேயே இன்னொரு நாற்காலியை எடுத்துப்போட்டு உட்கார்ந்துவிட்டார். இரண்டு பேரில் யாரிடம் பணிகளுக்கு ஒப்புதல் வாங்குவதெனத் தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்தார்கள் பணியாளர்கள். விவகாரம் உயரதிகாரிகளின் காதுகளுக்குச் செல்ல, மேலிருந்து ரைடு விட்ட பிறகே, வேண்டா வெறுப்பாக இடத்தைக் காலிசெய்தாராம் இளவரசர்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘‘ஜவுளிக்கடை பேரில், டி.டி எடுங்க...’’ - பேரூராட்சி அலுவலரின் புது உத்தரவு!

உப்பு விளையும் மாவட்டத்திலுள்ள ‘புது’ பேரூராட்சி அலுவலகத்தில் கட்டட அனுமதி, வீட்டு வரி எனச் சகலத்துக்கும் பணம் கறக்கிறாராம் இரட்டை பெயர்கொண்ட செயல் அதிகாரி. “என்னங்கய்யா, டி.டி எடுத்தா போதும்னு சொன்னாங்க. நீங்க கையில பணம் கேட்குறீங்க..?” என எதிர்க்கேள்வி கேட்கும் ஊர்க்காரர்களிடம், “டி.டி-தான... செட்டியார்பட்டி ஜவுளிக்கடை பேருல எடுங்க... காரியத்தை முடிச்சுத் தர்றேன்” என நக்கலாகச் சொல்லிவிடுகிறாராம். அப்படியாவது வழிக்கு வரட்டும் என்பதே பிளான். மீறி யாராவது ஜவுளிக்கடையின் பெயரில் டி.டி எடுத்தாலும் அந்தப் பணம் சேதமில்லாமல் அதிகாரி கைக்கு வந்துவிடுகிறதாம். ‘நாட்டிலேயே லஞ்சப் பணத்தை டி.டி எடுக்க வெக்கிற கில்லாடி இவர்தான்யா...’ என்று சிரிக்கிறார்கள் அலுவலக ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

வில்லங்கச் சான்றிதழுக்கு லஞ்சம்... திருப்பிக் கொடுக்க வைத்த தாசில்தார்!

கடலோர மாவட்டத்தின் பத்திரப் பதிவுத்துறையில் பணிபுரிகிறார் ஒரு ‘ரகசிய’ அதிகாரி. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக தன் நிலம் தொடர்பான வில்லங்கச் சான்றிதழ் பெற இவரிடம் வந்திருக்கிறார் ஒரு விவசாயி. எல்லாவற்றிலும் காசு பார்க்கும் மிஸ்டர் ரகசியம், அந்த விவசாயியிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட இரு மடங்கு பணம் வசூலித்தாராம். இது குறித்து விவசாயி தரப்பு தாசில்தாரிடம் முறையிட, அதிரடியாகக் களமிறங்கி விசாரித்திருக்கிறார் தாசில்தார். விசாரணையில், கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டாராம் ‘ரகசிய’ அதிகாரி. விஷயம் வெளியே தெரிந்தால் வேலை போய்விடும் என்று அதிகாரியை எச்சரித்த தாசில்தார், லஞ்சப் பணத்தை அப்படியே திரும்ப வசூலித்து விவசாயியிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்!

வெயில் மாவட்ட ஊராட்சி ஒன்றில் உயர்மின் அழுத்தக் கம்பிகள் செல்லும் பாதையிலேயே தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வீட்டுமனைப் பிரிவுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறாராம் பெண் வட்டார வளர்ச்சி அதிகாரி. இத்தனைக்கும் அந்த வீட்டுமனைப் பிரிவை ஊராட்சி நிர்வாகம் அங்கீகரிக்கவில்லை. “கடந்தகாலத்தில், இதே மின் அழுத்தக் கம்பிகளுக்கு கீழே கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு ஒன்று இடி தாக்கியதில் உயிரிழந்தது. அபாயத்தன்மையை அறியாமல் எதன் அடிப்படையில் தடையில்லா சான்று கொடுத்தீர்கள்... நேரில் ஆய்வு செய்தீர்களா... அனுமதி கொடுக்கப் பணம் வாங்கினீர்களா?” என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்டு அந்தப் பெண் அதிகாரிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஊராட்சி மன்றத் தலைவர். ஆனால், அம்மணியோ ‘இடியே ஆனாலும் தாங்கிக்கொள்ளும் இதயம்’ என்று அந்தக் கடிதத்தை வடை மடிக்கும் காகிதம்போல லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்துவிட்டாராம்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘போராடினால், வழக்கு போடுவேன்!’

கொங்கு மண்டலத்தின் மூன்றெழுத்து மாவட்டத்தில், பிரபல சிமென்ட் கம்பெனி ஒன்று அரசு மற்றும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, கற்களை வெட்டி எடுத்துவருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், சிமென்ட் கம்பெனியின் கல்குவாரியிலிருந்து பறந்துவந்த 5 கிலோ எடையுள்ள கல் ஒன்று, குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்திருக்கிறது. பதறிப்போன கிராம மக்கள், அந்த ஆலைக்கு எதிராகப் போராடத் தயாரானார்கள். ஆனால், ‘தலை’யான பகுதி வருவாய்த்துறை அதிகாரியாக பயணியாற்றும் மலரான பெண் அதிகாரியோ, ‘அது பெரிய இடம். அவங்களோட மோத முடியாது. நீங்க போராடினா, உங்க மேல வழக்கு போடவெப்பேன்...’ என்று வெளிப்படையாக மிரட்டுகிறாராம். ‘மக்கள் வரிப் பணத்தில் சம்பளம்... ஆதரவு மட்டும் தனியார் நிறுவனத்துக்கா?’ என்று சுண்ணாம்புக்கல்லாகக் கொதிக்கிறார்கள் மக்கள்.