
- ஆபீஸ் பாய்

கெத்து காட்டும் அதிகாரி... கடுப்பான கலெக்டர்!
பின்னலாடை மாவட்டத்தில், இயற்கை வளங்களைக் கண்காணிக்கும் பிரிவில் இருக்கிறார் அந்தக் கொடை அதிகாரி. விதிமீறல்களில் ஈடுபடும் கல்குவாரிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டும்கூட பெயரளவுக்கு மட்டுமே செயல்பட்டாராம் அதிகாரி. இது தொடர்பாக விசாரிக்க கலெக்டர் போனில் தொடர்புகொண்டபோதும், அலட்சியமாக அழைப்பைத் தவிர்த்துவிட்டாராம். இதனால் கடுப்பான கலெக்டர், அதிகாரிகள் குழுவுடன் நேரடியாகத் துறை அலுவலகத்துக்கே விசிட் அடித்து, ‘‘கல்குவாரிகள் தொடர்பாக ஆய்வுசெய்து நடவடிக்கை எடுப்பதுடன், அது தொடர்பான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் அனுப்ப வேண்டும்’’ என்று அதிகாரியை எச்சரித்துவிட்டு வந்திருக்கிறார். ஆனாலும் என்ன... ‘ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சரிடம் எனக்கு எவ்வளவு செல்வாக்கு தெரியுமா... என்னையெல்லாம் கலெக்டரால் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சக அதிகாரிகளிடம் கெத்து காட்டிவருகிறாராம் கொடை அதிகாரி.

கல்விக் கழகத்தில் கல்லாகட்டும் பதிவாளர்!
‘ரகசிய’ மாவட்டக் கல்விக் கழகம் ஒன்றில் பணிபுரியும் வனவாசக் கடவுள் பெயர்கொண்ட பதிவாளர், பணியிட மாற்றம், மதிப்பெண்களை ஏற்றுவது, பொருள்கள் வாங்குவது போன்ற விவகாரங்களில் கரன்சிகளைக் குவித்துவருகிறாராம். குறிப்பாக, பாடமெடுக்கத் தகுதியில்லாதவர்களை டீச்சிங் அல்லாத பணிகளுக்கு மாற்றி, அவர்களைக் காப்பாற்றிவிடுவதற்கு மட்டும் நான்கு லட்டுகள் வரை ஃபிக்ஸ் செய்து வசூல்வேட்டை ஆடிவருகிறாராம். இப்படி வசூலித்ததையெல்லாம் தன் மனைவி மற்றும் பினாமிகள் பெயரில் வீடு, நிலங்களில் முதலீடு செய்கிறாராம். சமீபத்தில் வருமான வரித்துறைக்குத் தெரியாமல், பக்கத்து மாநில மையப்பகுதியில் தன் மனைவி பெயரில் ஒன்றரை ஸ்வீட் பாக்ஸ்கள் கொடுத்து ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கிப்போட்டிருக்கிறாராம் அந்தப் பதிவாளர்!

‘‘தளபதிகிட்ட பேசணுமா... இல்ல மாப்பிள்ளைகிட்ட பேசணுமா..?’’
மேற்கே உள்ள அந்த முக்கிய மாநகராட்சியில், மக்களுடன் தொடர்பிலிருக்கும் கவிஞர் பெயர்கொண்ட அதிகாரி அவர். ஆளுங்கட்சியின் குடும்பப் பின்னணியைக் கொண்டவர் என்பதால், மனிதர் கரைவேட்டி கட்டாத உடன்பிறப்பாகவே வலம்வருகிறார். அனைத்து மண்டலங் களிலும் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக் கொண்டு, தனி ரூட்டில் ஃபைல்களை வேகமாக க்ளியர் செய்துகொடுக்கிறாராம். ‘தளபதிகிட்ட பேசணுமா... மாப்பிள்ளைகிட்ட பேசணுமா... சொல்லுங்க முடிச்சுக்கலாம்...’ என வெளிப்படையாக டீல் பேசுகிறாராம். அரசு நிகழ்ச்சி களில்கூட முதல்வரைப் பற்றிப் பேசும்போது, ‘தளபதி’ என்றே குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளுகிறாராம். இவரின் பேச்சைக் கண்ட உள்ளூர் உடன்பிறப்புகள், ‘என்னய்யா இந்த மனுசன்... தளபதி பாசத்துல நம்மளையே ஓவர்டேக் பண்ணிடுவார்போலயே’ என கமென்ட் அடிக்கிறார்கள்!

நாற்காலியைத் தொட்டு வணங்கும் ‘பயபக்தி’!
‘ஜில்’ மாவட்டத் தலைநகரில் அரசுக் கல்லூரியின் முதல்வர் பொறுப்பில் இருந்த ‘சிவன்’ பெயர்கொண்ட அதிகாரியை, கல்லூரி கல்வித்துறையின் உயர் பதவிக்குக் கூடுதல் பொறுப்பாக நியமித்திருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு, பொறுப்பு முதல்வராக ‘நேச’க்கார சீனியர் ஹெச்.ஓ.டி ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த நேசக்காரர், அலுவலகம் வந்ததும் முதல்வர் நாற்காலியைத் தூசுதட்டி, பயபக்தியுடன் கும்பிடுவாராம். பின்னர் முதல்வரின் நாற்காலிக்குப் பக்கத்திலேயே சின்னதாக ஒரு டேபிள் சேரை எடுத்துப்போட்டு, காவல்காரர்போல உட்கார்ந்துகொண்டுதான் பணிகளைச் செய்கிறாராம். இவர் காட்டிவரும் பயபக்தியின் பின்னணி குறித்துப் பேசும் பேராசிரியர்கள், “நேசக்காரருக்கு விரைவில் முதல்வராக புரொமோஷன் வரவிருக்கிறது. இந்த நிலையில், பக்கத்தில் இருக்கும் கல்லூரிக்கே முதல்வர் பதவியைப் பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் ‘சிவ’ அதிகாரியின் நாற்காலியில்கூட உட்காராமல் பம்முகிறார் நேசக்காரர்” என்று கிசுகிசுக்கிறார்கள்.

“மேல வரைக்கும் கட்டிங் போகுது!”
டெல்டாவில் புதிதாக உருவான ‘டான்ஸ்’ மாவட்டத்தில், சுமார் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கோமாதா பெயர்கொண்ட அதிகாரி ஒருவர், தனது சொந்த ஊரிலேயே சார்பதிவாளராகப் பணியிலிருக்கிறார். பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் சுமார் 10 முதல் 20 வரை பூந்திகளைப் பெற்றுக்கொண்டுதான் பத்திரப்பதிவே செய்துதருவாராம். பூந்திகளைக் கையில் வாங்கினால் கறைபட்டுவிடும் என்பதற்காகத் தனக்கென்று சில ஏஜென்ட்டுகளையும் நியமித்திருக்கிறாராம். யாராவது பூந்தி கொடுக்க மறுத்தால், ஃபைலில் ‘கொயரி’ போட்டு, பத்திரப்பதிவைத் தள்ளிவைப்பது, கட்டணத்தை உயர்த்திக் கேட்பது என்று அடாவடி செய்வாராம். ‘அரசு விதித்திருக்கும் கட்டணத்தைவிட மிக அதிகமாகக் கேட்கிறீர்களே?’ என்று யாராவது கேட்டால், மாதம் ரூ.5 லட்டு முதல் 10 லட்டு வரை மேலதிகாரிகள் கட்டிங் கேட்பதாகவும், அமைச்சர் வரை பங்கு செல்வதாகவும் சொல்லிவருகிறாராம். ‘யாரிடம் போய் இதையெல்லாம் முறையிடுவது?’ என்று குமுறுகிறார்கள் மக்கள்!