
- ஆபீஸ் பாய்

மன்மத ஏவுகணை விடும் அதிகாரி!
புதிதாக உருவான சாரல் மாவட்டத்தின், கோயில் கோட்டத்திலுள்ள அதிகாரியின் நேர்முக உதவியாளராக ஆனந்தமான அதிகாரி இருக்கிறார். சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களை மனிதராகவே மதிக்காமல் ஆணவத்தோடு பேசி அலைக்கழிப்பதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறாராம். அதேசமயம் ‘ஆதரவற்றோர் உதவித்தொகை’ கேட்டுச் செல்லும் இளம்பெண்களிடம் மட்டும் ஆனந்தமாகப் பேசுவதோடு, அவர்களின் செல் நம்பரையும் வாங்கிக்கொண்டு உதவுவதுபோல மன்மத அம்புகளை மறைமுகமாக ஏவுகிறாராம். ஏற்கெனவே வேலை பார்த்த இடத்தில் இவர் செய்த மன்மத லீலைகளால், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில், இங்கும் ஏதாவது வம்பை விலை கொடுத்து வாங்கிவிடுவாரோ எனச் சக ஊழியர்கள் பதறுகிறார்களாம்!

‘டெண்டரை எடு... உள் வாடகைக்கு விடு’!
அவார்டு நகராட்சியின் வருவாய்க்காக, சமீபத்தில் நகராட்சி கடைகளுக்கு டெண்டர் நடத்தப்பட்டது. ஏலம் எடுக்கும் அறிவிப்பைக் கமுக்கமாக வைத்திருந்ததால், நகரத் தலைவருக்கு நெருக்கமானவர்களே பெரும்பாலான கடைகளை ஏலம் எடுத்துவிட்டார்களாம். முந்தைய டெண்டரில், மாத வாடகை 6,000 என நிர்ணயிக்கப்பட்ட கடைகள்கூட, இந்த முறை நடந்த டெண்டரில் மாத வாடகை 3,500 ரூபாயைத் தாண்டவில்லையாம். குறிப்பிட்ட கவுன்சிலரின் கணவருக்கு மட்டும் மூன்று கடைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றனவாம். இதைக் கேள்விப்பட்ட நகராட்சி நியாயவாதிகள், ‘‘மாதம் 3,500 ரூபாய்தான் வாடகை என்றால், அந்த வணிக வளாகத்தில் ஏற்கெனவே கடை நடத்திவந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்து, அவர்களுக்கே மீண்டும் கடையைக் கொடுத்திருக்கலாமே... குறைவான வாடகைக்கு இப்படி இவர்களே ஏலம் எடுத்து, உண்மையான வணிகர்களுக்கு அதிக உள் வாடகைக்குக் கடையை ஒப்படைப்பதால், நகராட்சிக்குத்தானே வருவாய் இழப்பு’’ எனக் கொதிக்கிறார்கள்!

பள்ளிக் கலைத்திருவிழாவிலும் சாதிப்பாசம்!
தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா நடந்துவருகிறது. ‘ஜில்’ மாவட்டத்தில் நடைபெற்ற கலைவிழாவில், குறிப்பிட்ட கல்வி ஏரியாவைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவ, மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி முதல் இடத்துக்கு முந்தினார்களாம். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு கல்வி அதிகாரிகள் இருவர், நடுவர்கள் காதில் ரகசியம் ஓதி, சுமாராகப் பங்களித்த பள்ளிகளுக்கு முதல் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டார்களாம். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். “தங்கள் சாதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களின் பள்ளிகளை முன்னிலைப்படுத்தும் உள்நோக்கத்திலேயே இப்படியொரு காரியத்தைச் செய்திருக்கிறார்கள் ஒருங்கிணைப்பாளர்கள்” என்கிறார்கள். விவகாரம் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வரை சென்று சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

அடித்துக்கொள்ளும் அதிகாரிகள்... அமைச்சர் செய்த பஞ்சாயத்து!
கொடிகாத்த மாவட்டத்தில், மக்களுடனான தொடர்பில் இருக்கும் துறையில், ஒரே பெயரைக்கொண்ட இரு அதிகாரிகள் பணியாற்றிவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு அரசு விழா ஒன்றில் இருவருக்குமிடையே வாய்த்தகராறு ஏற்பட, உடனிருந்த அதிகாரிகள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர். அண்மையில் மீண்டும் இருவரிடையே பிரச்னை ஏற்பட்டு, இருக்கையை எடுத்து அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சென்றிருக்கிறது விவகாரம். இலைக் கட்சியின் பின்னணி கொண்ட இருவரையும் சாதிப்பாசத்தால், பணியிட மாற்றம் செய்தாராம் துறை அமைச்சர். இப்போது எலியும் பூனையுமாக அதிகாரிகள் அடித்துக்கொள்வதைப் பார்த்து, ‘ஒரே சாதிக்காரங்க இப்பிடி அடிச்சுக்கலாமா... இனிமே இது மாதிரி பிரச்னை என் காதுக்கு வரக் கூடாது’ என பஞ்சாயத்துப் பேசினாராம்.

முதல்வருக்கும் பெப்பே... ஆட்சியருக்கும் பெப்பே..!
மஞ்சள் மாவட்டத்திலுள்ள நசிந்துபோன பேரூராட்சியில், தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வீட்டுமனை விற்பனை செய்தது. அந்த லேஅவுட்டில், பொது வழித்தடத்துக்கு ஒதுக்கித் தந்த இடத்தை, திடீரென சுற்றுச்சுவர் எழுப்பி மூடிவிட்டதாம் சம்பந்தப்பட்ட நிறுவனம். இதையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு முதல்வரின் தனிப்பிரிவிலிருந்தும், மாவட்ட ஆட்சியரிடமிருந்தும் உத்தரவு வந்திருக்கிறது. உடனே, ‘மூன்று நாள்களுக்குள் வழித்தட ஆக்கிரமிப்பு அகற்றப்படும்’ என்று பதிலளித்திருந்தாராம் சம்பந்தப்பட்ட அதிகாரி. ஆனால், 50 நாள்களைக் கடந்தும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரி, முன்னதாக இது குறித்து வழக்கு தொடுத்துவிடுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு ஆலோசனை கொடுத்து கைமாறாக ‘ஸ்வீட் பாக்ஸ்’ பெற்றுக்கொண்டாராம். ஆக மொத்தம் முதல்வருக்கும் பெப்பே... ஆட்சியருக்கும் பெப்பே!