
- ஆபீஸ் பாய், ஓவியங்கள்: சுதிர்
‘ஊழலை வெளிக்கொண்டு வந்தா லைஃப் டைம் செட்டில்மென்ட்!’
அரசியல் கட்சிகளில்தான் கோஷ்டிப்பூசல் இருக்கும். ஆனால், மேற்கேயுள்ள அந்த முக்கிய மாநகராட்சியில், அதிகாரிகளுக்கு இடையேயும் கோஷ்டிப்பூசல் தலைவிரித்தாடுகிறதாம். மாஜி ‘பெல்’ அமைச்சரின் விசுவாசிகள், தற்போதைய ‘மீசை’ அமைச்சர், ‘ஷாக்’ அமைச்சரின் விசுவாசிகள் எனப் பல கோஷ்டிகள் கும்மியடிக்கின்றன. இதில் புதிய வரவாக ‘மேயர் விசுவாசிகள்’ என ஒரு கோஷ்டி உருவாகியிருக்கிறதாம். இந்தப் புதிய கோஷ்டிக்கு வடக்கு மண்டலத்திலுள்ள ஓர் அதிகாரிதான் தலைமை வகிக்கிறாராம். மேயருக்கு மாநகராட்சியின் அனைத்து நெளிவு சுளிவுகளையும் சொல்லித் தந்து, எப்படியெல்லாம் ‘அள்ளிக்குவிக்கலாம்’ என ரூட் போட்டும் தருகிறாராம். தவிர, மேயருக்கு எதிராகச் செயல்படும் தி.மு.க கவுன்சிலர்களை எப்படி காலி செய்வது என்பதற்கும் அவர்தான் பிளான் போட்டுத் தருகிறாராம். ‘மேயருக்கு எதிரா இருக்கறவங்களோட ஊழல் விவகாரங்களை வெளியில் கொண்டுவந்தா லைஃப்டைம் செட்டில்மென்ட்’ என்று `விக்ரம்’ பட ரோலக்ஸ் பாணியில், சக அதிகாரிகளிடம் பன்ச் பேசுகிறாராம் அதிகாரி!

‘‘மேடம் காசு கேட்டாங்க..!’’
‘குயின்’ மாவட்டத்திலிருக்கும் ‘ஜாயினிங் ஜங்ஷன்’ ஊரின் ‘வரும்படி’ துறையில், ஒரு பெண் அதிகாரி இருக்கிறார். அவருக்கு நேர்முக உதவியாளராக இருக்கும் ‘தலைவன்’ பெயர்கொண்டவர், ஓர் இடம் விடாமல் அனைத்துப் பக்கங்களிலும் ‘மேடம் கேட்டாங்க... மேடம் வாங்கிட்டு வரச் சொன்னாங்க’ எனச் சொல்லி கைநீட்டுகிறாராம். கூடவே துறைசார்ந்த அதிகாரிகளையும் வசூலுக்கு அனுப்புகிறாராம். ‘வழக்கமாக மேடம் பொருளாகத்தானே வாங்குவார்... இப்போது என்ன பொருளும் கொடுக்கச் சொல்லி, பின்னாலேயே ஆள்விட்டுப் பணமும் கேட்கிறார்...’ என அரசு அலுவலர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கின்றனர். இதையெல்லாம், மாவட்ட உயரதிகாரிதான் கண்டிக்க வேண்டும்.
கமிஷனில் கல்லாகட்டும் நெற்றிக்கண்ணனார்!
உப்பு மாவட்ட தாலுகா அலுவலக உயரதிகாரிக்கு, கமிஷன்களைக் கச்சிதமாகக் கொண்டுசேர்ப்பதில் முடிசூடா மன்னனாக இருந்துவருகிறார் அந்த ‘அழிக்கும்’ கடவுள் பெயர்கொண்ட அதிகாரி. கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டால், முடிக்கவேண்டியதை மின்னல் வேகத்தில் முடித்துக் கொடுத்துவிடுவாராம். மாறாக, கேட்பதைக் கொடுக்கத் தயங்கினால், நெற்றிக்கண்ணைத் திறந்து மார்க் செய்து கோப்புகளைச் சுற்றலில்விட்டு மனுதாரரைத் தலைசுற்ற வைத்துவிடுவாராம். எனவே, யாரேனும் நேரடியாக உயரதிகாரியைச் சந்தித்தாலும்கூட, “முதல்ல அவரைப் பார்த்துட்டு வந்துருங்க” என நெற்றிக்கண்ணனாரை நோக்கித் திசைதிருப்பிவிடுகிறாராம் உயரதிகாரி. இப்படியாக, உயரதிகாரி தன்மீது மலையளவு நம்பிக்கை வைத்திருப்பதைப் பயன்படுத்தி, கமிஷனில் தனியாகக் கல்லாகட்டி... உயரதிகாரியின் சொத்து மதிப்பைவிட, கூடுதலாகச் சொத்து சேர்த்துவிட்டாராம் நெற்றிக்கண்ணனார்!

‘‘காசே கொடுத்துடுறேன் ஐயா..!’’
விவசாய மாவட்டத்தின் தலைமையிடத்தில், பிளான் அப்ரூவல் பிரிவிலுள்ள தமிழ்க்கடவுள் பெயர்கொண்டவர், எட்டு வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் ஆணியடித்ததுபோல் ஸ்ட்ராங்காக இருந்துவருகிறார். வீடு கட்ட அனுமதி வாங்குவதற்காக பிளானுடன் செல்பவர்களிடம், ‘பிளான் சரியில்லை. நான் சொல்லும் நபர்கிட்ட கொடுத்து புதிய பிளான் போட்டு வாங்கிட்டு வந்தால், உடனே அப்ரூவல் ஆகிவிடும்’ எனச் சொல்லி பிளானுக்கு மட்டும் தனியாக 10,000 ரூபாயைக் கறந்துவிடுகிறாராம். பிளான் வந்த பிறகு, அப்ரூவல் செய்வதற்கு, குறைந்தபட்சம் 35,000 ரூபாய் வரை ரேட் வைத்திருக்கிறாராம். யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டால்... ‘‘நான் வாங்குற பணம் உயரதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரைக்கும் போகுது’’ எனக் குரலை உயர்த்தி டெம்ப்ளேட் டயலாக்கைச் சொல்லி மிரட்டி, ‘‘காசே கொடுத்துடுறேன் ஐயா...’’ என்று கதறும் நிலைக்குத் தள்ளிவிடுகிறாராம்.
‘‘நீங்க டூருக்கே போயிடுங்க ஜி!”
மேற்கிலுள்ள முக்கியமான மாவட்டத்தின் வனத்துறையில் பணியாற்றிவருகிறார் அந்த மருத்துவர். எல்லோரும் ஆண்டுக்கு ஓரிரு முறை சுற்றுலா செல்வது இயல்பான விஷயம்தான். ஆனால், இந்த மருத்துவரோ டி-ஷர்ட், பர்முடாஸ், தொப்பி, கூலர்ஸுடன் வருடத்தின் முக்கால்வாசி நாள்களிலும் சுற்றுலாவிலேயே இருக்கிறாராம். சுற்றுலா போரடிக்கும் சமயங்களில் மட்டும் அவ்வப்போது பணிக்கு வந்து தலையைக் காட்டுகிறாராம். பணியிலும்கூட போஸ்ட் மார்ட்டம் செய்வதில்தான் ஐயா கைதேர்ந்தவராம். இதுவரை இவர் சிகிச்சை அளித்த விலங்குகளைவிட... போஸ்ட் மார்ட்டம் செய்த விலங்குகள்தான் அதிகமாம். அப்போதும்கூட புது டி-ஷர்ட், சரக்கு என எல்லாம் ரெடியாக இருந்தால்தான் வேலைக்கே வருவாராம். இதனால் மனிதர் வேலைக்கு வந்தால், “பேசாம நீங்க திரும்பி டூருக்கே போயிடுங்க ஜி” என சக ஊழியர்கள் மைண்ட் வாய்ஸில் புலம்புகிறார்களாம்