அலசல்
சமூகம்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘நில மதிப்புக்கு ஏற்ப லட்டு!’

கொங்கு மண்டல மூன்றெழுத்து மாவட்டத்தின் ‘மங்கலமான’ தாலுகாவில் வருவாய்த்துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார் ‘சீனியர் சீரியல் நடிகை’ பெயர்கொண்ட பெண் அதிகாரி. இவர், கல்லாகட்டுவதில் பிஹெச்.டி வாங்கியிருப்பாரோ என்று சக அதிகாரிகளே முணுமுணுக்கிறார்கள். ‘சீரியல்’ அதிகாரியின் பவருக்குக் கீழே வரும் பகுதிகளில்தான் பிரதான போக்குவரத்து சாலையும் வருகிறது. இதனால், அங்கு நிலத்தின் மதிப்பு அதிகமாம். தன்னிடம் பட்டா மாறுதலுக்கு வருபவர்களிடம், நிலத்தின் மதிப்புக்கு ஏற்ப சிலபல லட்டுகளைத் தனக்கு எடுத்துவைக்கச் சொல்லி நேரடியாகவே கேட்டுவிடுகிறாராம். யாராவது முரண்டுபிடித்தால் வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பதோடு, ‘நானும் இதே மாவட்டத்துக்காரிதான். என்னை யாராலும் லேசில் அசைக்க முடியாது’ என்று ஜம்பம் காட்டுகிறாராம். தாறுமாறான வேட்டையால் தற்போது புது பங்களா வீடு, ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்று ராஜபோக வாழ்க்கை வாழ்கிறாராம் ‘சீரியல்’ அதிகாரி. தற்போது அம்மணி குறித்த புகார் முதன்மையானவரின் மேசை வரை சென்றிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

“ட்ரான்ஸ்ஃபர் போட்டுடுவேன் ஜாக்கிரதை”

‘பூட்டு’ மாவட்டத்தின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலில், ‘நோயாளிகளோ, மருத்துவமனைப் பணியாளர்களோ இந்த வழியாக வரக் கூடாது’ என போர்டு வைத்திருக்கிறார் ‘லேடி கிங்’ உயரதிகாரி. செவிலியர்கள் உள்ளிட்ட பிற மருத்துவப் பணியாளர்கள் யாரும் அவசரத்துக்குக்கூட அந்த வாசலைப் பயன்படுத்தக் கூடாது என்று கடிந்துகொள்வதோடு, எதற்கெடுத்தாலும் ‘ட்ரான்ஸ்ஃபர் போட்டுடுவேன்’ என்றும் மிரட்டுகிறாராம். இவருக்கு, பொறுப்பு அதிகாரியான ‘வீரமானவர்’ எப்போதும் பக்க துணையாம். ‘லேடி கிங்’குக்கு இவர் காட்டும் பரிவாலும், அங்கிருந்து பதிலுக்குக் கிடைக்கும் அருளாலும் ‘வீரமானவர்’ மருத்துவமனைக்குள்ளேயே தனக்கென்று ஓர் உதவியாளரையும் வைத்துக்கொண்டு, மருத்துவப் பணியாளர்களை எப்போதும் சீண்டிக் கொண்டிருக்கிறாராம். யாராவது எதிர்த்து கேட்டால், ‘மேடம்கிட்ட சொல்லி ட்ரான்ஸ்ஃபர் போட்டுடுவேன் ஜாக்கிரதை’ என்று வீரமானவரே இப்போதெல்லாம் வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் அனுப்புகிறார் என்று புலம்புகிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘காலையில் ஏழு மணிக்கு... தோட்டத்துக்கு வந்துவிடவும்!’

‘டாலர் சிட்டி’ மாவட்டத்தில் அணைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் ‘பேட்டை’ வட்டாரத்தின் வளர்ச்சியை கவனிக்கும் அலுவலராக இருப்பவர் முருகக் கடவுள் பெயர்கொண்ட அதிகாரி. ‘தான் ரொம்பவே கை சுத்தம்’ என்று காட்டிக்கொள்ளும் இவர், லே-அவுட் அனுமதி உள்ளிட்ட விண்ணப்பங்களோடு தன்னைச் சந்திக்க வருபவர்களையெல்லாம், அமராவதி அணைக்கு அருகே ‘மான்’ என்ற பெயரில் தொடங்கும் ஊரிலுள்ள தன்னுடைய தோட்டத்துக்கு வரச் சொல்லிவிடுகிறாராம். தோட்டத்தில் காலை ஏழு மணிக்கெல்லாம் இதற்காகவே நியமிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் அணைத்து விண்ணப்பங்களோடும் தயாராக இருப்பாராம். ‘நேர்மையின் சிகரமான’ முருகக் கடவுள் அதிகாரி, அரசு கொடுத்த வாகனத்தில் வந்தால் தனக்கு இழுக்கு என்று இரு சக்கர வாகனம் ஒன்றில் தோட்டத்துக்கு வந்து அங்குவைத்து எல்லோரிடமும் ‘பிரசாதங்களை’ சுத்தபத்தமாக வாங்கிக்கொள்கிறாராம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

கப்பம் வசூலிக்கும் நாற்காலி நபர்கள்!

மாங்கனி மாவட்டத்தில் கனிம வளத்துக்குப் பொறுப்பான துறையின் முக்கியப் பதவியிலிருப்பவர், ‘பிறந்ததின’த்தைப் பெயராகக்கொண்ட பெண் அதிகாரி. மண் டெண்டர் தொடர்பாக இவரின் அலுவலகத்துக்கு வரும் ஒப்பந்ததாரர்களிடம், அலுவலகத்துக்கு வெளியே தனியாக நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் இரண்டு நபர்களைச் சந்தித்த பிறகே தன்னைப் பார்க்க வருமாறு அறிவுறுத்துகிறாராம். அந்த இரண்டு நபர்கள்தான் பெண் அதிகாரியின் கப்பம் வசூலிக்கும் போர்ப்படைத் தளபதிகளாம். அரசின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத அவர்கள் கேட்கும் தொகையைக் கட்டினால் மட்டுமே பெண் அதிகாரி டெண்டர் அனுமதியில் கையெழுத்தே போடுவாராம். இந்த விஷயம் மாவட்டத்தின் முக்கிய உயரதிகாரிக்குத் தெரியவந்தும், எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

அட்மிஷனுக்குத் தக்க கமிஷன்... ஆபீஸுக்கு வராத அதிகாரி!

‘உப்பு’ மாவட்டத் தலைநகரிலுள்ள ‘கூட்டுறவு’ பேணும் சங்க அலுவலகத்தில் பணிபுரிகிறார் ‘சில்க்’ பெயர்கொண்ட மூத்த அதிகாரி. அலுவலகத்தில் இவருக்குக் கையெழுத்து போடுவது மட்டும்தான் வேலையாம். மற்ற நேரங்களையெல்லாம் ஒரு ‘தனியார் போட்டித் தேர்வு அகாடமி’யின் நிர்வாகக் காரியங்களை கவனிப்பதிலேயே செலவிடுகிறாராம். அங்கு ஒரு அட்மிஷன் போட்டால், ‘சில்க்’ அதிகாரிக்கு இவ்வளவு சதவீதம் என்று கமிஷன் வழங்கப்படுகிறதாம். அரசுப் பணியின் சம்பளத்தைவிட, அகாடமியில் கிடைக்கும் கமிஷன் கனமாக இருப்பதால், அலுவலகம் பக்கம் தலைகாட்டுவதேயில்லையாம். இவருக்கு சங்‘கீதமான’ அமைச்சர் ஒருவரின் அன்பும் ஆதரவும் இருப்பதால், சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் உயரதிகாரியே ‘சில்க்’க்கானவரை எதிர்த்து கேள்வி கேட்கத் தயங்குகிறாராம். சமீபத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில், ‘சில்க்’ அதிகாரியின் பிறந்தநாள் நிகழ்ச்சி வெகு பிரமாண்டமாக நடந்திருக்கிறது. சக அலுவலக ஊழியர்களெல்லாம் ‘டூட்டி’யை முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு புகைச்சலோடு வீடு திரும்பினார்களாம்.