அலசல்
சமூகம்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

- ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘நீ நடந்தால் நடை அழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு...’

மேற்கேயுள்ள ‘மீசை’க் கவிஞர் பெயர்கொண்ட பல்கலைக்கழகத்தின் துறை ஒன்றில் தலைவராக இருக்கும் ஜெயமான நபர், பயங்கரமான ஜொள்ளு பார்ட்டியாம். துறையின் பெண் பேராசிரியைகளிடம், ‘நீ நடந்தால் நடை அழகு... நீ சிரித்தால் சிரிப்பழகு’ என்று வழிவதோடு, தன்னுடன் அட்ஜஸ்ட் செய்து நடந்துகொள்ளுமாறு அவர்களை டார்ச்சர் செய்கிறாராம். யாராவது முரண்டுபிடித்தால் அவர்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, பணிச்சுமையை அதிகரிப்பது என விதவிதமான பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கிவிடுகிறாராம். ‘‘விஷயம் வெளியே போனா... வேலையில் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய எந்தப் பலனும் கிடைக்காது பார்த்துக்கோங்க’’ என்று ஓப்பனாகவே மிரட்டுகிறாராம் அந்த ஜொள்ளு ஹெச்.ஓ.டி!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

மனைவிக்கு மரியாதை!

‘ஜில்’ மாவட்டத் தலைநகரில் நவரச நடிகரின் பெயர் கொண்டவர் ‘பள்ளிக்கூட’ டிபார்ட்மென்ட்டில் உயரதிகாரியாக இருக்கிறார். இவர், ஒருசில என்.ஜி.ஓ அமைப்புகளுடன் கைகோத்துக்கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலிப்பது, இந்தி வகுப்புகளை நடத்த ரகசிய உத்தரவிடுவது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிவந்தவர். இந்த நிலையில், ‘நவரச’ அதிகாரி, தனது சொந்த ஊரிலுள்ள ஓர் அரசுப் பள்ளியின், பள்ளி மேலாண்மைக்குழு மூலமாகத் தன் மனைவியைத் தற்காலிக ஆசிரியைப் பணியில் நியமிக்கச் செய்து லேட்டஸ்ட் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இதற்காக, அந்த அரசுப் பள்ளியில் நிரந்தரப் பணியிலிருந்த இரண்டு ஆசிரியர்களுக்குக் கட்டாயப் பணியிட மாறுதல் கொடுத்து, திட்டமிட்டு அங்கே காலிப் பணியிடத்தை உருவாக்கி, தன் மனைவிக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கிறாராம். அனுபவம்மிக்க ஆசிரியர்களைத் தூக்கியடித்துவிட்டு, சொந்த ஊரிலேயே மனைவிக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கும் ‘நவரச’ அதிகாரிமீது தலைமை அலுவலகத்தில் புகார்கள் குவிந்துவருகின்றனவாம்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘காதல் வானிலே, காதல் வானிலே, ஓ...’

‘கொசுவலை’ மாவட்டத்திலுள்ள பரமாத்மாவின் பெயர்கொண்ட பகுதியில், வளமான துறையில் பணியாற்றி வருகிறார் ‘மைக்’ நடிகரின் பெயர்கொண்ட அதிகாரி. வேலையில் சின்சியர் சிகாமணியாகக் காட்டிக்கொள்ளும் இவர், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண் அதிகாரிகளை, ‘காதல் வானிலே, காதல் வானிலே, ஓ...’ என டூயட் பாட அழைப்புவிடுப்பதில் கில்லாடியாம். ஏற்கெனவே, பணியாற்றிய ஊரில் சக பெண் அதிகாரி ஒருவரோடு, ‘மைக்’ நடிகர் அதிகாரி செய்த லீலைகளால்தான் பணியிட மாற்றமே செய்யப்பட்டாராம். ஆனால், வந்த இடத்திலும் எழுத்தாளர் ஒருவரின் பெயரைக்கொண்ட பெண் அதிகாரியோடு அதீத ‘நெருக்கம்’ காட்டிவருகிறாராம். ஆய்வுப்பணி, சொந்த வேலை என எங்கு சென்றாலும் இரண்டு பேரும் பிரைவேட் காரில் ஒன்றாக பவனி வருகிறார்களாம். பணி நேரம் முடிந்த பிறகுகூட, ‘பணி நிமித்தம்’ என்று சொல்லி இரவு வரை அலுவலகத்திலேயே நேரம் கடத்துகிறார்களாம் இருவரும். ‘இந்த ஜோடிகளின் காதல் லீலைகள், எப்போது வேண்டுமானாலும் அம்பலமேறலாம்’ என்று கிசுகிசுக்கிறார்கள் துறை ஊழியர்கள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

ஆள் மாறாட்ட ஐடியா!

‘அவார்டு’ மாவட்ட ரயில் நிலையத்தில், துப்புரவுப் பணிக்கென நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை ரயில்வே காலனி தூய்மைப் பணிக்கு மாற்றிவிட்டு, ரயில் நிலையத்தில் அவுட்சோர்ஸிங் ஆட்களைவைத்து வேலை வாங்குவதாகச் சர்ச்சைகள் சுழல்கின்றன.

‘ஏன் இந்த ஆள் மாறாட்ட ஐடியா...’ என்று விசாரித்தால், ரயில்வே பணியாளர்கள் காலனிக்குள் நகராட்சி ஆட்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறைதான் குப்பைகளைச் சேகரிக்க வருகிறார்களாம். இதனால், ரயில்வே காலனியில் சேரும் இலைதழை, குப்பைகளை உடனுக்குடன் க்ளியர் செய்ய முடியவில்லை. ஆகவே, ரயில்வே நிரந்தரத் துப்பரவுப் பணியாளர்களைக்கொண்டு, குடியிருப்போர் காலனியை நீட்டாக வைத்துக்கொள்ளச் சொல்கிறார்களாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி!

‘இதற்கு ஒரு எண்டே இல்லையா..?’

‘புரம்’ மாவட்டத்திலுள்ள முதன்மை அலுவலக வளாகத்தில் இயங்கிவருகிறது கிராமப்புற வளர்ச்சிகளுக்கான உதவியாளரின் அலுவலகம். அங்கு பணிபுரியும் ‘லெஜண்ட்’ அதிகாரி, நினைத்த நேரத்துக்குத்தான் அலுவலகம் வருவாராம். அதாவது, முற்பகல் நேரத்தில் அலுவலகத்துக்கு வரும் ‘லெஜண்ட்’ மதிய உணவு இடைவேளைக்கு வீட்டுக்குச் சென்றால், மாலை 5 மணிக்கு மேல்தான் மீண்டும் அலுவலகத்துக்குத் திரும்புவாராம். இதனால், அலுவல் நேரங்களில் அதிகாரியைச் சந்திக்கலாம் என்று வெகு நேரம் காத்திருக்கும் ஜனங்கள், ஏமாற்றத்துடனேயே ஊருக்குத் திரும்புகிறார்களாம். அதிகாரியோ, ஆளில்லாத நேரத்தில் உட்கார்ந்து, பணியாளர்களை மாங்கு மாங்கென்று வேலை வாங்குகிறாராம்.

சில நேரங்களில் இரவு 9 மணியைக் கடந்தும் அலுவலகம் இயங்குவதால், லேட்டாக வீட்டுக்குத் திரும்பும் பெண் ஊழியர்கள், ‘இதற்கு ஒரு எண்டே இல்லையா..!’ என்று புலம்பித் தள்ளுகிறார்கள்.