அரசியல்
Published:Updated:

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

ஆபீஸ் பாய்

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

வெடக்கோழியும் வெள்ளாடும்!

மேற்கு மண்டலத்தில் அமைந்திருக்கும் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரியை ‘கொரோனாகால அதிகாரி’ என்றே அழைக்கிறார்கள். அவர் பதவியேற்று சில மாதங்களிலேயே கொரோனா முதல் அலை தொடங்கிவிட்டது. இன்னும் சில மாதங்களில் அவர் பதவிக்காலம் முடியவிருக்கும் நிலையில், அவர் செய்யும் அட்ராசிட்டிகள் கணக்கில்லை என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள். கரைவேட்டிகளின் தலையீட்டைப் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிப்பதையும், மாதத்துக்கு ஒரு கட்சி ஆட்களோடு இவர் அடிக்கும் ஸ்டன்ட்டுகளையும் பல்கலைக்கழகமே வியந்து பார்க்கிறதாம். இது ஒரு பக்கமென்றால், அவர் தங்கியுள்ள அரசு பங்களாவில் தினமும் வெள்ளாடும் வெடக்கோழியும்தான் சமைக்கப்படுகின்றனவாம். விசாரித்தால், ‘‘சரக்கு உள்ளே போனாலே தலைவர் வெள்ளாடும் வெடக்கோழியும்தான் சாப்பிடுவார்’’ என்று அதிரவைக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

நகர மறுக்கும் தனிச்செயலர்... தவிக்கும் ரங்கசாமி!

புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றுக்கொண்டவுடன் அவருக்குத் தனிச்செயலராக நியமிக்கப்பட்டார், அரசுப் பொறியியல் கல்லூரியில் இணை முதல்வராகப் பணியாற்றிய பேராசிரியர் அமுதன். ‘அவர் தனக்கென்று ஓர் அறை இருப்பதையே மறந்து, முதல்வரின் பக்கத்திலேயே வலுக்கட்டாயமாக நின்றுகொண்டிருக்கிறார்’ என்கிறார்கள். இதனால், முதல்வரின் உறவினர்களும், அலுவலக ஊழியர்களும் அப்செட்டில் இருக்கிறார்கள். அதேபோல, ‘இவரை பக்கத்துல வெச்சுக்கிட்டே உங்ககிட்ட எல்லா விஷயங்களையும் பேச முடியுமா?’ என்று அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வரிடம் வெளிப்படையாகவே புலம்பிவிட்டார்களாம். முதல்வரே நாசுக்காக அது பற்றிக் கூறியும், அங்கிருந்து நகர மாட்டேன் என அடம்பிடிக்கிறாராம் அமுதன். இதனால், தர்மசங்கடத்தில் தவிக்கிறாராம் முதல்வர் ரங்கசாமி!‘

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘கல்வி அதிகாரியே சாதி பார்க்கலாமா?’’

டெல்டா மாவட்டம் ஒன்றில், கல்வித்துறையில் பணியாற்றும் உயரதிகாரி இவர். காசு, பணத்துக்கெல்லாம் அதிகம் ஆசைப்படாதவர், சாதிப்பாசத்தில் மட்டும் மெல்ட்டாகிவிடுகிறாராம். சில மாதங்களுக்கு முன்புதான் தென்மாவட்டம் ஒன்றிலிருந்து இங்கு டிரான்ஸ்ஃபராகி வந்திருக்கிறார். இந்த மாவட்டத்தின் ஆளுங்கட்சிச் செயலாளர் எந்தவொரு சிபாரிசு செய்தாலும், அதைக் கல்வி அதிகாரி கண்டுகொள்வதில்லையாம். ஆனால், மாநகர அளவில் மட்டுமே கட்சியில் பொறுப்பு வகிக்கும் மக்கள் பிரதிநிதி வீட்டுக்கு அடிக்கடி சென்று சாதிப்பாசத்துடன் அளவளாவுகிறாராம். அதுமட்டுமின்றி, அவரது உத்தரவுகளுக்குக் கல்வி அதிகாரி அதிக முக்கியத்துவம் கொடுத்து, உடனுக்குடன் விஷயங்களைச் செய்துதருகிறாராம். இது ஒருபுறமிருக்க... துறையில் பணியாற்றும் அலுவலர்களும் ஆசிரியர்களும் இவரது வீக்னஸைப் பயன்படுத்தி காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார்களாம். ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா என்று மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கவேண்டிய கல்வி அதிகாரியே இப்படி நடந்துகொள்ளலாமா?’’ என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘அண்ணன், உன்னை வீட்டுக்கு அனுப்பிடுவார், ஜாக்கிரதை!’’

கரூர் டு திருச்சி சாலையிலிருக்கும் ஒரு யூனியனில், வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றுபவர், கல்லாகட்டுவதில் ‘பலே’ அதிகாரியாக இருக்கிறாராம். ஏற்கெனவே, பணியாற்றிய யூனியனிலுள்ள ஓர் ஊராட்சியில் பில்டிங் கட்டுவதிலும், தெருவிளக்கு அமைப்பதிலும் ஊழல் செய்ததால், பனிஷ்மென்ட்டாகத்தான் இங்கே டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இங்கேயும் அவர் ஆட்டத்தைத் தொடர்வதாக ஊழியர்கள் புலம்புகிறார்கள். ஃபைலைப் பார்ப்பதற்கு, ஃபைலைத் திருத்துவதற்கு, கையெழுத்திட்டு அந்த ஃபைலை பாஸ் செய்வதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தொகை கறக்கிறாராம். தணிக்கை செய்வது என்றால், குறைந்தது பத்தாயிரத்தைச் சுளையாகக் கேட்கிறாராம். அதோடு, அவருக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், ஊராட்சிச் செயலாளர்களையும் படாதபாடுபடுத்துகிறாராம். தான் சொல்வதைக் கேட்காத ஊழியர்களை, ‘நீ வேலை பார்க்கும் முறை சரியில்லை’ என்று ஏகத்துக்கும் டார்ச்சர் கொடுக்கிறாராம். இவரின் டார்ச்சரால், அங்கே பணிபுரியும் ஊழியர் ஒருவர் மன அழுத்தம் அதிகமாகி, அலுவலகத்திலேயே மயங்கி விழுந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இவரைப் பற்றி யார் புகார் கொடுத்தாலும், மாவட்ட அமைச்சரின் முக்கியத் தளபதி ஒருவரின் பெயரைச் சொல்லி, ‘உங்களுக்கெல்லாம் தண்ணிகாட்டத்தான் அண்ணன் என்னை இந்த யூனியன்ல பணிபுரிய வெச்சுருக்கார். இப்படியே பண்ணினா... அண்ணன், உன்னை வீட்டுக்கு அனுப்பிடுவார், ஜாக்கிரதை!’ என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறாராம். இதனால், ஊழியர்கள் பயந்துபோய் கிடக்கிறார்கள்!

ஆபீஸர்ஸ் அட்ராசிட்டி

‘‘கட்டிங் வெட்டாமல் கலெக்டரைச் சந்திக்க முடியாது!’’

வட தமிழக மாவட்டம் ஒன்றில், நிழல் ஆட்சியராக வலம்வரும் ஆட்சியரின் தனி உதவியாளரான முருகப்பெருமான் பெயர் கொண்டவர், வசூலில் கொடிகட்டிப் பறக்கிறாராம். எந்தத் துறையிலிருந்து கோப்புகள் வந்தாலும், அதில் கவர் இருந்தால்தான் கலெக்டரின் கையெழுத்துக்கு அனுப்புகிறாராம். இல்லையென்றால், மாதக்கணக்கில் அந்தக் கோப்புகளைக் கிடப்பில் போட்டுவிடுகிறாராம். ‘மாவட்டத்திலிருக்கும் இரண்டு அமைச்சர்களும் என் பாக்கெட்டில்தான் இருக்கிறார்கள்’ என்று கூறிவரும் அவர், அனைத்து டிரான்ஸ்ஃபர்களுக்கும் துறைவாரியாகத் தொகையை ஃபிக்ஸ் செய்துவைத்திருக்கிறாராம். ஊராட்சித் தலைவர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கான்ட்ராக்டர்கள், முக்கியப்புள்ளிகள் என்று யாராக இருந்தாலும் இவருக்கு கட்டிங் வெட்டாமல் ஆட்சியரைச் சந்திக்க முடியவில்லை என்று புலம்புகிறார்கள் மாவட்ட உடன்பிறப்புகள். வெளிப்படையாகப் புகார் எழுந்தும், இவரை அசைக்க முடியாததற்குக் காரணம், வசூல் தொகையில் குறிப்பிட்ட பகுதியை மூலவருக்குக் கொடுத்துவிடுவதுதானாம்!