Published:Updated:

மேத்தாவைத் துரத்திய நாய்!

மு.மேத்தா
மு.மேத்தா

பாவம், நாட்டின் நிலையை ஒப்பிட மேத்தாவுக்கு நாய்களை விட்டால் வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால், நமக்குத்தான் மேத்தா மீது கடுங்கோபம். ஆம், நாய்களைக் கேவலப்படுத்திவிட்டாரே!

தற்போது, திடீரென்று நாட்டு நாய்கள் பற்றிய பேச்சு எங்கெங்கும் சமீபகாலமாக ஒலிக்க ஆரம்பத்திருக்கிறது. அதிலும், இந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் ராஜபாளையம், சிப்பிப்பாறை என்று தமிழக நாய் இனங்களைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசி வைக்க, இந்தத் தேடல் சமூக வலைதளங்களில் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில், `நாய்கள்' என்றதுமே நம் தேடல்... 'நாய் நாடு'தான். அது, கவிஞர் மு.மேத்தா எழுதிய அற்புதமான கவிதை!

மன் கி பாத்
மன் கி பாத்

`கண்ணீர்ப்பூக்கள்', 'திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்' என்றெல்லாம் தனித்துவமான தலைப்புகளுடன் அழுத்தமான தன் தமிழ் வார்த்தைகளால் `70, 80-களின் இளைஞர்களை புதுக்கவிதைகளால் கட்டிப்போட்டவர், வீறுகொண்டு எழச்செய்தவர் கவிஞர் மு.மேத்தா. திரைப்படங்களிலும் தன் தனிமுத்திரையைப் பதித்தவர்தான் மு.மேத்தா. இன்றைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை 'பாடும் நிலா பாலு' என்று பலரும் அழைப்பதற்குக் காரணமே, 'உதயகீதம்' படத்துக்காக இவர் எழுதி, எஸ்.பி.பி பாடிய

'பாடு நிலாவே...

தேன் கவிதை...

பூ மலர...' என்கிற பாடல்தான்.

ரஜினியின் 'வேலைக்காரன்' படத்தின் அனைத்துப் பாடல்களும் மேத்தாவின் வார்த்தை வீச்சுகளில் வடிவெடுத்தவைதான். குறிப்பாக, 'தோட்டத்துல பாத்தி கட்டி' என்கிற பாடலில்

'கண்ணகி இங்க வந்தா கண்ணடிக்கும் கூட்டமுங்க...

மதுரையை எரிச்சவளே மனசு மாறக்கூடுமுங்க...'

என்றெல்லாம் வார்த்தைகளால் எரித்திருப்பார் சமூக அவலங்களை.

கவிஞர் மு.மேத்தா
கவிஞர் மு.மேத்தா

அரசியல் மற்றும் சமூக அரங்கிலும் முத்திரையைப் பதித்த அவருடைய பல்வேறு கவிதைகளில் மறக்கவே முடியாத கவிதை, `நாய்நாடு'. 90-களில் தொலைக்காட்சி கவியரங்கத்துக்காக அவர் எழுதிய அந்தக் கவிதை, இன்றைக்கும்கூட 100 சதவிகிதம் அப்படியே பொருந்திப்போகிறது. நேற்றைக்கும் இன்றைக்கும் மட்டுமல்ல, நாளைக்கும்கூட பொருத்தமான கவிதையே. மக்கள் இப்படியே இருக்கும்வரை, என்றென்றைக்கும் பொருந்திப் போகிற கவிதையாகவே இது இருக்கப்போகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

கடந்த மாதத்தில் 75 அகவையைக் கடந்திருக்கும் கவிஞர் மு.மேத்தாவிடம், இந்தக் கவிதை பற்றி நாம் கேட்க, தானே அதை அழுத்தம் திருத்தமாக வாசிக்கவே ஆரம்பித்துவிட்டார். இதோ அந்தக் கவிதை.

பின்குறிப்பு: பாவம், நாட்டின் நிலையை ஒப்பிட மேத்தாவுக்கு நாய்களை விட்டால் வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால், நமக்குத்தான் மேத்தா மீது கடுங்கோபம். ஆம், நாய்களைக் கேவலப்படுத்திவிட்டாரே!

Posted by Pasumai Vikatan on Wednesday, October 28, 2020

நாய்நாடு..!

நல்லது தோழர்களே...

நாம் இப்போது நாய்களைப் பற்றிப் பேசுவோம்.

இது நாய்களின் காலம்

நாய்களின் பொற்காலம்!

வாய்வாழ்த்துப் பாடுவதில் வல்லவர் நாம்

இன்று, நாய்வாழ்த்துப் பாடுவோம்.

நாய் வாழ்த்துதான் இப்போதெல்லாம்

இங்கே நாட்டு வாழ்த்து!

நாய்களை விரோதித்துக் கொண்டு

எவரும் நடமாடவே முடியாது.

அதனால், அன்போடு நாய்களினை

ஆராதனை செய்வோம்

நாட்டுக்குத் தேவை... நாய்களின் சேவை

ஆதலால் வீட்டுக்கொரு நாய் வளர்ப்போம்

வீதிக்கு ஒரு எலும்புக்கடை திறக்க

ஏஜென்ஸி நாம் கொடுப்போம்!

சிறந்த நாய்களுக்கு விருதளிப்போம்

சீறும் நாய்களுக்கு... விருந்தளிப்போம்

கெட்ட நாய்களுக்கு... சிலை திறப்போம்

ராஜநாய்களுக்கு... ரசிகர் மன்றம் அமைப்போம்

நாய்களின் சேவை நாட்டுக்குத் தேவை!

சகலநாய்களிடமும் சமதர்மம் காட்டுவோம்

தெருநாய்களின் துணையில்லாமல்

மாளிகை நாய்கள் வாழ முடியாது

மாளிகை நாய்களின் அருள் இல்லாமல்

தெரு நாய்களுக்கும் தெம்பு வராது

அதனால் சகல நாய்களிடமும் சமதர்மம் காட்டுவோம்!

'ஏவல் நாய்' என்று எதையும் இகழாமல்

அவை, நம் 'காவல் நாய்' என்று கௌரவிப்போம்

நாய்களின் பெருமைதனை நாடு அறிய

ஆங்காங்கே எச்சில் இலை நூலகங்கள்

ஏற்படுத்திக் கொடுப்போம்

ராஜ நாய்களுக்கு ரசிகர் மன்றம் வைப்போம்!

நாய்களை தன் வீட்டில் கட்டிவைப்போரின் கைகளில் விலங்கிடுவோம்.

என்னதான் சொந்த நாய் என்றாலும் அவற்றின் சுதந்திரத்தை பறிப்பதோ

ஏகாதிபத்தியத்தை நாம் எதிர்க்காமல் இருப்பதோ?

'சொறிநாய்' என்று இனிமேல் சொல்வதற்கு தடை விதிப்போம்.

சொறியாத நாய் எதுவோ?

'வெறிநாய்' என்று எவரும் விளிப்பதனைக் கண்டிப்போம்

வெறி இல்லா நாய் எதுவோ?

நாய் வளர்த்தல்தான் நம் தலைமுறையின் நாகரிகம் என்றுரைப்போம்.

எவரேனும் நாய்களைக் கடித்தாரேல் நாம் அவரைக் கடித்திடுவோம்.

புதுமொழி ஒன்று புனைவோம்

நாயில்லா ஊரில் நாம் இருக்க வேண்டாம்

நாயில்லா ஊரில் நாம் இருக்க வேண்டாம்

எண்ணிப்பாருங்கள்...

எதிர்காலத்தில் நாடு எப்படி இருக்கும்?

நாய்களெல்லாம் சுதந்திரமாய் நடமாடிக் கொண்டிருக்கும்

எதிர்காலத்தில் நாடு எப்படி இருக்கும்?

நாய்களெல்லாம் சுதந்திரமாய் நடமாடிக் கொண்டிருக்கும்

பாவம்...

மனிதர்கள்தான் பயந்து பயந்து பதுங்கிக் கிடப்பார்கள்!

நல்லது தோழர்களே கூட்டத்தைக் கலைப்போம்

குரைப்பது கேட்கிறதா?

நாய்களைப் பற்றி நாம் பேசக்கூடாதாம்!

இந்தக் கவிதையை மு.மேத்தா படித்து முடித்ததும், கவியரங்கத் தலைவராக இருந்த 'கவிக்கோ' அப்துல் ரகுமான், ''மேத்தா, ரெண்டு மூணு மாசத்துக்கு மலேஷியாவுக்கு போயிடுங்க. இங்க இருக்காதீங்க... கடிச்சுருவாய்ங்க'' என்று சொன்னாராம். ஆனால், 'கடி'படாமல் அவரால் தப்பிக்க முடியவில்லை. அன்றைய ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளான கல்லூரி பேராசிரியான மேத்தா, சென்னையிலிருந்து ஆத்தூர் கல்லூரிக்குத் தூக்கியடிக்கப்பட்டார்.

பின்குறிப்பு: பாவம், நாட்டின் நிலையை ஒப்பிட மேத்தாவுக்கு நாய்களை விட்டால் வேறு வழியில்லாமல் போய்விட்டது. ஆனால், நமக்குத்தான் மேத்தா மீது கடுங்கோபம். ஆம், நாய்களைக் கேவலப்படுத்திவிட்டாரே!

அடுத்த கட்டுரைக்கு