Published:Updated:

ஒமைக்ரான்: `இவர்களும் தடுப்பூசி செலுத்தியிருந்தால்..!’ -கொரோனா வார்டில் இருந்து நேரடி ரிப்போர்ட்!

ஒமைக்ரான் லைவ் ரிப்போர்ட்
News
ஒமைக்ரான் லைவ் ரிப்போர்ட்

ஒமைக்ரான் பரவல் சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பின் உண்மை நிலை தான் என்ன?

Published:Updated:

ஒமைக்ரான்: `இவர்களும் தடுப்பூசி செலுத்தியிருந்தால்..!’ -கொரோனா வார்டில் இருந்து நேரடி ரிப்போர்ட்!

ஒமைக்ரான் பரவல் சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளது, பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பின் உண்மை நிலை தான் என்ன?

ஒமைக்ரான் லைவ் ரிப்போர்ட்
News
ஒமைக்ரான் லைவ் ரிப்போர்ட்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் தினசரி பாதிப்பு 600 ஆக இருந்தது. தற்போது பரவிவரும் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிப்பு அளவு 30,000-தை தொட்டு மீண்டு 10,000-க்கும் கீழ் இறங்கியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை அதிதீவிரமாக இருந்த நேரத்தில் பாதிப்பு அளவு கிட்டத்தட்ட 36,000 தான். தற்போது ஒமைக்ரான் பரவல் ஆரம்பித்த சில வாரங்களிலேயே பாதிப்பு 30 ஆயிரத்தை தொட்டது. பாதிப்பு அளவு அதிகரித்தாலும் நோய்த் தீவிரம் குறைவாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளச் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு விசிட் அடித்தோம்.

கொரோனா இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலை

முதல் அலையின்போது என்ன நடக்கிறதென்ற பீதியில் நோயாளிகளும் மருத்துவர்களும் இங்கே உலவியதைக் கண்டிருக்கிறேன். இரண்டாம் அலை சமயத்தில் இந்த மருத்துவமனை வாசலில் பல நூறு மீட்டருக்கு ஆம்புலன்ஸ் வரிசை கட்டி நின்றதையும், மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்கோடும் கண்ணில் பயத்தோடும் மக்கள் நின்றிருந்த காட்சியையும் நான் பார்த்திருக்கிறேன். இன்றைக்கு அந்தச் சூழல் முற்றிலும் வேறாக இருந்தது. ஒரே ஒருவர் அட்மிஷனுக்காகக் காத்திருந்தார்.

சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜனின் அறைக்குச் சென்றபோது எனக்கான கவச உடையை தயாராக வைத்திருந்தார். ``பாதுகாப்பு ரொம்ப முக்கியம். என்னதான் குறைஞ்சிருச்சு, வைரஸுக்கு வீரியம் இல்லைனு பேசப்பட்டாலும் முகக்கவசம், சானிடைஸர், சமூக இடைவெளி மாதிரியான விஷயங்கள்தான் கொரோனாவை எதிர்கொள்ள உதவுது” என்று பேசியபடியே நம்முடன் நடந்தார் தேரணி ராஜன்.

ஜீரோ டிலே வார்டு
ஜீரோ டிலே வார்டு

முதலில் ஜீரோ டிலே வார்டுக்குச் சென்றோம். கொரோனா சிகிச்சைக்கு உள்ளே வரும் நபர்கள் முதற்கட்டமாக இங்குதான் பரிசோதிக்கப்படுவார்கள். அவர்களின் நோய் பாதிப்பின் அளவைப் பொறுத்து அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படும். அங்கிருக்கும் மருத்துவர்களுடன் பேசியபோது, தற்போது வரும் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இல்லாத அளவில் அல்லது லேசான தொற்று பாதிப்பு மட்டுமே இருப்பதால் பெரும்பாலான படுக்கை காலியாக இருக்கிறது என்றனர். இங்கே பரிசோதனை முடிந்ததும், இணைநோய் பாதிப்பு இருப்பவர்களை மட்டும் சிகிச்சைக்காக மற்ற வார்டுகளுக்கு அனுப்புகிறார்கள்.

அங்கிருந்து இரண்டாவது மாடியிலிருந்த ஜெனரல் வார்டுக்குச் சென்றோம், அங்கு அனைத்து வயது பிரிவினரும் சிகிச்சை பெற்று வந்தனர். பலரும் லேசான தொற்று பாதிப்பு உடையவர்களாக இருந்தனர். பெரும்பாலானோருக்கு ஆக்சிஜன் உதவி எதுவும் தேவைப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே டிரிப்ஸ் மற்றும் ஆக்சிஜன் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது. நோயாளிகளுடன் இருக்கும் உதவியாளரும் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தார்கள். உதவியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் உணவு வாங்க சென்று வருவதால், பிறகுக்கு பரவும் அபாயம் இருப்பதால் இந்த நடைமுறை இரண்டாம் அலை சமயத்திலிருந்தே கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

ரோசம்மா
ரோசம்மா

அங்கே சிகிச்சை பெற்றுவந்த ரோசம்மா என்ற 77 வயது மூதாட்டியிடம் பேசினோம். கொரோனா தொற்றுக்காக அட்மிஷன் ஆகியிருந்த அவருக்கு, சமீபத்தில்தான் கால் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. உதவியாளர் யாரும் அருகிலிருக்கவில்லை. ``இங்க ரொம்ப நல்லா பாத்துக்கிறாங்க தம்பி. இன்னும் ஒரு நாலஞ்சி நாள்ல வீட்டுக்குப் போய்டலாம்னிருக்காங்க" என்று நம்பிக்கையோடு பேசினார். முதலிரண்டு அலைகளில் லேசான காய்ச்சல் என்றாலே பயந்துபோய்ப் பேசியவர்களைக் கண்டிருந்த எனக்கு அவரது நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

அடுத்ததாக ஐ.சி.யூ வார்டுக்குள் சென்றோம். 40 வயதிலிருந்து 90 வயது மூதாட்டிவரை மொத்தம் 20 பேர் சிகிச்சையிலிருந்தார்கள். இந்த 20 பேரில் 18 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. தடுப்பூசி போடாதவர்களில் 44 வயதுடைய ஒருவர், வெண்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். நம் அருகிலிருந்த டீன் “அப்பறமா போட்டுக்கலாம்னு அசால்டா இருந்திருக்கார்” என்று நம்மிடம் சொல்ல, அந்த 44 வயதுக்காரர் நம்மிடம் மெதுவான குரலில் “இவ்ளோ சீரியஸ் ஆகும்னு நெனைக்கல சார். தடுப்பூசி போடாம விட்டதுக்கு இப்ப ரொம்ப வருத்தப்படுறேன்" என்று பேசினார்.

முதல் அலை முதல் தற்போது வரை கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டிருந்த நுரையீரல் மருத்துவர் முருகனிடம் பேசினோம். ``முதல் அலை சமயத்தில் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர்களின் பாதிப்பை விட, இரண்டாம் அலை சமயத்தில் அனுமதிக்கப்பட்டவர்களின் பாதிப்பு அளவு மிகவும் அதிகம். கடந்த வருடம் மே மாதம் இரண்டாம் அலை உச்சமாக இருந்த சமயத்தில் 2,000-க்கும் அதிகமானோர் இங்குச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 200-க்கும் குறைவான நபர்களே சிகிச்சையில் இருக்கிறார்கள். மூன்றாம் அலையில், ஒமைக்ரானில், அந்த அளவுக்குப் பாதிப்பு இல்லை. நீண்ட நாட்களாக இணை நோய் உடையவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்குத் தான் பாதிப்பு தீவிரமாக உள்ளது” என்று கூறினார்.

வெண்டிலேட்டர் சிகிச்சை பெரும் நபர்
வெண்டிலேட்டர் சிகிச்சை பெரும் நபர்

நாம் பார்த்தபோது ஐ.சி.யூ சிகிச்சையிலிருந்தவர்கள் பட்ட துயரத்தைக் கூற வார்த்தைகளே இல்லை. அவர்கள் தடுப்பூசி செலுத்தியிருந்தால் இந்த அளவுக்குத் தீவிர பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்பதை புள்ளிவிபர ரீதியாகவே நம்மிடம் மருத்துவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

‘ஒமைக்ரான் குறித்த அச்சம் தேவையில்லை என்றாலும் அலட்சியம் கூடாது!” என்ற அட்வைஸோடு நம்மை வழியனுப்பினர் அங்கிருந்த மருத்துவர்கள்!