
கண்ணீர்
உரிக்க உரிக்க கண்ணீர் வரும் என்ற நிலை மாறி, `வெங்காயம்' என நினைத்தாலே இன்றைக்கு எல்லோருக்கும் கண்ணீர் வருகிறது.

வெங்காயம் சாப்பிடாத குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவராம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். `சைவ உணவுக்காரரான நான் வாழ்நாளில் இதுவரை வெங்காயமே சாப்பிட்டதில்லை... எனக்கு வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து எப்படித் தெரியும்' என்று கேள்வி எழுப்புகிறார் குடும்பநலத்துறை மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபி. இந்த இரு அமைச்சர்களுக்கும் வெங்காயத்தின் விலை குறித்து தெரியாமல் இருக்கலாம்; நிர்மலா சொல்வதுபோலவே அதுபற்றி கவலைப்படத் தேவையில்லாமலும் இருக்கலாம். ஆனால், பா.ஜ.க என்னும் கட்சி, வெங்காய விலை குறித்து கவலைப்படவேண்டிய நிலையில்தான் உள்ளது.
அன்று டெல்லியில் கோலோச்சி இருந்த பா.ஜ.க-வை வீட்டுக்கு அனுப்பியது வெங்காய விலை உயர்வினால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிதானே? இந்த வரலாற்றை எடுத்துச் சொல்ல, அப்போது வெங்காய அரசியலால் அதிக பாதிப்புக்குள்ளான சுஷ்மா ஸ்வராஜ் இன்று உயிருடன் இல்லை. அவசரநிலை நெருக்கடிக்குப் பிறகும் இந்திராவை ஆட்சியில் அமர்த்தி ஜனதா கட்சியை வீட்டுக்கு அனுப்பியதும் வெங்காய விலை அரசியல்தானே...

இவ்வளவு இருந்தும் ஆட்சியாளர்கள் வெங்காய விலை உயர்வைப் பொருட்டாகக் கூட நினைக்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம். செப்டம்பரில் பெரிய வெங்காயம் கிலோ 50 ரூபாய் என அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது 200 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. ஹோட்டல்களில் வெங்காயம் குறைவாகச் சேர்க்கப்படும் உணவு வகைகளையே மெனுவில் சேர்க்கிறார்கள். டிபன்களுக்கு வெங்காயச்சட்னி கேட்டால் `நோ' சொல்கிறார்கள். உயர்ரக ஹோட்டல்கள் தொடங்கி தெருமுனை பிரியாணிக்கடை வரை நேற்றுவரை `தயிர் வெங்காய'த்தில் தயிரைத் தேடிக்கொண் டிருந்தவர்களுக்கு இப்போது வெங்காயத்தைத் தேடும் நிலை உருவாகியிருக்கிறது. அவள் விகடன் வாசகிகளிடமிருந்துகூட `வெங்காயம் இல்லாத சமையற்குறிப்புகளை வெளியிடுங்கள்' என்று அன்புக்கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
பருவநிலை பொய்த்துப்போவதும், அதையொட்டி வெங்காய விலை உயர்வு மற்றும் பதுக்கல் என வெங்காயத்தைச் சுற்றியே முறைகேடுகளும் சர்ச்சைகளும் அரங்கேறுவதும் இந்தியாவில் வழக்கமாகிவிட்டது.
வெங்காய விளைச்சலுக்குப் பெயர்பெற்ற மகாராஷ்டிராவில் வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதித்த அரசு, இப்போது துருக்கி, இரான் போன்ற வெளிநாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. அதேநேரத்தில் மகாராஷ்டிர விவசாயிக்கு ஒரு கிலோ வெங்காயத்துக்குக் கிடைப்பது என்னவோ 8 ரூபாய் மட்டுமே. கடைகளில் அதே வெங்காயம் 140 ரூபாய் வரை விற்பனையாவதைப் பார்த்து கதறுகிறார்கள் விவசாயிகள்.

பீகாரில் வெங்காயக் கடையில் புகுந்த கொள்ளையர் வெங்காயத்தை மட்டும் திருடிக்கொண்டு கல்லாவில் இருந்த பணத்தை விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்கு வெங்காயத்துக்கு மவுசுகூடி இருக்கிறது. இப்போது பீகாரில் நியாயவிலைக் கடைகளில் வெங்காயம் விற்கப்படுகிறது. அதை வாங்க தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. வெங்காயத்தை விற்கும் நியாயவிலைக் கடைக்காரர்கள் இந்த நெருக்கடிக்கு பயந்து தலையில் ஹெல்மெட் அணிந்துகொண்டு வெங்காயம் விற்கிறார்கள். அங்கே `ஜன் அதிகார்' கட்சியின் தலைவர் பப்பு யாதவ் தன் தலையில் வெங்காயக் கூடையை வைத்துகொண்டு வீதிவீதியாகச் சென்று கிலோ 35 ரூபாய்க்கு விற்று அரசியலாக்குகிறார். ஆந்திராவிலும் நியாயவிலைக் கடையில் அரசு வெங்காயம் விற்கிறது. கூட்டம் அலைமோத அங்கும் தள்ளுமுள்ளு. பெண்கள் வெங்காயம் வாங்க பையுடன் கூட்ட நெரிசலுக்கு நடுவே ஓடுகிறார்கள். தமிழகத்திலோ, `வெங்காயத்தைப் பதுக்குவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது' என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜு கறார் அறிவிப்பு கொடுக்கிறார். ஆனால், மலிவுவிலையில் வெங்காய விற்பனை குறித்து இதுவரை எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் எழுப்பின. காங்கிரஸுக்கு மிகப் பெரிய வெற்றி வரலாற்றை கடந்த காலத்தில் தந்திருக்கிறது வெங்காய விலை உயர்வு. 1980-ம் ஆண்டு தேர்தலின்போது ஜனதா கட்சி ஆட்சியில் வெங்காயம் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நெருக்கடிநிலைக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற இந்திரா கையில் எடுத்த தேர்தல் ஆயுதம் வெங்காயம். பிரசாரங்களில் வெங்காய மாலையோடு சென்று பங்கேற்றார். `இந்தியாவைக் காப்பாற்ற மீண்டும் இந்திராவைக் கொண்டுவாருங்கள்' என்ற முழக்கம் வைக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் வெங்காய அரசியலை வைத்து அமோகமாக அறுவடை செய்தார் இந்திரா காந்தி.
1998-ம் ஆண்டு, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் மனோகர் ஜோஷி முதல்வராக இருந்தார். அவருக்கு எதிராக வெங்காய அரசியலை கையில் எடுத்தது காங்கிரஸ். முதல்வருக்கு வெங்காயத்தைத் தீபாவளி பரிசாக அனுப்பியது.
அதே 1998-ம் ஆண்டு, டெல்லி முதல்வராக இருந்த சுஷ்மா ஸ்வராஜுக்கும் தலைவலியை ஏற்படுத்தியது வெங்காய விலை. கிலோ 5 ரூபாய் என விலையைக் கட்டுக்குள் வைப்பதாக உறுதியளித்தார் சுஷ்மா. அந்த ஆண்டு ராஜஸ்தானில் பொய்த்த பருவமழை வெங்காயம், உருளை, உப்பு என அனைத்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி டெல்லியை ஆட்டம்காண செய்தது. 1998-ம் ஆண்டு தேர்தலின்போது, `பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு அணுக்கதிர்கள் உருவாக்க வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கைப் பயன்படுத்தியதால்தான் தட்டுப்பாடு' என்றொரு குற்றச்சாட்டை முன்வைத்தது காங்கிரஸ். வெங்காய மாலைகளோடு பிரசாரத்தை மேற்கொண்ட காங்கிரஸ் டெல்லியைக் கைப்பற்றி வெற்றி மாலை சூடினார் ஷீலா தீட்சித்.
2010-ம் ஆண்டு, காங்கிரஸ் அரசுக்கு வெங்காய விலை உயர்வு கடும் நெருக்கடியைத் தந்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் முதன்முறையாக வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்ததோடு, பாகிஸ்தானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய உத்தரவிட்டார். இந்த முறை வெங்காய மாலைகளை அணிந்துகொண்டும் வெங்காயங் களையே தொப்பியாக மாட்டிக்கொண்டும் போராடி, பதிலடி கொடுத்தது பா.ஜ.க.
2013-ம் ஆண்டு தேர்தலின்போது டெல்லியில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து பா.ஜ.க-வும் ஆம் ஆத்மி கட்சியும் வேன் வேனாக வெங்காயத்தைக் கொண்டுவந்து மலிவு விலையில் விற்று நூதனப் போராட்டம் நடத்தின. 1998-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க-வின் சுஷ்மாவை எந்த ஆயுதத்தால் காங்கிரஸின் ஷீலா தீட்சித் வீழ்த்தினாரோ, அதே வெங்காய ஆயுதத்தால் இந்த முறை ஷீலாவை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

வெங்காய அரசியல் தாக்கம் இந்தியாவில் மட்டுமல்ல... சர்வதேச அளவிலும் பிரதி பலித்திருக்கிறது. அண்மையில் இந்தியா வந்திருந்த வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா ஒரு மேடையில் பேசினார். ``ஏன் என்று தெரியவில்லை... இந்தியா வெங்காய ஏற்றுமதியை செப்டம்பர் மாதம் நிறுத்திவிட்டது. நான் எங்கள் வீட்டுச் சமையற்காரரிடம், `வெங்காயத்தை அதிகம் பயன்படுத்தாதீர்கள்' என்று சொல்லிவிட்டேன். இனிமேல் இத்தகைய முடிவுகளை முன்கூட்டியே சொல்லிவிட்டு செய்தால் நன்றாக இருக்கும். திடீரென செய்யும்போது கடினமாக இருக்கிறது. இதுவரை பழகிய ஒன்றை மாற்றிக்கொள்வது எளிதல்ல’’ என்று நகைச்சுவையோடு அரசியல் முரணை முன்வைத்தார் ஷேக் ஹசினா.
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வெங்காய விலை உயர்வு குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சூலே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். `நான் பூண்டு, வெங்காயத்தை அதிகம் சாப்பிட மாட்டேன். ஆகையால் கவலையில்லை. வெங்காயம் ஒரு விஷயமே இல்லை என்கிற நிலையில் உள்ள குடும்பத்திலிருந்து நான் வந்துள்ளேன்' என்று நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் வெங்காயம் சாப்பிடவில்லையென்றால் இந்தியா முழுவதும் வெங்காயம் சாப்பிடக் கூடாதா என்கிற கேள்வி எழுகிறது. இன்னோர் அமைச்சரோ, `நான் சுத்த சைவம்... அதனால் வெங்காயம் சாப்பிட்டதில்லை' என்கிறார். அப்படியென்றால் வெங்காயம் அசைவப் பொருளா என்கிற கேள்வி எழுகிறது.
எதுவாகினும் வெங்காயம் சாப்பிடும் மக்கள்தாம் இவர்களையெல்லாம் தேர்ந்தெடுத்து மக்கள் பிரதிநிதியாக்கி இருக்கிறார்கள். `மக்களுக்கு எது தேவையோ அதை வழங்கத்தானே மக்கள் பிரதிநிதி ஆகியிருக்கிறோம்' என்பதை இந்த இரண்டு அமைச்சர்களும் மறந்துவிட்டார்கள் என்பது வெங்காய விலை அதிர்ச்சியைவிட பேரதிர்ச்சியாக இருக்கிறது.
வெங்காயத்தின் பங்கு இந்திய சமையலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
சிறையிலிருந்து வெளியே வந்த கையோடு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், `நிதியமைச்சர் நிர்மலா வெங்காயம் சாப்பிட வில்லையென்றால் அவகாடோ - அதாவது பட்டர் ஃப்ரூட் சாப்பிடுகிறாரா' என்று நையாண்டி செய்ததோடு, `ஆண்டவன் வந்துதான் இந்தியப் பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
இப்போது பெட்ரோல், டீசல் விலை போல வெங்காயத்துக்கு நாடு முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி வெங்காயத்தின் பங்கு இந்திய சமையலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.