
பலருடைய மொபைலில் டெலிகிராம் என்னும் செயலியை வைத்திருப்போம். தினசரிகளோ, புதுப்படங்களோ கள்ளத்தனமாக முதலில் வெளியாவது அங்குதான்
டெக்னாலஜி நாளுக்கு நாள் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகிறது. டெக்னாலஜி பற்றிய செய்தி்களில் பெரும்பாலும் குற்றங்களே அணிவகுக்கின்றன. குற்றங்களைப் பார்த்து வியப்படைவதைவிட, இவற்றிலிருந்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்னும் பீதியே அதிகமாக மேலோங்குகிறது. இந்திய அரசு பப்ஜி என்னும் விளையாட்டைத் தடை செய்த போதுதான் நம்மில் பலருக்கு அப்படியொரு விளையாட்டு இருக்கின்றதென்றே தெரியும். ஆனால், அதில் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறார், ஆபாசச் சொற்கள் பேசுகிறார் என மதன் என்பவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. ‘இப்படியெல்லாம் செய்ய முடியுமா’ என வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கேட்டால், ‘பப்ஜி மட்டுமல்ல, ஃப்ரீஃபையர் எனப் பல விளையாட்டுகள் இருக்கின்றன’ என அந்த உலகுக்குள் நம்மையும் இழுத்துச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம், ஏடிஎம் மெஷினிலேயே நூதனமான முறையில் பல லட்ச ரூபாயைத் திருடியிருக்கிறது ஒரு கும்பல். சில வருடங்களுக்கு முன்னால், ஏடிஎம் மெஷினையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு சென்ற திருடர்கள் எனப் படித்தபோது வந்த சிரிப்பெல்லாம் இப்போது வருவதில்லை. ஏனெனில், ‘கார்டு மேல இருக்குற 16 நம்பரச் சொல்லுங்க’ என நமக்கே வாரத்துக்கு நாலு கால் வருகிறது. ‘கிட்னி திருட சிறுவர்களை வைத்து ஒரு கும்பல் இயங்க’, நாம்தான் நம்மை வடிவேலுபோல் கோபப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது.
முன்பெல்லாம் திருட்டு நடக்கும் இடங்கள் என்பது தனியாக இருக்கும். பாதுகாப்பான இடங்கள் என்பது தனியாக இருக்கும். ‘ராத்திரி நேரத்துல அந்தப் பக்கம் ஏன் போன’ என ஆறுதலாகவாவது நாலு வார்த்தைகள் பேச முடியும். இணைய உலகில் இவை இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டதுதான் சாபக்கேடு. பலருடைய மொபைலில் டெலிகிராம் என்னும் செயலியை வைத்திருப்போம். தினசரிகளோ, புதுப்படங்களோ கள்ளத்தனமாக முதலில் வெளியாவது அங்குதான். சமூக வலைதளங்களில் பெண்கள் வெளியிடும் புகைப்படங்களை எடுத்து, அந்தப் படங்களை டெலிகிராமில் இருக்கும் அடல்ட் பக்கங்களில் பதிவேற்றி யிருக்கிறார்கள் சில விஷமிகள். ‘இப்படியெல்லாம் செய்வது தவறு’ என அந்தப் பக்கத்துக்குச் சென்று கமென்ட் செய்தாலும், ‘உங்களால் ஒன்றும் செய்ய முடியாது’ என வீராப்பாக பதில் சொல்கிறார்கள். ‘பப்ஜி’ மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிய காவல்துறை, அதில் இனி யாரும் பப்ஜி விளையாடக்கூடாது என அறிவுரை சொன்னதாகக் கூறப்படுகிறது. ‘போலீஸ் மாமா’ என ஜாலியாக கமென்ட் செய்து, அதையும் ஃபன் ஆக்கியிருக்கிறார்கள் சிறுவர்கள். வீட்டின் முகவரியைத் தேடி எடுப்பதுபோல், இணையத்தில் யாரையும் கண்டுபிடிக்க முடியாது என்னும் நம்பிக்கையே இப்படியெல்லாம் இந்த விஷமிகளைப் பேச வைக்கிறது.
கடந்த 10 மாதங்களில் சென்னையில் நடந்த பல்வேறு வகையான சைபர் க்ரைம் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? 5,117. சுமார் 3.73 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைக் காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் 119. கைது செய்யப்பட்டவர்கள் 77. ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்போல, எல்லாம் இருக்கும் இடத்தில் ஆபத்தும் கொட்டிக்கிடக்கிறது. இவற்றிலிருந்தெல்லாம் எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்வது என்பது பற்றி சென்னை மாநகர போலீஸின் அடையாறு துணை ஆணையர் விக்ரமன், நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

மேட்ரிமோனியல் இணையங்களில் எப்படி ஏமாற்றுகிறார்கள்? எப்படித் தப்பிப்பது?
“தென் சென்னையில் வசிக்கும் பெண் அவர். வயது 28. அப்பா இல்லை. அதனால், குடும்பத்தில் அவரேதான் எல்லா முடிவுகளையும் எடுத்து வந்தார். திருமண இணையதளங்களில் வரன் தேடியிருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் டாக்டர் என்று சொல்லி ஒருவன் அறிமுகமாகியிருக்கிறான். பெரிய பங்களா டைப் வீடு. சொகுசு கார் என்று... அவன் அனுப்பிய படங்களைப் பார்த்து அசந்துபோயிருக்கிறார் இந்தப் பெண். நீண்ட நாள்களாக சென்டிமென்டாகப் பேசி அசத்தியிருக்கிறான். திடீரென போன்கால்கள் கட் ஆகியிருக்கிறது. அந்தப் பெண் விசாரித்தபோது, ‘விபத்தில் சிக்கிவிட்டேன்’ என்றும் ‘பணம் தேவை’ என்றும் தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்கிறான். ‘கோடீஸ்வர வீட்டுக்கு மருமகளாகப் போகப்போகிறோம். இப்போதைக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தால் என்ன’ என்று நினைத்து வீட்டை அடகு வைத்துப் பணம் அனுப்பியிருககிறார். அடுத்து, அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை, வீடு ஏலத்திற்கு வந்துவிட்டது என்று விதவிதமான பொய்களைச் சொல்லி, பலமுறை பெரிய தொகைகளை அபேஸ் செய்துவிட்டான். இப்படியாக 25 லட்சம் வரை இழந்திருக்கிறார் அந்தப் பெண். திருமணம் பற்றிப் பேச்சு எடுக்கும்போது மட்டும் தட்டிக்கழித்திருக்கிறான். ஒருநாள் அந்த இளைஞனின் உறவினர் என்று ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டு, அந்த இளைஞன் இறந்துவிட்டதாகத் தகவல் சொல்லியிருக்கிறார். எங்களிடம் அழுதபடி வந்த அந்தப் பெண், அந்த இளைஞன் உயிரோடுதான் இருக்கிறாரா என்று கண்டுபிடித்துத் தரும்படி கேட்டார். அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்பதை அவருக்குப் புரியவைத்து நடவடிக்கை எடுத்தோம்.
நேரில் பார்க்காமலே, இணையதளம் வழியாகவே வரன் பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது. பொதுவாக ஒரு திருமணம் என்றால், மணமக்களைப் பற்றி இருதரப்பினரும் பல்வேறு கோணங்களில் விசாரிப்பது வழக்கம். அது போலவே, மேட்ரிமோனியல் இணையங்களில் வரும் வரன் பற்றியும் விசாரிக்கவேண்டும். அதையும் மீறி குற்றம் நடந்துவிட்டால், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பிரத்யேகமாக ஐ.யூ.சி.ஏ.டபிள்யூ (Investigative Units of Crime Against Women) என்கிற அமைப்பு உள்ளது. சென்னை மாநகரக் காவல்துறையைப் பொறுத்தவரையில், துணை ஆணையர் அந்தஸ்தில் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்கள் நடந்த விஷயங்களை ஒளிவுமறைவில்லாமல் பெண் அதிகாரிகளிடம் சொன்னால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறோம். ‘கோல்டன் ஹவர்ஸ்’ என்கிற முதல் 12 மணி நேரத்திற்குள் வந்துவிட்டால், குற்றவாளியைப் பிடிப்பதோடு, ஏமாந்த பணத்தையும் எங்களால் முடக்கமுடியும்.”
குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்களை மையமாக வைத்து நடக்கும் சைபர் க்ரைம் சம்பவங்கள் பற்றி..?
‘‘ஆன்லைன் விளையாட்டுகள் மிகப்பெரிய ஆபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆன்லைன் விளையாட்டுகளில் சில கிரெடிட் கார்டு இருந்தால்தான் விளையாட முடியும். அப்பா, அம்மாவுக்குத் தெரியாமல் கிரெடிட் கார்டை எடுத்து அதன் உள்விவரங்களை இணையத்தில் பதிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்தி மோசடிப் பேர்வழிகள் பெற்றோர்களின் பணத்தை அபேஸ் செய்துவிடுகிறார்கள். இது மறைமுகமாக ஏற்படும் ஆபத்து என்றால், நேரடியாகவே பல ஆன்லைன் விளையாட்டுகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் வன்முறையைத் தூண்டுவது, ஆபாசமான வர்ணனைகள் ஆகியவையும் இந்த ஆன்லைன் விளையாட்டுகளின் ஆபத்துகள்.”
குற்றங்களைத் தடுப்பதில் பெற்றோர் பங்கு என்ன?
“பெற்றோர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. இதற்காக டெக்னிக்கல் திறன்கூடத் தேவையில்லை. கம்ப்யூட்டர் இல்லாத காலகட்டத்தில் எப்படிப் பிள்ளைகளைக் கண்காணித்தீர்களோ, அதே மாதிரி இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் கண்காணித்து வந்தாலே போதும். பிள்ளைகள் கம்ப்யூட்டரில் என்ன செய்கிறார்கள், எந்த வகையான ஆப்களை டவுன்லோடு செய்து விளையாடுகிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும். பெற்றோரிடம் கன்ட்ரோல் இருக்கும்படியான அங்கீகரிக்கப்பட்ட ஆப்கள் உள்ளன. அங்கீகரிக்கப்படாத ஆப் மூலம் வரும் விளையாட்டு லிங்குகளை டவுன்லோடு செய்யவே கூடாது என்பதைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.”
போலீஸுக்கு வரும் சைபர் க்ரைம் புகார்களில் எந்தக் குற்றம் குறித்து அதிக புகார்கள் வருகின்றன?
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பது, படிப்பு தொடர்பாக இன்டர்நெட்டைப் பயன்படுத்துவது இன்றைய காலகட்டத்தில் தவிர்க்கமுடியாதது. அதேநேரம், செல்போன்களில் வரும் தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் அதை ஃபார்வேர்டு செய்துவிட்டு பிரச்னையில் சிக்கிக்கொள்பவர்கள் அதிகம். பிரபலங்கள் மீது அவதூறு செய்வது, சாதி, மதம் குறித்து வெறுப்பையும் வன்முறையும் விதைக்கும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவு செய்வது ஆகியவை குறித்த புகார்கள்தான் அதிகம்!”
ஃபேஸ்புக்கில் நூதன வழியில் இளவயதுப் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றுகிறவர்களை எப்படிப் பிடிக்கிறீர்கள்?
“இளவயதினர், முன்பின் தெரியாதவர்கள் ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். மோசடிப் பேர்வழிகள் அவர்களின் அனைத்து போட்டோக்களையும் டவுன்லோடு செய்கிறார்கள். அவற்றைத் தவறாகச் சித்திரித்து பிளாக்மெயில் செய்கிறார்கள். போலிக் கணக்கு உருவாக்கி உங்களுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் ரிக்வெஸ்ட் அனுப்புவார்கள். பிறகு, ஏதாவது காரணங்களைச் சொல்லி, உங்கள் பெயரில் மோசடிப் பேர்வழிகள், உங்கள் நண்பர்களிடம் பணம் கேட்கிறார்கள். பலரும் பணத்தைக் கொடுத்து ஏமாந்து நிற்கிறார்கள். சென்னையில் சமீபகாலமாக இந்தவகைக் குற்றங்கள்தான் அதிகமாக நடக்கின்றன. எங்களிடம் புகார் வரும்போது, அந்தப் போலிக் கணக்கைச் செயலிழக்க வைக்கிறோம். சம்பந்தப்பட்ட நபரையும் கைது செய்கிறோம்.”
இதற்கு என்னதான் தீர்வு?
“ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட்களை யோசிக்காமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது. குறிப்பாக, பெண்கள் சமூக வலைதளங்களில் எல்லோரும் பார்க்கும்படியாக புகைப்படங்களைப் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர், குடும்ப உறுப்பினர்களின் புகைப்பட விவரங்களைப் பகிர்வது, அந்தரங்கப் பேச்சுகளை இணையதளம் வழியாக அனுப்புவது போன்ற தவறுகளைச் செய்கிறார்கள். எவ்வளவு நன்றாகப் படித்தவருக்கும் ஏதோ ஓர் அறியாமை இருக்கும். மோசடிப் பேர்வழிகள் இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுகிறார்கள். நாம் ஒரு விஷயத்தைச் செய்யும் முன், அதன் விளைவுகள் பற்றிச் சிந்திக்கவேண்டும். அப்படிச் சிந்தித்தாலே, 99% சைபர் க்ரைம் நடக்காது.”

நிறைய சைபர் க்ரைம் புகார்களில் யார் குற்றவாளி, எங்கேயிருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பது கடினம் என்று சொல்கிறார்களே?
“அடையாளம் காண்பது கடினமாக இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் வகையில், தமிழகக் காவல்துறை சார்பாகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி, சென்னையில் உள்ள காவல் மாவட்டங்கள் 12-ல் சைபர் செல் டீம் வைத்திருக்கிறோம். கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் சைபர் லேப், பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்ட ஸ்பெஷல் டீம் வேலை செய்கிறது. சைபர் க்ரைம்களினால் பாதிக்கப்படுகிறவர்கள், ஆன்லைன் மூலமாக புகார் தெரிவிக்கவும் வசதிகள் உள்ளன. நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்டிங் போர்ட்டல் என்கிற இணையம் வாயிலாக புகார்களைத் தெரிவிக்கலாம். நாங்களும் துரிதமாக நடவடிக்கை எடுத்துவருகிறோம். என்னதான் இருந்தாலும், வருமுன் காப்பதுதான் சிறந்தது. அது மக்கள் கையில் உள்ளது.