
ஆன்லைன் திருமணம் நடத்தியதால் நிறைய சடங்குகள் நடத்த முடியவில்லை.
உலகையே இணையத்தில் இயங்கச் செய்திருக்கிறது கொரோனா. எல்லாமே இணையத்தில் முடியும்போது திருமணம் சாத்தியமில்லையா? அதையும் செய்துகாட்டியிருக்கிறது ஸ்ரீஜித் - அஞ்சனா ஜோடி.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாசேரியைச் சேர்ந்த ஸ்ரீஜித்; ஆலப்புழா மாவட்டம் கரிப்பாடு பகுதியைச் சேர்ந்த அஞ்சனா. அஞ்சனாவின் பெற்றோர் பணிநிமித்தமாக 1980-களில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செட்டில் ஆகிவிட்டனர். தங்கள் மகளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து ஏப்ரல் 26-ம் தேதி முகூர்த்த தேதி குறித்து வைத்திருந்தனர். ஆனால் அந்தச் சமயத்தில் ஊரடங்கு காரணமாக அஞ்சனாவால் ஊருக்கு வரமுடியவில்லை. அஞ்சனாவின் அடையாளச் சான்றுகள் அனைத்தும் லக்னோ முகவரியில் இருந்ததால் அவர்களால் அங்கிருந்து கேரளா வரமுடியவில்லை. கொரானா தடுத்தால் என்ன? 26-ம் தேதி திருமணத்தை ஆன்லைன் மூலமே நடத்தி முடித்துவிட்டார்கள்.

திருமணத்தன்று ஆலப்புழாவில் உள்ள அஞ்சனாவின் வீட்டுக்குச் சென்றார் ஸ்ரீஜித். அங்கிருந்த அஞ்சனாவின் தந்தை கஜாட்சன் ஸ்ரீஜித்தை வரவேற்றார். பின்னர் அஞ்சனாவுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்யப்பட்டது. மொபைலில் தெரிந்த அஞ்சனாவுக்கு இங்கிருந்தபடியே தாலிகட்டினார் ஸ்ரீஜித். அப்போது லக்னோவில் இருந்த அஞ்சனா தனக்குத்தானே தாலி கட்டிக்கொண்டார். குங்குமத்தை எடுத்து மொபைலில் தெரிந்த அஞ்சனாவின் உச்சி வகிட்டில் வைத்தார் ஸ்ரீஜித். அப்போது அஞ்சனா தனது வகிட்டில் குங்குமம் வைத்துக்கொண்டார். அதன்பிறகு ஸ்ரீஜித் குடும்பத்தாருக்கு மதிய விருந்து அளித்ததுடன் திருமணச் சடங்குகள் நிறைவடைந்தன. இந்தத் திருமணம் நடந்து முடிந்தபிறகுதான் அது கேரள மாநிலத்தின் முதல் ஆன்லைன் திருமணம் என்று அந்தத் தம்பதிக்கே தெரியவந்தது.

ஆன்லைனில் திருமணம் செய்துகொண்ட ஸ்ரீஜித்திடம் பேசினேன், “நான் வங்கியில் பணிபுரிந்துவருகிறேன். திருமணத்திற்குப் பெண் கேட்டு பேப்பரில் விளம்பரம் கொடுத்திருந்தோம். அதன் மூலம்தான் அஞ்சனாவுடனான திருமணம் நிச்சயம் ஆனது. அவர் லக்னோவில் ஹெச்.சி.எல் கம்பெனியில் வேலை செய்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் ஏப்ரல் 26-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்து அதற்காக ஆயிரத்திற்கும் மேல் அழைப்பிதழ்கள் அச்சிட்டிருந்தோம். கொரோனா ஊரடங்கால் திருமணம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போதுதான் என் மனைவி ஆன்லைன் திருமணம் ஐடியாவைக் கூறினார். அதுபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் பேசினோம், அவர்களும் சம்மதித்தனர். எங்கள் வழக்கப்படி பெண் வீட்டுக்குச் சென்று திருமணம் செய்வது வழக்கம். அதன்படி ஏப்ரல் 26-ம் தேதி அஞ்சனாவின் வீட்டுக்கு என் பெற்றோர் உட்பட ஏழுபேர் சென்றோம். அன்று மதியம் 12.15 முதல் 12.45 மணிக்குள் உள்ள நல்ல நேரத்தில் திருமணம் நடந்தது. மொபைலில் ஆன்லைன் வீடியோ கால் மூலம் அஞ்சனாவைத் திருமணம் செய்துகொண்டேன். ” என்றவர் கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் தனது திருமணம் எவ்வாறு நடந்திருக்கும் என்ற தன் கனவைச் சொன்னார்.

“ஆன்லைன் திருமணம் நடத்தியதால் நிறைய சடங்குகள் நடத்த முடியவில்லை. மண மேடையின் நடுவில் வாழை மரம் நட்டு வைப்போம். அதன்பின்னர் எங்கள் கையில் மஞ்சள் கயிற்றால் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கும். என் அப்பாவும் அஞ்சனாவின் அப்பாவும் சேர்ந்து சில சடங்குகள் செய்வார்கள். திருமேனி மாங்கல்ய பூஜை நடத்துவார். பின்னர் அவர் மந்திரம் சொல்ல, தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும். என் மனைவியின் கைகளை அவரின் அப்பா பிடித்து என் கைகளில் ஒப்படைப்பார். உறவினர்கள் என் மனைவிக்குப் பூ வைப்பார்கள். அப்போது நாங்கள் அவர்களுக்குத் தட்சிணை கொடுப்போம். இதுபோன்ற எந்தச் சடங்குகளும் எங்கள் திருமணத்தின்போது நடத்தமுடிய வில்லை. கொரோனா முடிந்தபிறகு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் எனத் தீர்மானித்திருக்கிறோம். அந்தச் சமயத்தில் விடுபட்ட சடங்குகளை நடத்தலாமா என ஆலோசித்தோம். இனி அதை நடத்த வேண்டாம் எனத் திருமேனி கூறிவிட்டார். எனவே இனி அந்தச் சடங்குகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. நான் மொபைலுக்குக் கட்டிய தாலியை செங்கன்னூர் மஹாதேவர் கோயிலில் சார்த்திக்கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். நூற்றுக்கணக்கான உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ எங்கள் திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் துபாயில் இருந்த என் அண்ணன்கூட இதில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. அதுமட்டுமல்ல, அஞ்சனாவை நேரில் பார்க்க முடியவில்லை என்பதும் கஷ்டமாக உள்ளது” என்றார்.

லக்னோவில் இருக்கும் அஞ்சனாவிடம் பேசினேன், “ஜனவரியில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் எங்களுக்கு வேறு சில முக்கியப் பணி வந்ததால் ஏப்ரல் மாதமென முடிவு செய்தோம். அதற்காக ஏப்ரல் 18-ம் தேதி ஊருக்கு வருவதற்காக விமான டிக்கெட் புக் செய்திருந்தோம். அந்தச் சமயத்தில் லாக்டெளன் வந்துவிட்டது. ஜோதிடர்களுடன் ஆலோசித்தபோது நிச்சயித்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது என்றார்கள். எங்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆன்லைனில் திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஸ்கைப் வழியாக முக்கிய உறவினர்கள் திருமணத்தில் இணைந்து வாழ்த்தினார்கள். லக்னோவில் பலருக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்திருந்தோம். அழைப்பிதழ் கொடுப்பதற்காகவும், திருமண ஏற்பாட்டிற்காகவும் அப்பா ஊருக்குச் சென்றார். அதன்பிறகுதான் முழுமையான லாக்டெளன் அமலுக்கு வந்தது. எனவே எங்கள் திருமணம் ஆன்லைன் மூலம் நடந்தது. அதன்பிறகுதான் இந்தத் திருமணமே ஒரு வரலாற்றுச் செய்தியாக மாறிவிட்டது என்பது தெரிந்தது” என்று சிரித்தவர், மேலும் தொடர்ந்தார்.
“லாக்டெளன் எத்தனை மாதம் தொடரும் என்று தெரியாது. எனவேதான் ஆன்லைன் திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஃபேஸ்புக்கில் ஆன்லைன் திருமணம் குறித்த கட்டுரை படித்திருக்கிறேன். ஆனால் அது இப்படி டிரெண்ட் ஆகும் என நினைக்கவில்லை. இந்தத் திருமணத்திற்கு என் உறவினர்களும் நண்பர்களும் முழு ஆதரவாக இருந்தார்கள். ஆன்லைன் திருமணம் குறித்து என் நண்பர்களிடம் கூறியபோது ‘சிறந்த மாற்று வழி’ எனப் பாராட்டினார்கள்.

நான் ஸ்கூல் படித்தது எல்லாமே லக்னோவில்தான். பெங்களூரில் மேற்படிப்பு படித்தேன். என் கணவர் கேரளத்தில் இருப்பதால் இனி கேரளத்தில் செட்டில் ஆக முடிவு செய்திருக்கிறேன். நான் வேலை பார்க்கும் கம்பெனியிலேயே கேரளத்துக்கு இடம் மாற்றலாகிச் செல்வதா, அல்லது, வேறு கம்பெனி மாறுவதா என்பது குறித்து லாக்டெளன் முடிந்த பிறகு முடிவு எடுக்க வேண்டும். திருமண நிச்சயத்திற்கு முன்பு பெண் பார்க்கும் சமயத்திலும், நிச்சயதார்த்த தினத்திலும்தான் நான் அவரை நேரில் பார்த்திருக்கிறேன். மற்றபடி ஸ்கைப்பில் அடிக்கடி பேசிக்கொள்வோம். லாக்டெளன் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்” என்றார் அஞ்சனா.அம்மி மிதிக்கவில்லை, அருந்ததி பார்க்கவில்லை, அட்சதை தூவவில்லை. ஆன்லைனிலேயே கல்யாண வைபோகமே!