அரசியல்
அலசல்
Published:Updated:

370 மரங்கள் வெட்டிக் கடத்தல்... சிக்கிய வனத்துறை அதிகாரிகள்!

மரங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மரங்கள்

மரக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தெற்கு வனச்சரகர் நவீன், வனத்துறைப் பணியாளர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம்.

வனத்தைக் காக்கவேண்டிய அரசு அதிகாரிகளே, மரங்களை வெட்டிக் கடத்திய அதிர்ச்சி சம்பவம் நீலகிரியில் நடந்திருக்கிறது!

ஊட்டி அருகிலுள்ள தீட்டுக்கல் பகுதியில் மத்திய அரசின் மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் இயங்கிவருகிறது. வனத்துறைக்குச் சொந்தமான 234 ஏக்கர் வனத்தில், குத்தகை அடிப்படையில் இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையத்தின் நோக்கமே இயற்கை வளங்களைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதுதான். ஆனால், இந்த ஆய்வு மைய வளாகத்துக்குள் இருந்த யூகலிப்டஸ், சீகை உள்ளிட்ட 370 மரங்கள் அனுமதியின்றி வெட்டிக் கடத்தப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

370 மரங்கள் வெட்டிக் கடத்தல்... சிக்கிய வனத்துறை அதிகாரிகள்!

இது குறித்து, ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஆய்வாளர் கண்ணனிடம் கேட்டபோது, “எங்கள் மையத்துக்குள் காற்று, மழையில் கீழே விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றிக்கொள்வதாக நீலகிரி தெற்கு வனச்சரகர் கேட்டிருந்தார். `உரிய ஆவணத்தைச் சமர்ப்பித்துவிட்டு மரங்களை அகற்றிக்கொள்ளுங்கள்’ என அவரிடம் தெரிவித்தேன். ஆனால், எந்த ஆவணத்தையும் தராமல், மர வியாபாரியை வைத்து பச்சை மரங்களையும் சேர்த்து வெட்டிவிட்டனர். இந்த விவகாரத்தில் எங்கள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட விஞ்ஞானிமீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்களின் மேலதிகாரிக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

370 மரங்கள் வெட்டிக் கடத்தல்... சிக்கிய வனத்துறை அதிகாரிகள்!

வனத்துறை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் கௌதமிடம் பேசியபோது, ‘‘மரக்கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தெற்கு வனச்சரகர் நவீன், வனத்துறைப் பணியாளர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். ஆராய்ச்சி மைய விஞ்ஞானிமீதும் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறோம்’’ என்றார்.

கண்ணன், கௌதம், அம்ரித்
கண்ணன், கௌதம், அம்ரித்

மாவட்டத்தில் மரங்கள் வெட்ட அனுமதி வழங்கும் குழுவின் தலைவர் பொறுப்பையும் வகித்துவரும், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றோம். “இந்த மரக்கடத்தல் குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். ஆட்சியரின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்ற அடுத்த நாளே அதிரடி நடவடிக்கை பாயத் தொடங்கியது. திருட்டு, சதிச்செயலுக்கு உடந்தை, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வனச்சரகர் நவீன் குமார், வனக்காப்பாளர் பாபு, வனவர் சசி, வேட்டை தடுப்புக் காவலர் தேவேந்திரன், ஆராய்ச்சி மையத்தின் தற்காலிகப் பணியாளர் நாகராஜ் உட்பட ஐந்து பேரை அதிரடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

கோடரிக் காம்புகள்!