பாலியல் புகார் கொடுத்ததால் பழிவாங்குகிறார்கள்... - குமுறும் ஊட்டி பெண் பேராசிரியர்!

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்றைய கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தியிடம், தர்மலிங்கம் செய்த பாலியல் துன்புறுத்தல் பற்றிப் புகார் கூறினேன்.
ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றிவருகிறார் பிரவீனா தேவி. அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய தர்மலிங்கம், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக இவர் கடந்த மார்ச் மாதம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டதுடன், தர்மலிங்கம் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், கல்லூரி கல்வி இயக்குநரகம் தர்மலிங்கத்தின் பணியிடை நீக்கத்தை ரத்துசெய்து, சத்தியமங்கலம் அரசுக் கல்லூரிக்குப் பணியிட மாறுதல் செய்திருக்கிறது. பாலியல் புகார் அளித்த பிரவீனா தேவிக்கும் பணியிட மாறுதல் உத்தரவு வந்திருக்கிறது.


ஆனால், நீதிமன்றத்தை அணுகி தனது பணியிட மாறுதலை ரத்துசெய்து மீண்டும் ஊட்டி அரசு கலைக் கல்லூரியிலேயே பணியைத் தொடர்கிறார் பிரவீனா. ஆனாலும், ‘எனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை வெளியில் சொன்னதற்காக அன்றைய கல்லூரி முதல்வரான ஈஸ்வர மூர்த்தி தொடர்ந்து டார்ச்சர் செய்துவருகிறார்’ என பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பிரவீனா தேவி.
இது குறித்து, நம்மிடம் பேசியவர், “கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அன்றைய கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தியிடம், தர்மலிங்கம் செய்த பாலியல் துன்புறுத்தல் பற்றிப் புகார் கூறினேன். அவரும் விசாரிப்பதாக உறுதியளித்தார். ஆனால், எழுத்துபூர்வமாக நான் அளித்த புகாரை ஏற்க மறுத்து, என்னைச் சமாதானப்படுத்தும் நோக்கத்திலேயே பேசினார். எனவே, காவல்துறையில் ஆரம்பித்து சி.எம் செல் வரை அனைத்து இடங்களுக்கும் எனது புகாரை அனுப்பினேன். வேறு வழியின்றி முதல்வரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதனால் என் மீது கோபமடைந்த ஈஸ்வர மூர்த்தி, இப்போது கல்லூரி கல்வி இயக்குநராகப் பதவி உயர்வுபெற்று சென்னைக்குச் சென்றுவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல வழிகளில் என்னை டார்ச்சர் செய்துவருகிறார். நான் கல்லூரிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டதாக, கௌரவ விரிவுரையாளர்களைத் தூண்டிவிட்டு எனக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யவைக்கிறார். சக பேராசிரியர்கள் யாரும் என்னுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது எனச் சொல்லி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறார். அதேநேரம் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தர்மலிங்கத்துக்கு விதிமுறையை மீறி, பணியிட மாறுதல் கொடுத்திருக்கிறார் ஈஸ்வர மூர்த்தி. நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே இப்படித் திட்டமிட்டு பழிவாங்கிவருகிறார் ஈஸ்வர மூர்த்தி’’ என்றார்.

தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பை வகித்துவரும் முதல்வர் ஈஸ்வர மூர்த்தியிடமே விளக்கம் கேட்டுப் பேசினோம், “நான் தற்போது தலைமை அலுவலகத்தில் பொறுப்பு வகித்துவருகிறேன். இது குறித்து நான் எதுவும் பேசக் கூடாது. ஊட்டி கல்லூரியில் இருப்பவர்களைச் சந்தித்து பேசிக்கொள்ளுங்கள்’’ என முடித்துக்கொண்டார்.
கல்லூரியின் தற்போதைய பொறுப்பு முதல்வர் எபினேசரிடம் பேசினோம். “தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரியில் இருப்பதாக பிரவீனா தேவி தெரிவித்திருக்கிறார். இதைக் கண்டித்தே கௌரவ விரிவுரையாளர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றபடி நாங்கள் யாரும் அவரைத் தனிமைப்படுத்தவில்லை” என்றார் சுருக்கமாக.