மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் அதிகம் நடக்கும் நாடு. அங்கிருந்துதான் உலகின் பல நாடுகளுக்குப் போதைப்பொருள்கள் கடத்தப்படுகின்றன எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில், மெக்சிகோவில் சினாலாவோ மாகாணத்தில் செயல்பட்டுவரும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவராகச் செயல்பட்டுவருபவர் ஜோகின் குஸ்மான் (Joaquin Guzman) என்கிற எல் சாப்போ (El Chapo). இவன் உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனாக அறியப்படுகிறான். அவனை அமெரிக்கா காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
அவன் கையாண்டுவந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக, அவனது மூத்த மகன் ஓவிடியோ குஸ்மான் (Ovidio Guzman) செயல்பட்டுவந்தான். இவனை மெக்சிகோ, அமெரிக்கா காவல்துறை பல ஆண்டுகளாக தேடிவந்தது. ஆனால், அவன் போலீஸில் சிக்காமல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குத் தொடர்ந்து போதைப்பொருள்களைக் கடத்திவந்தான். இந்த நிலையில், அமெரிக்க அதிகாரிகளின் உதவியோடு, கடந்த ஆறு மாதங்களாக ஓவிடியோ குஸ்மானின் நடவடிக்கைகளை மெக்சிகோ போலீஸார் ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அவன் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவனது போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், சினாலாவோ முழுவதும் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து பதற்றத்தை ஏற்படுத்திவருகின்றனர். அதோடு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாகாணம் முழுவதும் பல இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குமிடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புதுறை அமைச்சர் லூயிஸ் கிரெசென்சியோ சாண்டோவல் உறுதிப்படுத்தியிருக்கிறார். மெக்சிகோ உள்துறை அமைச்சர் அடன் அகஸ்டோ லோபஸ், " ஒவிடியோ குஸ்மான் ராணுவ ஆயுதங்களை வைத்திருந்தது, கொலை முயற்சி உட்பட பல்வேறு குற்றங்களுக்காகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.