
பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்நாடு அரசை, ஆளும் பா.ஜ.க அரசு கைவிட்டுவிட்டதனால் ஏற்பட்ட இடர்களை சரி செய்வது குறித்துப் பேசுவோம்.
தமிழகத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த சட்டப்பேரவைகளில், கம்யூனிஸ்ட்கள் இல்லாத ஒரு சபையாக கடந்த முறைதான் இருந்தது. இந்தமுறை அந்தக்குறை நீங்கியுள்ளது. அதேபோல, 2011-க்குப்பிறகு பா.ம.கவும் 2006-க்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகளும் 2001-க்குப் பிறகு பா.ஜ.கவும் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றன. 18 எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறது காங்கிரஸ். இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்கப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

கு.செல்வப்பெருந்தகை - காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர்
“நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அடுத்து தாக்கல் செய்யப்பட உள்ள நிதி நிலை அறிக்கைக்கான முன்னோட்டம். கடந்தமுறை ஆட்சி செய்தவர்கள், கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகத்தைத் தவிக்க விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதிலிருந்து தமிழகத்தை மீட்க தமிழக முதல்வர் சாதுர்யமாக ரகுராம் ராஜன் உட்பட பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களைக் குழுவாக ஒருங்கிணைத்துள்ளார். அவர்களின் ஆலோசனையின் பேரில் இந்தக் கடன் பிரச்னையிலிருந்து மீண்டு வருவதற்குரிய வழியில் தொலைநோக்குப் பார்வையுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என நாங்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்.
தற்போதைய ஒன்றிய அரசு தமிழகத்தை மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் மாநிலங்களையே கைவிட்டுவிட்டது. பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ்நாடு அரசை, ஆளும் பா.ஜ.க அரசு கைவிட்டுவிட்டதனால் ஏற்பட்ட இடர்களை சரி செய்வது குறித்துப் பேசுவோம். மது இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை எப்படி மாற்றுவது என்பது குறித்துக் கொள்கை முடிவு எடுக்கவும் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும் எனவும், சிஏஏ மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்துவோம். நிலம் இல்லாதவர்களுக்கு நிலங்களை ஒதுக்கி உரிய பட்டா வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். தமிழகம் முழுவதும் காணாமல்போன ஏரிகளை மீட்பது குறித்தும் விவாதிப்போம். ஆளும் அரசின் தோழமைக் கட்சியாக இருந்தாலும் எப்போதும் எங்கள் குரல் மக்களுக்காகவே ஒலிக்கும். மக்களுக்கு நல்லதைச் செய்தால் வரவேற்பதோடு மக்களுக்கு நல்லதைச் செய்யவும் தொடர்ந்து வலியுறுத்துவோம்.”

டி.ராமச்சந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர்
“இதற்கு முந்தைய சட்டமன்றம்போல அல்லாமல் கம்யூனிஸ்ட்கள், பா.ஜ.க., வி.சி.க எனப் பல சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் உடைய கட்சிகளை உள்ளடக்கிய பல வண்ணங்களைக் கொண்ட சட்டமன்றம் தற்போது அமைந்துள்ளது. கொள்கைகளும் சித்தாந்தங்களும் மாறுபட்டிருந்தாலும், எல்லோருமே மக்களுக்கான, ஆரோக்கியமான விவாதங்களை நடத்துவார்கள் என்ற நம்பிக்கை, முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைப் பார்த்தபோது ஏற்பட்டது.
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஒரு ஜனநாயகபூர்வமான அரசாக இருக்கிறது. 2011 முதல் 2016 வரை சட்டமன்ற உறுப்பினராக நான் பணியாற்றியிருக்கிறேன். அன்றைய சட்டமன்றத்தில் பார்த்த துதிபாடல் இப்போது இல்லை. துதிபாடல்கள் கூடாது என்று அனைத்து உறுப்பினர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாகவே கூறிவிட்டார். இது ஜனநாயகபூர்வமான அணுகுமுறை.
முதல்வரை எளிதாக அணுக முடிகிறது. மூன்று முறை முதல்வரைச் சந்தித்தோம். இடதுசாரி எம்.எல்.ஏ-க்களை அன்றைய முதல்வர் கருணாநிதி எப்படி அணுகினாரோ, அதேபோன்ற நேசத்துக்குரிய அணுகுமுறை ஸ்டாலினிடமும் இருக்கிறது. அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவராக உதயநிதி இருக்கிறார். பா.ஜ.க எம்.எல்.ஏ-வான நயினார் நாகேந்திரனுடன் ஏற்கெனவே அறிமுகம் உண்டு. அவர் என்னுடன் சகஜமாகப் பேசினார்.
தி.மு.க-வின் தோழமைக் கட்சியாக நாங்கள் இருந்தாலும், அரசின் நல்ல அம்சங்களை வரவேற்போம். மக்களின் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுவோம். தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்னைகள், சமூகநீதி, மாநில உரிமைகள், மதச்சார்பின்மை, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்னைகள், ஏழை எளிய மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றைச் சட்டமன்றத்தில் வலுவாக முன்வைப்போம்.”

அருள் - பா.ம.க கொறடா
எங்களுக்குக் கட்சி சார்பாக எந்த விருப்பு, வெறுப்பும் இல்லை. பேரவையில் நாங்கள் என்ன பேசினாலும் அது நாட்டின் வளர்ச்சியை மையமிட்டதாகத்தான் இருக்க வேண்டும் என ஐயா மற்றும் சின்ன ஐயா எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். நிதி நிலை அறிக்கை தாக்கலின்போது பா.ம.க உறுப்பினர்கள் விவசாயம் மற்றும் அதை ஒட்டிய பொருளாதார வளர்ச்சியை ஒட்டித்தான் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்ப வேண்டும் என ஆலோசனையின்போது அறிவுறுத்தியுள்ளார்கள். அதையொட்டித்தான் எங்கள் நடவடிக்கை இருக்கும். நிதி நிலை அறிக்கையின் போது வளர்ச்சிக்கு, குறிப்பாக விவசாயிகளின் வளர்ச்சிக்கு வித்திடும் விதமான அறிவிப்புகள் இல்லை என்றால் நிச்சயம் கேள்வி எழுப்புவோம்.”
நாகை மாலி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர்
“2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். அப்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர்களாக இருந்தார்கள். எம்.எல்.ஏ என்ற முறையில் அவர்களுடன் சந்தித்துப் பேசிய அனுபவம் எனக்கு உண்டு. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு கலைவாணர் அரங்கத்தில் லிப்டில் நுழைந்தேன். எனக்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்மும் லிப்டுக்குள் நுழைந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் இருவரும் வணக்கம் சொன்னார்கள். நானும் வணக்கம் சொன்னேன். மற்றபடி எதுவும் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தேன். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போடப்பட்ட வழக்குகளை தி.மு.க அரசு ரத்துசெய்துள்ளது. ஆனால், அங்கு மாணவர்கள்மீது போடப்பட்ட வழக்குகள் அப்படியே இருக்கின்றன. அதையும் ரத்துசெய்ய வேண்டும் என்று முதல்வருக்கு எங்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்து அனுப்பினார். அதற்காக முதல்வரைச் சந்தித்தேன். நான் உள்ளே போனவுடன் அமரச்சொல்லி, கடிதத்தை வாங்கிக்கொண்டு என்ன விவரம் என்று கேட்டறிந்தார். பின்னர், கவர்னர் உரைமீதான விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு பதில் அளித்தபோது, ‘தூத்துக்குடியில் மாணவர்கள் போடப்பட்ட வழக்குகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று சொன்னார். மேலும், அது பற்றி சட்டமன்றத்தில் நான் பேசியதையும் எங்கள் மாநிலச் செயலாளரின் கடிதம் பற்றியும் முதல்வர் அப்போது குறிப்பிட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில், ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு எதிர்காலத்தில் ஒரு நல்ல அரசாக அமையும் என்பதற்கான தொடக்கமாக கவர்னர் உரையைப் பார்க்கிறோம். கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்று பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் காதுகொடுத்துக் கேட்கும் பக்குவம் நம் முதல்வரிடம் இருப்பதைப் பார்க்கிறேன். இந்த அரசை ஒரு நல்ல அரசாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற அக்கறையும் கவனமும் முதல்வரிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில், ஓர் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். அரசு மேற்கொள்ளும் நல்ல விஷயங்களை மனப்பூர்வமாக ஆதரிப்போம், அதற்கு நிச்சயம் துணை நிற்போம். அதே நேரத்தில், விமர்சிக்க வேண்டியவற்றை எந்தவிதத் தயக்கமுமின்றிக் கட்டாயம் விமர்சிப்போம்.”

நயினார் நாகேந்திரன் - தமிழக பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர்
‘`முதல் கூட்டத்தொடரில், ‘ஒன்றிய அரசு’ குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினோம். ஏனெனில், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. ‘ப்ளீஸ் டேக் யுவர் சேர்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால், சேரைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டிருக்க முடியாது. அதேபோல், ஆங்கிலத்தில் ‘யூனியன்’ என்றால், தமிழில் அதற்கு ஒன்றியம் என்பதுதான் அர்த்தம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ‘ஒன்றிய அரசு என்று சொல்லக்கூடாது’ என யாருமே சொல்லவில்லை. அதேசமயம், இதுநாள் வரையிலும் மத்திய அரசு என்றே சொல்லிவந்தவர்கள் ஏன் இப்போது திடீரென புதிதாகக் கண்டுபிடித்துபோல், ‘ஒன்றிய அரசு’ எனச் சொல்ல ஆரம்பித்திருக்கிறீர்கள்? ‘எந்த அர்த்தத்தில் இப்படிச் சொல்கிறீர்கள், இதனால் என்ன லாபம் உங்களுக்கு...’ என்பதுதான் எங்கள் கேள்வி. ஆனால், எங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் முழுமையாகப் பேசவிடாமல் ஆளுங்கட்சியினரின் குறுக்கீடுகள் அதிகமாக இருந்தன. அடுத்த கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி என்னென்ன திட்டங்கள் கொண்டுவருகிறார்கள் என்பதைப் பொறுத்து, எங்கள் கொள்கை சார்ந்து செயல்பாடுகளை அமைத்துக்கொள்வோம்.
ஏனெனில், தேர்தலின்போது ‘நீட் தேர்வு தடைக்கு முதல் கையெழுத்து போடுவோம்’ என்றவர்கள், இப்போது ‘நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வோம்’ என மாற்றிச் சொல்கிறார்கள். அதேபோல், மதுவிலக்குக்காக நாங்களும் போராடுவோம் என்றவர்கள் இப்போது முதல் வேலையாக டாஸ்மாக் கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறார்கள்.
என் தொகுதியில் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி வேலைகள் மெதுவாக நடந்துவருகிறது. அதேபோல், மானூர்க் கூட்டுக் குடிநீர்த் திட்டம் நீண்டகாலமாகக் கிடப்பிலேயே கிடக்கிறது. இதையெல்லாம் நிறைவேற்றித் தருமாறு கேட்டேன். உடனே நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். இது வரவேற்கப்பட வேண்டியது!”

சிந்தனைச்செல்வன் - வி.சி.க சட்டமன்றக் குழுத் தலைவர்
‘‘கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் ஆரம்பக் கல்வியில் கூடுதல் கவனமும் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைக்க விரும்புகிறோம். ஆரம்பக் கல்வியைப் பொறுத்தவரையில் தனியார் கல்வி நிறுவனங்களை நோக்கிச் செல்லும் மக்கள், உயர்கல்வி என்று வரும்போது அரசுக் கல்லூரிகளை நோக்கி வருகிறார்கள். காரணம், அரசுப் பள்ளிகளின் தரம் என்பது படுமோசமாக வீழ்ந்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் அரசுப் பள்ளிகளை நம்பித்தான் இருக்கிறார்கள். அதனால், ஆரம்பக் கல்வியின் கட்டமைப்பை மேம்படுத்தும் முயற்சியில் அரசு உடனடியாக இறங்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறோம். அடுத்ததாக, தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை முன்னிறுத்த விரும்புகிறோம். அதேபோல, ஆக்கிரமிப்பில் இருக்கின்ற நிலங்கள், நிலமற்ற ஏழை, எளிய மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலமற்ற விவசாயிகள் உறுப்பினராகக்கூட ஆகமுடியவில்லை. அவை நிலவுடமையாளர்களுக்கானதாக மட்டுமே இருக்கிறது. அது மாற்றப்பட வேண்டும். வேளாண் வளர்ச்சி என்பது நிலமற்ற விவசாயிகளையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம்.
சட்டமன்றத்தில் முதல்வரின் அணுகுமுறை பக்குவமாகவும் முதிர்ச்சியாகவும் இருப்பதால் சபையின் இறுக்கம் தளர்ந்து என்னைப்போல முதல்முறை உறுப்பினரானவர்கள் சுதந்திரமாக உரையாற்றமுடிகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எழுந்து நின்றுதான் முதல்வர் வணக்கம் தெரிவிக்கிறார். அந்த உடல்மொழியில் ஜனநாயகமும் தோழமையும் தெரிகிறது. அதேபோல, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும்கூட மிகவும் கண்ணியமாக நடந்துகொள்வது எங்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.’’