Published:Updated:

ராமநாதபுரம்: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்; களேபரத்தில் முடிந்த ஆலோசனைக் கூட்டம் - நடந்தது என்ன?

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது...
News
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது...

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாற்காலிகளை வீசி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Published:Updated:

ராமநாதபுரம்: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல்; களேபரத்தில் முடிந்த ஆலோசனைக் கூட்டம் - நடந்தது என்ன?

ராமநாதபுரத்தில் அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நாற்காலிகளை வீசி ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது...
News
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது...

ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி அளவிலான அ.தி.மு.க சார்பில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் எம்.ஏ,முனியசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கி நிர்வாகிகள் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென கூட்டத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர், `ஓ.பி.எஸ் வாழ்க’ என்றும், `ஒற்றைத் தலைமையை ஏற்க மாட்டோம்’ எனவும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும், நாற்காலிகளைத் தூக்கி மேடையில் இருந்தவர்கள் மீது சரமாரியாக வீசி எறிந்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் பதிலுக்கு அவர்கள்மீது நாற்காலிகளைத் தூக்கி எறிந்ததால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் உருவானது.

நாற்காலிகள் வீசி எறியப்படும் காட்சி
நாற்காலிகள் வீசி எறியப்படும் காட்சி

இந்த மோதலில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அதிமுக கிளைச் செயலாளர் மணிபாரதி, மற்றொரு நிர்வாகி புத்தேந்தல் சந்திரன் ஆகியோருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செல்வராஜ், தியாகராஜன் ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் நான்கு பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். தொடர்ந்து திருமண மண்டபத்துக்கு வெளியிலும் சென்று நாற்காலிகளை வீசி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.

உடைக்கப்பட்ட கார் கண்ணாடி
உடைக்கப்பட்ட கார் கண்ணாடி

அப்போது வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளின் கார் கண்ணாடிகளும் கல்வீசி உடைக்கப்பட்டன. இதனால் புதிய பேருந்து நிலைய சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணி மேற்கொண்ட போலீஸார் மோதலில் ஈடுபட்ட அ.தி.மு.க-வினரைச் சமாதானப்படுத்தி மீண்டும் மண்டபத்துக்குள் அனுப்பிவைத்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க கட்சியை வழிநடத்த, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே கூட்டத்தில் மோதலைத் தூண்டியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனைக் கண்டித்தும், அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சியின் தலைமைக்கு பரிந்துரை செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி, நகரச் செயலாளர் பால்பாண்டி ஆகியோர் கேணிக்கரை காவல் நிலையத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் கலவரத்தை ஏற்படுத்திய அவரின் ஆதரவாளர்கள்மீது புகார் அளித்தனர்.

மண்டபத்திலிருந்து சாலையில் வீசி எறியப்பட்டிருந்த நாற்காலிகள்
மண்டபத்திலிருந்து சாலையில் வீசி எறியப்பட்டிருந்த நாற்காலிகள்

இது குறித்து நகரச் செயலாளர் பால்பாண்டி நம்மிடம் பேசியபோது, ``இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டு அனைத்து நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கூட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஓ.பி.எஸ் ஆதரவாளான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய அடியாட்களை ஏவி கூட்டத்தைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் இந்தத் தகாத செயலைச் செய்திருக்கிறார். கூட்டத்தில் நாற்காலிகளை வீசி கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் எப்போதும் உடனிருப்பவர்கள். இதைச் செய்யத் தூண்டியது மணிகண்டன் என்பது கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தது. இதனால் அனைவரின் ஒருமித்த கருத்தாக அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பியிருக்கிறோம். மேலும் அவர்மீது போலீஸிலும் புகார் அளித்திருக்கிறோம்” என்று கூறினார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் இது குறித்து நாம் கேட்டபோது, ``ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை. நானும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது அங்கு நடைபெற்ற வன்முறைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?

வடைகள் சிதறடிக்கப்பட்டுள்ள காட்சி
வடைகள் சிதறடிக்கப்பட்டுள்ள காட்சி

ராமநாதபுரத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் இது போன்ற மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கும் நான்தான் பொறுப்பா... அவர்கள் கொடுத்துள்ள புகாரை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்று தெரிவித்தார்.