Published:Updated:

மகனுக்காக எந்த லெவலுக்கும் செல்லும் ஓ.பி.எஸ்-ஸின் 'அமாவாசை' அரசியல்!

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

தீர்மானத்தைக் கொண்டு போய் சசிகலா கரங்களில் அளித்து, 'தலைவியே தலைமையேற்க வா' எனச் சொல்லிவிட்டு... சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்றபோது காலில் விழுந்து வணங்கிவிட்டு...

ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் மகனுக்காகத் தேர்தல் சீட்டைப் பன்னீர்செல்வத்தால் வாங்க முடியவில்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக மாறிய பிறகுதான் தேனித் தொகுதியை எடுத்துக் கொள்ள முடிந்தது. எல்லாத் தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தோற்றாலும் தேனியில் மட்டுமே ஜெயிக்கிறது என்றால், அது பன்னீர்செல்வம் போட்ட சூத்திரம்.

மகன் 'மக்கள் பிரதிநிதி' ஆகிவிட்டார். அடுத்து அவரை மந்திரி ஆக்குவதற்காக டெல்லிக்குப் படையெடுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். மகனுக்குப் பட்டாபிஷேகம் சூட்டுவதற்காக அவர் நடத்தும் மூவ் முன்னேற்றம் பெறாத நிலையில், சமீபத்தில் டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருக்கிறார். வழக்கமான சந்திப்பு என இதைக் கடந்து சென்றுவிட முடியாது. வேலூர்த் தொகுதி தேர்தல், முத்தலாக் தடை மசோதா விவகாரங்களோடு இந்தச் சந்திப்பு முடிச்சுப் போடப்படுகிறது.

மகனுக்காக எந்த லெவலுக்கும் செல்லும் ஓ.பி.எஸ்-ஸின் 'அமாவாசை' அரசியல்!

மகனை ஜெயிக்க வைத்து, தன் தொகுதிக்குள் செல்வாக்கையும் நிலைநிறுத்தும் பன்னீர்செல்வத்தின் அரசியலுக்குப் பதிலடி கொடுக்க நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான், வேலூரில் எப்படியாவது ஏ.சி.சண்முகம் ஜெயித்துவிட வேண்டும் எனக் களமாடுகிறார் எடப்பாடி. இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் ஜெயித்தால், மக்களவையில் அ.தி.மு.க-வின் எம்.பி-க்கள் எண்ணிக்கை இரண்டாக உயரும். ரவீந்திரநாத் குமாரைவிட ஏ.சி.சண்முகம் சீனியர். ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டணிக் கட்சியில் இருக்கும் இரண்டு எம்.பி-க்களுக்கும் மந்திரி பதவியை அளிப்பது சாத்தியமில்லை. எனவே ஏ.சி.சண்முகத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்பது எடப்பாடியின் கணக்கு. ஆனால் 'தன் மகனுக்கு ஏ.சி.சண்முகம் போட்டியாக வந்துவிடக் கூடாது' என நினைக்கிறார் பன்னீர். அவர் கணக்குப்படி வேலூரில் ஏ.சி.சண்முகம் தோற்க வேண்டும். அப்போதுதான் மகனுக்கு ரூட் கிளியர் ஆகும்.

'ஏ.சி.சண்முகத்தைவிட என் மகன்தான் பி.ஜே.பி-க்கு பெட்டராக இருப்பான்' என்பதை முத்தலாக் தடை மசோதாவில் வெளிப்படுத்தியும் விட்டார் பன்னீர்செல்வம். "முத்தலாக் மசோதா, பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமைகளையும், நல்வாய்ப்புகளையும் ஈட்டித்தரும். பாலின சமத்துவத்துக்கு, இந்த முத்தலாக் சட்டத் திருத்த மசோதா மேலும் வலுச்சேர்க்கும்" என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் ரவீந்திரநாத்.

முத்தலாக் மசோதாவை ரவீந்திரநாத் ஆதரித்துப் பேசுவதற்கு சரியாக 211 நாள்களுக்கு முன்புதான், அந்தச் சட்டத்தை அதே நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா எதிர்த்துப் பேசினார். கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்த்துவிட்டு இந்த நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசுவது எவ்வளவு பெரிய முரண்பாடு. கட்சிக்கு ஒரு கோட்பாடு, நாடாளுமன்றத்தில் வேறு நிலைப்பாடு எப்படி இருக்க முடியும்?

பழிவாங்கல்கள், துரோகங்கள் அரசியலின் அரிச்சுவடிகள். ஆனால், சொந்தக் கட்சியின் கொள்கைகளுக்கே குழி வெட்டுவதன் மூலம் பதவிக்கான 'தர்ம யுத்தம்' தொடர்கிறது.

வேலூர்த் தொகுதியில் அடங்கியிருக்கும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். வேலூரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதற்காக வேலூர்க் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முஹம்மது ஜானை ராஜ்யசபா எம்.பி ஆக்கினார் எடப்பாடி. முஸ்லிம்களின் ஓட்டுகளைக் குறி வைத்து எடப்பாடி நடத்திய சாணக்கியத்தனத்தை முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு அளித்து சுக்கு நூறாக்குகிறார் பன்னீர்செல்வம்.

ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் தன் கட்சியால் எதிர்க்கப்பட்ட முத்தலாக் தடை மசோதாவைப் பன்னீர்செல்வத்தின் மகன் ஆதரிக்கிறார் என்றால் அதற்கு ஆயிரம் அர்த்தங்களைத் தேட வேண்டியதில்லை. அஜென்டா ஒன்றுதான். பழிவாங்கல்கள், துரோகங்கள் அரசியலின் அரிச்சுவடிகள். ஆனால், சொந்தக் கட்சியின் கொள்கைகளுக்கே குழி வெட்டுவதன் மூலம் பதவிக்கான 'தர்ம யுத்தம்' தொடர்கிறது.

தர்மயுத்தத்தால் பன்னீர்செல்வம் சாதித்தது அனைத்தும் சுயநலம்தான். பொதுக்குழுவில் சசிகலாவைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யும் தீர்மானத்தை வழிமொழிந்துவிட்டு... 'சசிகலா தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்றுவோம்' எனப் பொங்கிவிட்டு... தீர்மானத்தைக் கொண்டு போய் சசிகலா கரங்களில் அளித்து, 'தலைவியே தலைமையேற்க வா' எனச் சொல்லிவிட்டு... சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்றபோது காலில் விழுந்து வணங்கிவிட்டு... அவர் முதல்வர் ஆவதற்காகப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என இத்தனையையும் 'சின்னம்மாதாசனாக' மாறி நடத்திவிட்டு, "சசிகலா தலைமையை யாரும் ஏற்கவில்லை" என ஜெயலலிதா சமாதியில் பொங்கியது அசல் 'அமாவாசை' அரசியல்.

மகனுக்காக எந்த லெவலுக்கும் செல்லும் ஓ.பி.எஸ்-ஸின் 'அமாவாசை' அரசியல்!

தர்மயுத்தத்துக்கு ஆதரவு திரட்ட பன்னீர் பயணம் கிளம்பியபோது காஞ்சிபுரத்தில், "தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும்" என்றார். ஆட்சியே போகும் எனச் சொல்லிவிட்டு, அதே ஆட்சியில் துணை முதல்வராக அமர்வது எல்லாம், வேற லெவல். தன் பதவிக்காகத் தன் ஆதரவாளர்களை விட்டுக்கொடுத்த பன்னீர், இப்போது தன் மகன் பதவிக்காகத் தன் கட்சியையே விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறார்.

> முழுமையான கட்டுரைக்கு ஆனந்த விகடன் இதழை நாடுங்கள். ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு