
ஸ்டிரீம் பாய்
LUDO (HINDI)


ரேட்டிங் - 3/5
ஹைப்பர்லிங்க் சினிமாக்கள் இந்திய அளவிலேயே மிகவும் குறைவு. அதிலும் ஹிட் ஆவது வெகு சொற்பம்தான். இந்தப் பட்டியலின் லேட்டஸ்ட் என்ட்ரி அனுராக் பாசுவின் ‘லூடோ.’ கிட்டத்தட்ட நூறாண்டுகளாக சினிமாவில் பேசப்படும் அதே ‘எது தர்மம் - எது அதர்மம்’ வகைக் கருதான். ஆனால், அதை லூடோ ஆட்டத்தைப்போல நான்கு கதைகளாக வெவ்வேறு மூலைகளிலிருந்து தொடங்கி, நடுநடுவே ஒன்றை மற்றொன்று கடக்க, இறுதியாக சுபம் போட்டு முடிக்கிறார் அனுராக். அபிஷேக் பச்சன், ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி, பாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா என நடிகர்கள் தேர்விலேயே பாதிக் கிணறு தாண்டிவிட்டார் இயக்குநர். மீதிக்கிணறு தாண்ட நகைச்சுவை நிறையவே கைகொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவும் அனுராக்கே செய்திருப்பதால் கலர்புல்லாய் மின்னுகின்றன காட்சிகள். சில க்ளிஷேக்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு ஜாலியான கமர்ஷியல் காமெடி படம் இந்த லூடோ. ஆனால், வசனம் மற்றும் சில காட்சிகளுக்காக இது வயது வந்தவர்களுக்கு மட்டும்.
The Crown (season- 4)


ரேட்டிங்- 3.75/5
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் தற்போதைய மகாராணி, இரண்டாம் எலிசபெத். 94 வயதான இவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு நெட்ப்ளிக்ஸ் பிரமாண்டமாகத் தயாரித்துவரும் தொடர் ‘தி கிரௌன்.’ இதன் நான்காவது சீசன் வெளியாகியிருக்கிறது. சமீபத்திய பிரிட்டன் வரலாற்றின் மிக முக்கியப் பக்கங்களைப் புரட்டுகிறது இந்த சீசன். ‘அயர்ன் லேடி’ என்று அழைக்கப்படும் பிரிட்டனின் முதல் பெண் பிரதமரான மார்கரெட் தாட்சரின் எழுச்சி, இளவரசியான பிறகு டயானா சந்திக்கும் சிக்கல்கள் எனப் பாதி உண்மையும் பாதி கற்பனையும் கலந்து கதை சொல்லியிருக்கிறார்கள்.
இந்தத் தொடரின் பெரும்பலமாக இருந்துவருவது இதன் நடிகர்கள்தான். இந்த சீசனிலும் அது தொடர்கிறது. புதிதாக இணைந்திருக்கும் கிளியன் ஆண்டர்சன் மார்கரெட் தாட்சராக தேர்ந்த நடிப்பை வெளிப் படுத்தியிருக்கிறார். இளம்வயது டயானாவின் உடல் மொழியை அப்படியே திரைக்கு எடுத்துவந்திருக்கிறார் எம்மா கோரின். மற்ற சீசன்களைவிட இந்த சீசன் விறுவிறுப்பாகவும் செல்கிறது. பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ஒரு ராயல் விசிட் அடிக்க நினைப்பவர்கள் இந்த சீசனை தாராளமாகப் பார்க்கலாம்.