தேனி மாவட்டம், கம்பத்தில் அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளான முன்னாள் எம்.எல்.ஏ ராமராஜ், கூடலூர் நகரச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்லத் திருமண விழா கம்பத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இன்று காலை 8 மணிக்கு தேனி வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலைப் பிரிவில் எடப்பாடி பழனிசாமி வருகையின்போது, கேரள செண்டை மேளங்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், தமிழ் பாரம்பரிய கலைகளான மேளதாளங்கள் முழங்க, நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்ப மரியாதை அளிக்க, உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாள் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ``எனக்கு தேனி மாவட்டத்தில் மிகவும் சிறப்பான, எழுச்சியான உற்சாகமாக வரவேற்பளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். குறிப்பாக ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற அவர்கள் கனவை மெய்ப்பிக்க வேண்டும். நம்முடைய வழி தனி வழியாக இருக்க வேண்டும். நேர்மையான வழியாக இருக்க வேண்டும். அந்த இருபெரும் தலைவர்களின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை சிக்கலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக ஒபிஎஸ் சொந்த மாவட்டமான தேனிக்கு வந்தார். இதனால் அவருடைய வருகை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், திருமண விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி மணமக்களுக்கு வாழ்த்து மட்டும் கூறிவிட்டு கிளம்பினார்.

இது குறித்து அதிமுக-வினரிடம் பேசினோம். ``ஈரோடு இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணி குறித்தும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் எவ்வித கருத்துகளை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி இருக்கிறார். ஆனால், சூசகமாக தனி வழியில் செல்ல வேண்டும் என்பதை மட்டும் கூறிவிட்டு அரசியல் பேசாமல் மணமக்களை மட்டும் வாழ்த்திவிட்டுச் சென்றார்” என்றனர்.