நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நபர்கள்மீது கைது நடவடிக்கை எடுத்துவருகிறது வேலூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த ஓராண்டுக்கு முந்தைய ‘காரீப்’ பருவத்தின்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து குறைந்தளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, வியாபாரிகள் மற்றும் ஏஜென்டுகளிடமிருந்து அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்கியதைபோலவே உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலியாக ரசீது தயாரித்தும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கு உள்ளூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் உதவியாக இருந்திருக்கிறார்கள். வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு நெல் மூட்டைக்கும் தலா 5 ரூபாய் கமிஷன் பெற்றிருக்கிறார்கள். இதுபற்றிய புகார்கள் ஆதாரங்களுடன் வேலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு கிடைத்தது. இது தொடர்பாக, ஏற்கெனவே சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் உட்பட 30 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல்பாண்டியன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி குமரவேல் ஆகிய இருவரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் தி.மு.க பிரமுகரான குமரவேல்பாண்டியன் (51) என்பவர் நெமிலி தாலுகா சிறுகரும்பூர் பகுதியின் கிளைச் செயலாளராக ஆளுங்கட்சியில் பொறுப்பு வகிக்கிறார்.

குமரவேல்பாண்டியன், அவரது மனைவி, மகன், உறவினர்கள் பெயரில் போலி சிட்டா, அடங்கல் பெற்று சிறு, குறு விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்மூட்டைகளை வாங்கி, அவற்றை சிறுகரும்பூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்றுவந்திருக்கிறார். அவற்றின் மூலம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அவர் பெற்றிருக்கிறார். இவரைப் போலவே கைது செய்யப்பட்டிருக்கும் கிராம நிர்வாக அதிகாரி குமரவேல், 2020-ல் பெருமூச்சு கிராமத்தில் பணியிலிருந்தபோது, பலருக்கும் போலி சிட்டா, அடங்கல் வழங்கி, பெருமளவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பல மோசடி பேர்வழிகளையும் வலைவிரித்துப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைது படலமும் வேகமாக தொடர்வதால், முறைகேட்டில் தொடர்புடைய பலரும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.