அரசியல்
அலசல்
Published:Updated:

யார் கட்டுப்பாட்டிலும் இல்லை பத்மநாபபுரம் கோட்டை! - 65 ஆண்டுகளாக என்ன செய்தது தமிழக அரசு?

பத்மநாபபுரம் கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
News
பத்மநாபபுரம் கோட்டை

ஸ்ரீபத்பநாப சுவாமிக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எழுதிவைத்துவிட்டு, பத்மநாப சுவாமிதாசனாக (வேலையாளாக) மன்னர்கள் ஆண்டுவந்தார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத்தலம் பத்மநாபபுரம் அரண்மனை. திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி, கோயில்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பத்மநாபபுரம் நகரத்தைச் சுற்றி, கம்பீரமாகக் கோட்டை மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவற்றில் பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது; பத்மநாபபுரம் கோட்டையோ தமிழ்நாடு வசமுள்ளது. ஆனால், அந்தக் கோட்டை எந்தத் துறையின் கீழும் இல்லை என்று வந்திருக்கும் தகவல்தான் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது!

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால், சமீபத்தில் பத்மநாபபுரம் கோட்டைச்சுவர் சுமார் 200 அடி தூரம் தகர்ந்து விழுந்தது. இடிந்து விழுந்த பகுதியைப் புனரமைப்பதற்காக மனு கொடுக்க மக்கள் விசாரித்தபோதுதான், பத்மநாபபுரம் கோட்டை, அரசின் எந்தத் துறையின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

யார் கட்டுப்பாட்டிலும் இல்லை பத்மநாபபுரம் கோட்டை! - 65 ஆண்டுகளாக என்ன செய்தது தமிழக அரசு?
யார் கட்டுப்பாட்டிலும் இல்லை பத்மநாபபுரம் கோட்டை! - 65 ஆண்டுகளாக என்ன செய்தது தமிழக அரசு?

பழைமையான இந்தக் கோட்டையின் பல இடங்களில், சுவரின் அடிப்பகுதி சிதிலமடைந்து எந்நேரமும் விழலாம் என்கிற ஆபத்தான நிலையில் உள்ளது. கோட்டையின் அடிப்பகுதியில் கற்கள் குறுக்காகப் போடப்பட்டுள்ளன. இதை `ஆணிக்கல்’ என்கிறார்கள். மதில் சுவரின் உள்ளும் புறமும் கருங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. நடுவில் சுட்ட செங்கற்கள், ‘கும்மாயம்’ எனப்படும் சுண்ணாம்பு கலவைகொண்டு நுணுக்கமாகக் கோட்டைச் சுவர் கட்டப்பட்டுள்ளது. பெரிய கருங்கற்களால் கட்டப்பட்டபோது, இடையில் சிறிய கற்கள் எதுவும் சொருகப்படவில்லை. ஒவ்வொரு கல்லும் சிற்பிகளால் செதுக்கப்பட்டு, யானைகள் உதவியுடன் வரிசையாக அடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். கல் கோட்டையின் மேற்பகுதியில் பதுங்கியிருந்து, வெளியிலிருந்து வரும் எதிரிகளைத் தாக்க வசதியாகச் சிறு இடைவெளிகளும், அதில் வீரர்கள் நிற்கத் தோதான இடமும் உள்ளன. சுமார் 20 அடி உயரமுள்ள இந்த மதில் சுவரின்மீது பல்வேறு இடங்களில் ஏராளமான மரங்கள் வேர்விட்டு வளர்ந்து, சுவர்கள் ஆங்காங்கே பிளந்து நிற்கின்றன.

1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அப்போது பத்மநாபபுரம் அரண்மனை, கேரள அரசு வசம் சென்றது. மற்ற இடங்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், 65 ஆண்டுகள் கடந்த நிலையில், கோட்டை விஷயத்தில் தமிழக அரசு ‘கோட்டைவிட்டுவிட்டதோ’ என்று சந்தேகம் எழும் வகையில் அது எந்தத் துறையின் ஆவணத்திலும் இடம்பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

இது பற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஜெயசங்கர், “ஸ்ரீபத்பநாப சுவாமிக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை எழுதிவைத்துவிட்டு, பத்மநாப சுவாமிதாசனாக (வேலையாளாக) மன்னர்கள் ஆண்டுவந்தார்கள். முந்தைய காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம், ‘வேணாடு’ என்று அழைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகள் மற்றும் திருவனந்தபுரம்தான் அந்த சமஸ்தானத்தின் எல்லை. மார்த்தாண்டவர்மா பத்மநாபபுரம் கோட்டையைக் கட்டிய பிறகுதான் கொச்சி வரையுள்ள இடங்களைப் பிடித்து, சமஸ்தானத்தை விரிவுபடுத்தினார்.

யார் கட்டுப்பாட்டிலும் இல்லை பத்மநாபபுரம் கோட்டை! - 65 ஆண்டுகளாக என்ன செய்தது தமிழக அரசு?
யார் கட்டுப்பாட்டிலும் இல்லை பத்மநாபபுரம் கோட்டை! - 65 ஆண்டுகளாக என்ன செய்தது தமிழக அரசு?

பத்மநாபபுரம் அரண்மனையைப் போலவே கோட்டையும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னம்தான். கேரள அரசு அரண்மனையைப் பராமரித்து, சுற்றுலா மூலம் வருவாய் ஈட்டுகிறது. ஆனால், தமிழகம் வசமுள்ள கோட்டைச் சுவர்கள் பராமரிப்பு இல்லாமல், மழையில் இடிந்து விழுந்திருக்கின்றன. கோட்டைக்குள் சிறியதும் பெரியதுமாக 26 கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் நீலகண்ட சுவாமி, ஸ்ரீராம சுவாமி கோயில், அரண்மனைக்குள் இருக்கும் சரஸ்வதி கோயில் ஆகியவை பிரசித்திபெற்றவை. இந்தக் கோயில்கள் உட்பட சில கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இருக்கின்றன. கோட்டைக்குள் இருக்கும் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால், நான்கு கி.மீ நீளமுள்ள இந்தக் கோட்டை மதில் சுவர் எந்தத் துறையின் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறுவதுதான் புரியாத புதிராக இருக்கிறது’’ என்றார்.

ஜெயசங்கர்
ஜெயசங்கர்
மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

இது பற்றி பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ மனோ தங்கராஜிடம் கேட்டோம்... ‘‘இதற்கு முன்பு இந்தக் கோட்டையை முறையாக எந்தத் துறையும் தங்கள் வசம் எடுத்துக்கொள்ளவில்லை. கடந்தமுறை நான் எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே, பத்மநாபபுரம் கோட்டையை ஏதாவது ஒரு துறையின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தேன். இப்போது பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் பிரிவின்கீழ் கோட்டையைக் கொண்டுவரக் கேட்டிருக்கிறோம். இதற்காக விரைவில் ஆய்வு நடத்தப்படும். கோட்டையில் ஏற்பட்டிருக்கும் சேதத்தைச் சரிசெய்ய ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

பழைமையான சின்னங்கள் வெறும் கட்டடங்களோ, பொருள்களோ மட்டுமல்ல... அவை ஒவ்வொன்றுமே வரலாறு. அவற்றைப் பாதுகாப்பது அரசின் கடமை!