ரயில்வே துறையில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு சரிநிகராக உயர்ந்து வருவது மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், கர்ப்ப காலம், மாதவிடாய் நேரங்களில் ரயில்களை இயக்கும் பெண் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் சொல்லி மாளாதவை. பாதுகாப்பான பிரசவம் மற்றும் உடல்நிலை காரணங்களுக்காக, கர்ப்ப காலத்தில் சில மாதங்களுக்கு மட்டும் இலகுவான வேலை தரப்பட வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர், பெண் ஓட்டுநர்கள்.

இவர்களின் கோரிக்கையில் நியாயமான காரணங்கள் இருக்கின்றன. ரயிலை இயக்கும் பணியானது மிகவும் சவாலானது. இன்ஜினில் 40 டிகிரிக்கு வெப்பம் சுட்டெரிக்கும். மணிக்கணக்கில் நின்றவாறு அல்லது உட்கார்ந்தவாறு ரயிலை இயக்க வேண்டும். இன்ஜின் அறையில் கழிப்பறை வசதி கிடையாது. பணி நேரத்தில் பலமணி நேரத்துக்கு ஒருமுறைதான் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியும். இதனால், சிறுநீரகத்தொற்று உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை ஓட்டுநர்கள் எதிர்கொள்கின்றனர்.
உதவி லோகோ பைலட், ஷன்டிங் லோகோ பைலட், சரக்கு ரயில் லோகோ பைலட், பயணிகள் ரயில் லோகோ பைலட் என ரயில்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு நான்கு படிநிலைகள் முக்கியமானவை. இதில், இளம் வயதிலிருக்கும் உதவி லோகோ பைலட்டுகள்தான் கர்ப்ப காலத்தில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இவர்களின் கூக்குரலுக்கு ரயில்வே நிர்வாகம் செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இதற்கான காரணம் குறித்து ரயில்வே துறையில் பேசினோம்.

``20 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே பணியில் ஆண்கள்தான் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது ஓட்டுநர் உட்பட பெரும்பாலான வேலைகளிலும் ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால், 100 பேருக்கான பணியிடத்தில் சராசரியாக 70 - 80 பேர் தான் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால், ஒரே நேரத்தில் சில ஓட்டுநர்கள் விடுப்பு எடுத்தாலும், ரயிலை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படும். எனவேதான், அவசியத் தேவைக்குப் போக எங்களுக்கெல்லாம் விடுப்பு எடுக்க அனுமதி கிடைக்காது.
உடல்நிலை சரியில்லை என்றாலும், ரயில்வே மருத்துவரிடம் முறையாக மருத்துவச் சான்றிதழ் பெற்றால் மட்டுமே விடுப்பு கிடைக்கும். உடல்நிலை காரணத்தினால் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் கூடுதலான காலம் விடுமுறை (Sick Leave) எடுத்துச் சொல்லும் கர்ப்பிணிகளும் இருக்கின்றனர். அத்தகைய பெண் ஓட்டுநர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பும்போது, துறை ரீதியான நடவடிக்கை அவர்கள்மீது பாயும்" என்று கூறினார், பயணிகள் ரயிலை இயக்கும் சீனியர் பைலட் ஒருவர்.

தொடர்ந்து பேசியவர், கர்ப்ப காலத்தில் பெண் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் விவரித்தார். ``பயணிகள் ரயில்கள் பெரும்பாலும் பிளாட்ஃபாரத்தில்தான் நிற்கும். அப்போது நடைமேடையிலிருந்து இன்ஜினில் ஏறுவது சற்று சுலபம். ஆனால், நடைமேடைக்கு வெளியே அல்லது யார்டில் ரயில் நிற்கும்போது, தரையிலிருந்து இன்ஜின் நுழைவுப்பகுதி ஆறடி உயரத்தில் இருக்கும். படிக்கட்டுகளும் இருக்காது. தடுப்புகளைப் பிடித்துத்தான் இன்ஜின் அறைக்குள் மேலே ஏற வேண்டும். அந்த நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு லேசாக கை வழுக்கினாலும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதல்லவா?
புதிதாக உருவாக்கப்படும் பயணிகள் ரயில் இன்ஜின்களில் மட்டும் ஏ.சி வசதி இருக்கிறது. பழைய ரயில்களிலும், பிற தேவைக்கான ரயில்களிலும் ஏ.சி வசதி இருக்காது. பல மணி நேரம் நின்றபடியே ரயிலை இயக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம். பயணிகள் ரயில், பெரிய ரயில் நிலையங்களில் மட்டும்தான் சில நிமிடங்கள் நிற்கும். அவ்வாறு பல மணி நேரத்துக்கு ஒருமுறை ரயில் நிற்கும்போதுதான் எங்களால் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியும்.

நீண்ட நேரத்துக்குச் சிறுநீரை அடக்கிக் கொள்வதால் சிறுநீரகத்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ரயில் ஓட்டுநர்கள் பலரும் பணி நேரத்தில் தண்ணீர் குடிப்பதைக் கூடுமானவரைத் தவிர்க்கின்றனர். சமீபத்தில் இளநிலை பெண் கோலோ பைலட் ஒருவர், சிறுநீரகத்தொற்றால் பணி நேரத்தில் மயங்கி விழுந்து பெரிய சிக்கலாகிவிட்டது. இதுகுறித்தெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உயரதிகாரிகளிடம் சொல்கிறோம். இன்ஜின் அறையில் கழிப்பறை வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.
ரயில்வே உயரதிகாரிகள் மட்டத்தில் பேசினால், ``உதவி லோகோ பைலட் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளிலேயே பெண் ஓட்டுநர்கள் பெரும்பாலானோரும் திருமணம் செய்து கொள்வார்கள். அவர்களில் கர்ப்பமாக இருக்கும் ஓரிருவருக்கு இலகுவான வேலை என்றால் யோசிக்கலாம். ஆனால், மாநிலம் அல்லது மண்டல வாரியாகப் பார்த்தால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஓட்டுநர்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் எல்லோருக்கும் இலகுவான வேலை தருவதென்பது எப்படிச் சாத்தியம்? இதனால், ஓட்டுநர் பற்றாக்குறை ஏற்பட்டு ரயில்களைக் குறித்த நேரத்தில் இயக்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
அரசு விதிமுறைப்படி கர்ப்ப காலத்தில் பெண் ஓட்டுநர்களுக்கு ஆறு மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. குழந்தைப் பராமரிப்பு (Child care leave) விடுமுறையும் தரப்படுகிறது. அலுவலக வேலையில் இருக்கும் பெண்களாக இருந்தால், வீட்டிலிருந்து பணியாற்ற வாய்ப்பிருக்கும். ரயில் ஓட்டுநர்களின் பணி அப்படியில்லையே! ரயிலை இயக்குவது மட்டுமே ஓட்டுநர்களின் பணி என்பதால், அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வது நடைமுறைக்கு ஒத்துவராத காரியம்" என்றனர்.
கர்ப்ப கால சிக்கல் குறித்து வேதனையுடன் பேசினார், பெண் உதவி லோகோ பைலட் ஒருவர். ``வேலை நேரத்தில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம். இதற்கு உடனடியாகத் தீர்வு கிடைக்காது என்பதால், சூழலுக்குப் பழகிக் கொண்டு வேலை செய்கிறோம். மற்ற காலத்தில்கூட பரவாயில்லை. கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் காலத்தில் நெருக்கடிகளைத் தாங்கிக் கொள்வது விவரிக்க இயலாத ரணம். மாதவிடாய் நேரத்தில் நாப்கினை மாற்றவும் நேரம் கிடைக்காதபோதுதான் மனது ரொம்பவே வலிக்கும்.

கர்ப்ப காலத்தில், இன்ஜினில் ஏற, குனிந்து வேலை செய்ய மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம். இந்த நடைமுறை பிரச்னைகளைக் குடும்பத்தினரிடம் புரிய வைப்பது இன்னும் கடினமானதாக இருக்கிறது. அதனால்தான், கர்ப்ப காலத்தில் இலகுவான வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் என கேட்கிறோம். பணியிடப் பற்றாக்குறை இருப்பது எங்களுக்குத் தெரியாமல் இல்லை. காலிப்பணியிடத்தை முழுமையாக நிரப்புவதுடன், தேவையைவிடச் சற்று கூடுதலான எண்ணிக்கையில் ஓட்டுநர்களைப் பணியமர்த்தினால் சிக்கலைச் சரிசெய்யலாம்" என்று ஆற்றாமையுடன் கூறினார்.
அசெளகர்யத்துடனும் சிரமத்துடனும் ரயில் ஓட்டுநர்கள் வேலை செய்யும்போது, தேவையற்ற மனக்குழப்பங்களும் கவலைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது அவர்களின் நிம்மதியை மட்டுமன்றி, பயணிகளின் நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம். வேலையில்லா திண்டாட்டம் அதிக அளவில் இருக்கும் நம் நாட்டில், திறமையானவர்கள் ஏராளமானோர் ரயில்வேயில் பணியாற்ற ஆர்வமாக இருக்கின்றனர். போட்டித்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வுகள் மூலம், கூடுதலான பணியாளர்களைத் தேர்வு செய்தால், பெண் ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியும். இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக முடிவெடுக்க வேண்டியது மத்திய அரசு மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் தார்மீக கடமை!