பொருளாதார வீழ்ச்சி, அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, அரசியல் ஸ்திரத்தன்மையின்மை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட காரணங்களால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருக்கிறது. அதனால், அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து பாகிஸ்தான் மக்கள் பரிதவித்துவருகின்றனர். பாகிஸ்தான் முழுவதும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், "பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது, ஆனால் இந்தியா, காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். எங்களிடம் பொறியாளர்கள், மருத்துவர்கள், திறமையான தொழிலாளர்கள் இருக்கின்றனர். இருநாடுகளின் சொத்துகளை செழுமையாக்காகவும், அமைதியைக் கொண்டுவரவும் இந்தியா - பாகிஸ்தான் வளர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அமைதியாக வாழ்வதும், முன்னேறுவதும், அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நேரத்தையும், வளங்களையும் வீணாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது. இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தி, அவை மக்களுக்கு மேலும் துயரத்தையும், வறுமையையும், வேலையின்மையையும் கொண்டுவந்திருக்கின்றன. அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டோம். நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளுக்காக எங்கள் வளங்களை வீணடிக்க பாகிஸ்தான் விரும்பவில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.