அரசியல்
அலசல்
Published:Updated:

ஷெரீப் குடும்பத்தின் கைகளில் பாகிஸ்தான்... என்ன செய்யப்போகிறார் புதிய பிரதமர்?

ஷெபாஸ் ஷெரீப்,
பிரீமியம் ஸ்டோரி
News
ஷெபாஸ் ஷெரீப்,

காஷ்மீரைப் பூர்வீகமாகக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்பின் குடும்பம், 1936-ல் பஞ்சாப் மாகாணத்திலிருந்த லாகூருக்குக் குடிபெயர்ந்தது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மீண்டும் ஷெரீப் குடும்பத்தினர் கைகளுக்கு ஆட்சி சென்றிருக்கிறது. ஏற்கெனவே பாகிஸ்தானை மூன்று முறை ஆட்சி செய்த நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப், 23-வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் அரசியலில் இவர் கடந்துவந்த பாதை என்ன, தற்போது இவர் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன?

கடந்த மார்ச் இறுதியில் இம்ரான் அரசைக் கவிழ்க்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் குவாசிம் சூரி நிராகரித்தார். தொடர்ந்து இம்ரானின் கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தான் நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில், ‘நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று தீர்ப்பு வந்தது. இதன்படி நடந்த வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக 172 எம்.பி-க்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், 174 எம்.பி-க்கள் ஆதரவளித்தனர். இம்ரான் அரசு கவிழ்ந்தது!

ஷெரீப் குடும்பத்தின் கைகளில் பாகிஸ்தான்... என்ன செய்யப்போகிறார் புதிய பிரதமர்?

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் `பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)’ கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பும், இம்ரானின் பி.டி.ஐ கட்சி சார்பில் அந்தக் கட்சியின் துணைத் தலைவர் ஷா மெகமூத் குரேஷியும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஆனால், பிரதமர் தேர்வுக்கு முன்பாகவே பி.டி.ஐ கட்சியின் அனைத்து எம்.பி-க்களும் ராஜினாமா செய்யவே... புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஷெபாஸ்!

யார் இந்த ஷெபாஸ்?

காஷ்மீரைப் பூர்வீகமாகக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்பின் குடும்பம், 1936-ல் பஞ்சாப் மாகாணத்திலிருந்த லாகூருக்குக் குடிபெயர்ந்தது. ஷெபாஸின் தந்தை முகமது ஷெரீப் எஃகு தொழிற்சாலையைத் தொடங்கினார்... செல்வச் செழிப்புமிக்க குடும்பமாக மாறியது ஷெரீப் குடும்பம். அந்தக் குடும்பத்திலிருந்து முதன்முறையாக அரசியலுக்கு வந்தவர் நவாஸ் ஷெரீப்தான். மூன்று முறை பாகிஸ்தானை ஆட்சி செய்தார் நவாஸ். தந்தையின் எஃகு தொழிலைக் கவனித்துவந்த ஷெபாஸ், 1980-களில் பஞ்சாப் மாகாண அரசியலில் களமிறங்கி, 1988 பொதுத் தேர்தலில் எம்.பி-யானார். தொடர்ந்து 1997-ல் அந்த மாகாணத்தின் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிப் பொறுப் பேற்றதும், பஞ்சாப்பின் லாகூர் நகரில் முதன்முதலாக நவீன போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்கியவர் விவசாயம், தொழில்துறை, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளையும் மேம்படுத்தி, மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.

1999-ல் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத் தளபதி பர்வேஸ் முஷாரஃப் ஆட்சியைக் கைப்பற்றினார். இதன் விளைவாக ஷெபாஸ், பஞ்சாப் மாகாண முதல்வர் பதவியை இழந்ததோடு, சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆறு ஆண்டுகளை வெளிநாட்டிலேயே கழித்த ஷெபாஸ், நிலைமை சீரானதும் 2007-ல் நாடு திரும்பினார். தொடர்ந்து 2008 பஞ்சாப் மாகாணத் தேர்தலில் போட்டியிட்டவர், மீண்டும் முதல்வரானார். 2013 தேர்தலிலும் அவரே வெற்றிபெற்று முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். 2017 வரை மாகாண அரசியலில் ஈடுபட்டுவந்தவர், தேசிய அரசியலிலும் கால்பதித்தார். அதே ஆண்டில், அப்போதைய பாகிஸ்தான் பிரதமரும், ஷெபாஸின் அண்ணனுமான நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றார். இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவரானார் ஷெபாஸ். ஷெபாஸ் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. ஆனால், அவை நிரூபிக்கப்படாததால், 2018 பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்டார். அப்போது 82 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதால், பாகிஸ்தானின் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஷெரீப் குடும்பத்தின் கைகளில் பாகிஸ்தான்... என்ன செய்யப்போகிறார் புதிய பிரதமர்?

இம்ரான் ஆட்சிக்கு வந்ததும், ஷெபாஸ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் போடப்பட்டதோடு, அவருக்குச் சொந்தமான சொத்துகளும் முடக்கப்பட்டன. 2020-ல் பண மோசடி வழக்கில், கைதும் செய்யப்பட்டவர், ஏழு மாத சிறைவாசத்துக்குப் பின்னர், ஜாமீனில் வந்தார். தன்னைச் சிறையிலடைத்த இம்ரானைப் பழிதீர்ப்பதற்கு, கடந்த சில மாதங்களாகவே எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியவர், அவரது ஆட்சியைக் கவிழ்த்து பழியும் தீர்த்துவிட்டார். தற்போது ஷெபாஸ் பிரதமராகியிருக்கும் நிலையில், லண்டனில் சிகிச்சை பெற்றுவரும் அவரது அண்ணன் நவாஸ் ஷெரீப் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுமா நாட்டின் பொருளாதாரம்?

அதல பாதாளத்தில் இருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிசெய்வதுதான் ஷெபாஸ் முன்னிருக்கும் முதல் சவால். ``தந்தையைப்போல தொழில் செய்த ஷெபாஸ், தனது நிர்வாகத் திறமையால் குடும்பத்தின் எஃகு தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர். பஞ்சாப் முதல்வராக இருந்தபோது நிர்வாகத்திறனுக்காகப் பாராட்டுகளைப் பெற்றவர். எனவே, தனது நிர்வாகத்தின் மூலம் நாட்டின் நிதிநிலையைச் சரிசெய்வார்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.

ஷெபாஸ் அமெரிக்காவுக்கு எதிராகவும், சீனாவுக்கு ஆதரவாகவும் செயல்படக்கூடியவர். இதனால், ஷெபாஸ் பொறுப்பேற்றதை வரவேற்றிருக்கிறது சீனா. இதையடுத்து, சீனாவிடம் பெற்ற கடனுக்கு வட்டி செலுத்துவதில், பாகிஸ்தானுக்குச் சலுகை கிடைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சீனாவுடன் உறவை மேம்படுத்தி, அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் திட்டங்களும் அவரிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நீண்ட நாள்களாகப் பாகிஸ்தானில் நிலவிய அரசியல் நெருக்கடிக்கு, ஷெபாஸ் பிரதமரானதன் மூலம் தீர்வு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

முதல் பேச்சில் காஷ்மீர் பிரச்னை!

பாகிஸ்தான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனது முதல் உரையில் காஷ்மீர் பற்றிப் பேசிய ஷெபாஸ், ``இந்தியாவுடன் நல்ல உறவைப் பேண விரும்புகிறோம். ஆனால், காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணாமல் அமைதியைப் பற்றிப் பேச முடியாது. காஷ்மீரில் பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட விவகாரத்தில் அங்கிருக்கும் சகோதர, சகோதரிகளுக்கு பாகிஸ்தான் தனது தார்மிக ஆதரவை வழங்கும்’’ என்றிருக்கிறார்.