
பழ.கருப்பையா
பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. அது பெரியார் உயிருடன் இருந்த காலம். சேலத்திலே நடந்த மாநாட்டிலே ராமனின் படத்தைச் செருப்பால் அடித்தார்கள் அவரின் தொண்டர்கள். இதைக் குறிப்பிட்டு ரஜினிகாந்த் `துக்ளக்’ விழாவிலே பேசினார். ராமனும் சீதையும் அந்த ஊர்வலத்திலே ஆடையின்றி எடுத்துச் செல்லப்பட்டனர் என்றும் பேசினாராம். உண்மை தெரியாமல் பேசக்கூடாது என்று திராவிடர் கழகத்தினர் ரஜினிமீது பாய்ந்தனர். ராமனும் சீதையும் ஆடையுடன்தான் இருந்தனர் என்னும் ஒன்றைச் சொல்லி, ரஜினி முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசிவிட்டார் என்பதுபோல் கச்சை கட்டுகின்றனர்.
ராமன் செருப்பால் அடிக்கப்பட்டாரா இல்லையா...அவ்வாறு செய்ய வேண்டாம் என்று பெரியார் தன்னுடைய தொண்டர்களைத் தடுத்தாரா... இல்லையே!

அதற்கு அடுத்து அவர்களின் வாதம், ‘ஜனசங்கத்துக்காரர் ஒருவர் செருப்பைப் பெரியார் மேல் வீசினார்; அப்படி வந்து விழுந்த செருப்பை எடுத்துத்தான் ராமனை அடித்தோம்’ என்று விலகிய நிலையிலேயே வாதிடுகின்றனர் பெரியார் அன்பர்கள். வந்து விழுந்த செருப்பால் அடித்தால் என்ன? கொண்டு வந்திருந்த செருப்பால் அடித்தால் என்ன? இரண்டுக்கும் என்ன வேறுபாடு? ‘ஆமாம் அடித்தோம்; இனியும் அடிப்போம்’ என்று உக்கிரமாகப் பேசிப் பழக்கப்பட்ட திராவிடர் கழக அன்பர்கள் தாங்கியும் வழுவியும் பேச வேண்டிய கட்டாயம் என்ன?
பெரியார் இழிவுபடுத்தப்பட்டார் என்று ஊருக்கு ஊர் நீதிமன்றங்களை நாட வேண்டிய கட்டாயம் என்ன? ரஜினி வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய இன்றியமையாமை என்ன?ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆவேசமும், நீதிமன்றங்களும்தான் பெரியாரின் மதிப்பைச் சரியாமல் நிலைநிறுத்தப் போகின்றனவா? ரஜினி வீட்டுக்கு முன்னால் செய்கின்ற கலகங்கள் அவரை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டவைதானே? ‘நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்’, ‘எடுத்த நிலையிலிருந்து பின்வாங்க மாட்டேன்’ என்று ரஜினியைச் சொல்லவைத்து, அவரை வீறார்ந்த நிலைப்பாட்டைக் கொள்ளச் செய்தது யார்? நீங்கள்தானே!
தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தலைவர் பேசினாலும் யார் காதிலும் விழுவதில்லை. ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுகின்ற கூட்டங்களுக்குக் கேட்பதற்குக் காசு கொடுத்து ஆள் பிடித்து வருகிறார்கள். ஆனால், ரஜினி ஒரு சிறு அரங்கில் பேசியது இவ்வளவு அதிர்வை உண்டாக்குகிறதே! இன்றைய தலைவர்கள், அவர் எது பேசினாலும் எகிறுவதும், உடனே அதை விவாதப் பொருள் ஆக்கிவிடுவதும், அவருடைய நுழைவு குறித்த அச்சத்தைத்தானே காட்டுகிறது!

பெரியாரின் மீது ரஜினி கை வைப்பதற்கு அவருக்குப் பின்புலத்தில் உள்ள இந்துத்துவ சக்திகளே காரணம் என்கின்றனர். இந்துத்துவப் பின்னணியோடு கூட்டு வைத்துக்கொண்டதன் விளைவு, 35 விழுக்காடு வாக்கு வங்கி கொண்ட அ.இ.அ.தி.மு.க 18 விழுக்காடாகச் சுருங்கிவிட்டதே! இந்துத்துவத்தை எதிர்த்து என்று சொல்வதைவிட, அதை எதிர்க்க நேரிட்டுவிட்ட தி.மு.க., நின்ற இடங்களிலெல்லாம் வென்றுவிட்டதே! தி.மு.க-வின் வெற்றியின் அளவு இந்துத்துவாமீதுள்ள வெறுப்பின் அளவுதானே!
ரஜினியின் புதிய அரசியல் நிலைப்பாடாக அவர் மேற்கொள்ள இருப்பது ‘ஆன்மிகவாதம்’ என்கின்றனர். அதனுடைய பொருள் இறை மறுப்பாளர்களோடு மோதல்! அதனுடைய தொடக்கம்தான் பெரியாரோடு மோதல் என்கின்றனர். பெரியார், ராமனைச் செருப்பால் அடித்ததைக் கையில் எடுத்தால், இந்து மத உணர்வாளர்களை ஒன்றுதிரட்ட முடியும் என்று ரஜினி நம்புவதாகத் திராவிடத் தரப்பினர் சொல்கின்றனர்.
40 ஆண்டுகளுக்கு முன்னால், பெரியார் செருப்பால் அடித்த காலகட்டம் தேர்தல் காலகட்டம்! ஆகவே அந்தச் செயல் பெரிதாக்கப்பட்டது; கலைஞர் கலங்கிப்போனார்! ஆனால், தேர்தல் முடிவுகள் கலைஞருக்குப் பெருத்த வெற்றியைத் தேடித்தந்தன! ‘என்மீதிருந்த பழி நீங்கியது’ எனப் பெரியாரும் நெகிழ்ந்தார். ஒருவன் கடவுள் மறுப்பாளன் என்பதால், தோற்கடிக்கப்படுவான் என்றால் நேருவும் அண்ணாவும் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. திராவிட இயக்கம் ஐம்பதாண்டுகளாகப் பதவிக் கட்டிலில் தொடர்ந்து இருந்திருக்க முடியாது. கலைஞரின் அரசியல் அந்தச் சேலம் மாநாட்டோடு முடிந்துபோயிருக்க வேண்டும்.

இசுலாத்தில் கடவுள் மறுப்பாளனோ, நபிகளை மறுக்கின்றவனோ இசுலாமியனாக இருக்க முடியாது. ஆனால், இந்தியச் சமயங்களில் நாத்திகமும் ஒரு பிரிவு. கடவுள் ஏற்பு எப்படியோ அப்படியே மறுப்பும். ‘நட்ட கல்’ என்று சிவனைச் சொல்கிறார் சிவவாக்கியச் சித்தர்! ‘உனக்குத் தாவாரமே இல்லை; அப்புறம் என்ன தேவாரம்?’ என்கிறார் குதம்பைச் சித்தர். இவற்றையெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ்க்காதுகளுக்குப் பெரியாரின் வசவு ஒன்றும் புதிதில்லை. பெரியாரும் அண்ணாவும் திராவிட இன எழுச்சிப் போராளிகள்!
பிள்ளையாரைத் தூக்கிப்போட்டு உடைத்தார் பெரியார். அப்போது ராஜாஜி முதலமைச்சராக இருந்தார். அவர் இந்து மனம் புண்படுகிறது என்றெல்லாம் சொல்லவில்லை. தன் கையிலிருந்த அதிகாரச் சவுக்கை வீசவில்லை. அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிபோல வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ராமாயணத்தைக் கீமாயணம் என்று எம்.ஆர்.ராதா, ஊர் ஊராகப் போய் நாடகம் நடத்தினார். அதில் சீதை பட்ட பாடு பெரும்பாடு! காசு கொடுத்தும் காது கொடுத்தும் மக்கள் அதைக் கேட்டும் பார்த்தும் சுவைத்தனர்.

பெரியார், தீபாவளியை ஒழிக்கப் போராடினார், அது வடநாட்டுப் பண்டிகை என்பதால்! ராமனைச் செருப்பால் அடித்தார், ஆரிய இதிகாசம் தூக்கி நிறுத்திய கதை மாந்தன் என்பதால்! ‘திராவிடர் சூத்திரர்கள்; ஆரியர் மேலோர்’ என்பதைத் தூக்கி நிறுத்தத் துணை நின்ற வடிவங்களையெல்லாம் உடைத்தார்; நொறுக்கினார்; இழிவுபடுத்தினார்! ஒரு பக்கம் கோயிலை மறுத்தார்; இன்னொரு பக்கம் அந்தக் கோயிலுக்குள் நுழைவுரிமை மறுக்கப்பட்ட மக்களுக்காக நுழைவுப் போராட்டம் நடத்தினார். கோயில் மறுக்கும் பெரியாருக்கு, ‘கோயிலுக்குள் எவன் நுழைந்தால் என்ன, நுழைய முடியாமல் போனால் என்ன’ என்று, அறியாதவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்!
திராவிடச் சமயங்கள் உருவாக்கப்பட்டவை அல்ல. இங்கே ‘உண்டு’ என்பவன் உண்டு; ‘இல்லை’ என்பவன் உண்டு. ‘ஒன்று’ என்பவன் உண்டு; ‘பல’ என்பவன் உண்டு. கள்ளு குடிக்கிற கடவுளும் உண்டு; கருவாடு தின்கிற கடவுளும் உண்டு. எல்லாவற்றையும் கதம்பமாக்கி ‘இந்து’ என்றது சூழ்ச்சி. வெள்ளைக்காரன் எந்த நோக்கமும் இல்லாமல் பயன்படுத்திப் பழக்கத்துக்கு வந்துவிட்ட தற்செயலான சொல் அது.

அந்தச் சொல் வேதத்திலும் இல்லை; திருமந்திரத்திலும் இல்லை. திருமந்திரம் பயன்படுத்தும் சைவசித்தாந்தம் என்பது பூரி ஜெகன்னாதர் கோயில் பூசாரிக்குப் புரியாது. அண்மையில் வாழ்ந்த வள்ளலாருக்குக்கூடப் பழக்கமில்லாத அந்தச் சொல்லை வெள்ளைக்காரன் தற்செயலாகப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் உள்ள சமயக் குழுக்களுக்குத் தலைமைகொள்ள ஆரியத்துக்கு அது வசதியாய் அமைந்துவிட்டது.
தமிழ்நாட்டை 50 ஆண்டுகளாக ஆளும் திராவிட இயக்கங்கள், இந்து அறநிலையத்துறை என்பதைத் `திராவிட சமயங்கள் அறநிலையத்துறை’ என மாற்றியிருக்க வேண்டும். எடுத்துச் சொன்னாலும் தலைமைகளுக்குப் புரிவதில்லை. ஆட்சிக்கு வருவதும், ‘கல்லாக் கட்டுவதும்தானே’ திராவிடக் கட்சிகளின் அரசியல்.
ஊழல் ஒழிப்பு என்பது தமிழ்நாட்டின் 50 ஆண்டுத் தவம். அதை ஒழிக்க முன் வருகிறவர்கள் இந்துத்துவா என்னும் திராவிட மறுப்பு உழை சேற்றில் மாட்டிக் கொண்டுவிடக் கூடாது.

ராமனை அடித்ததும், பிள்ளையாரை உடைத்ததும் நாத்திகப் போக்குகளின் வெளிப்பாடுகள்தாம். இங்கே இன எழுச்சிப் போரை எடுத்து நடத்த எந்த ஆத்திகரும் முன்வரவில்லை. அதற்குத் தலைமை தாங்கிய பெரியாரையும் அண்ணாவையும் தமிழ் மக்கள் முழுதாக ஏற்றனர். அவர்களின் பெயரால் கல்லாக் கட்டுகிற இருவரையும் ஒழியுங்கள். பெரியார் அண்ணா உருவாக்கிய எழுச்சிக்கு எதிராக நிற்காதீர்கள்!
பிள்ளையைக் குளிப்பாட்டிய அழுக்குத் தண்ணீரை விசிறி அடியுங்கள்; பிள்ளையையும் சேர்த்து வீசிவிடாதீர்கள்!