அரசியல்
சமூகம்
Published:Updated:

‘‘பழநியில் இருப்பது நவபாஷாண சிலைதானா?’’

பழநி தண்டாயுதபாணி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
News
பழநி தண்டாயுதபாணி கோயில்

சந்தேகம் கிளப்பும் பாலபாரதி

லகப் புகழ்பெற்ற பழநி தண்டாயுதபாணி கோயிலில் போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் நவபாஷாண சிலை, மூலவராக இருக்கிறது. இந்தச் சிலையில் அபிஷேகம் செய்யப்படும் பொருள்கள் நோய் தீர்க்கும் மருந்து என்பதும் மக்களின் நம்பிக்கை. தற்போது இந்தச் சிலை உண்மையான நவபாஷாண சிலைதானா என்பதில் சர்ச்சை வெடித்துள்ளது.

நவபாஷாண சிலை சிதிலம் அடைந்திருப்பதாகக் காரணம் சொல்லி, கடந்த 2004-ம் ஆண்டு புதிய ஐம்பொன் சிலை வைக்கப்பட்டது. அப்போது கருவறை இருபது நாள்களுக்கு மேல் மூடியிருந்தது. பக்தர்கள் பலரும் அப்போதே இதை எதிர்த்தனர். இந்த நிலையில், இருபது கிலோ தங்கம் கலந்துசெய்யப்பட்ட ஐம்பொன் சிலை, நான்கே மாதங்களில் நிறம் மாறத்தொடங்கியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், ஐம்பொன் சிலையை அகற்றும்படி வலியுறுத்தினார்கள். உடனடியாக ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது. சிலை உருவாக்கத்தில் தங்கம் கையாடல் செய்யப்பட்டது என்று புகார் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாநில சிலைத் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யான பொன்.மாணிக்கவேல் இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கினார். முறைகேடு புகாரின் அடிப்படையில் அறநிலையத் துறை ஆணையர் தனபால், இணை ஆணையர் கே.கே.ராஜா, துணை ஆணையர் தேவேந்திரன், ஸ்தபதி முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

‘‘பழநியில் இருப்பது நவபாஷாண சிலைதானா?’’

இந்த நிலையில், கடந்த வாரம் பத்திரிகையாளர்களிடம் பேசிய சிலைக் கடத்தல் பிரிவு போலீஸார், “ஐந்தாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த நவபாஷாண சிலையைக் கடத்தும் முயற்சி நடந்திருக்கிறது. நவபாஷாண சிலையைக் கடத்துவதற்காகவே ஐம்பொன் சிலை நிறுவப்பட்டது’’ என்று தெரிவித்தனர். இது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலபாரதி புதிய சந்தேகத்தை முன்வைத்துள்ளார்.

‘‘பழநி கோயிலில் தற்போது உள்ள மூலவர் சிலை, நவபாஷாண சிலைதானா... இல்லை அந்தச் சிலைக் கடத்தப்பட்டு விட்டதா என்ற சந்தேகம் ஏற்கெனவே உள்ளது. இந்த நிலையில், அந்தச் சிலையைக் கடத்த முயற்சி நடந்ததாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தற்போது சொல்லியிருப்பது, அந்தச் சந்தேகத்தை அதிகரிக்கிறது. எனவே, தற்போது இருப்பது நவபாஷாண சிலைதானா என்பதை ஆய்வுசெய்து தெளிவுபடுத்த ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் அனைத்துக் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மிகவாதிகள் இடம்பெற வேண்டும். அப்போதுதான் நவபாஷாண சிலை இருக்கிறதா கடத்தப்பட்டுவிட்டதா என்ற உண்மை தெரியவரும்’’ என்றார்.

இதுதொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, “நான் பிஸியாக இருக்கி றேன்” என்று மட்டுமே பதில் வருகிறது.

பக்தர்களுக்குச் சோதனை வந்தால், ‘முருகா’ என அழைப்பார்கள். இப்போது முருகனுக்கே சோதனை வந்திருக்கிறது!