Published:Updated:

பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை - 8

பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை 8
News
பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை 8

73 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் 13 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொலை செய்து, 7.50 லட்சம் பேர்களை விரட்டியடித்து ஒரு நாட்டின் கண்ணீரில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இஸ்ரேல், இன்றும் இதே செயலில் ஈடுபட்டிருப்பது உலக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Published:Updated:

பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை - 8

73 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் 13 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொலை செய்து, 7.50 லட்சம் பேர்களை விரட்டியடித்து ஒரு நாட்டின் கண்ணீரில் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய இஸ்ரேல், இன்றும் இதே செயலில் ஈடுபட்டிருப்பது உலக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை 8
News
பாலஸ்தீன்: காணாமல் ஆக்கப்பட்ட தேசம் - நாடுகளின் கதை 8

கால்பந்துகளை வைத்து விளையாட வேண்டிய அழகியச் சிறுவன், ஆயுதங்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறான். குழந்தைகளின் இதயத்தில் குண்டுகள் துளைக்கின்றன. காலையில் விரதம் இருக்கும் தாயும், மகளும் மாலை நேரத்தில் விரதம் முடிப்பதற்குள் இறந்து கிடக்கிறார்கள். இரவுகள் பகலைப் போன்று மாறுகின்றன வான்வெளிகளில் பறக்கும் ராக்கெட் வெடிகுண்டுகளால்... இளகிய மனதுள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம் ஏனென்றால் இது வஞ்சிக்கப்பட்ட நாடான பாலஸ்தீனின் கதை.

பாலஸ்தீன் | Gaza
பாலஸ்தீன் | Gaza

சரியாக 73 ஆண்டுகளுக்கு முன் 1948-ம் ஆண்டு இதே மே 14 பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். ஆம், இன்று போலத்தான். பாலஸ்தீன் நாடு பற்றி எரிந்தது. ஒரு நாட்டின் கண்ணீரிலிருந்து இஸ்ரேல் என்ற இன்னொரு நாடு உருவாகிறது. சர்வதேச சமூகங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகமாக பாலஸ்தீன சமூகம் பார்க்கப்படுகிறது. வரலாற்றில் எந்த ஒரு சமூகமும் தங்கள் உயிரை இழக்கும் நிலை, அல்லது உடமைகளை இழக்கும் நிலையைச் சந்தித்திருக்கின்றன.

ஆனால், பாலஸ்தீனர்கள் தங்கள் உயிர், உடமைகளை மட்டுமல்ல; தங்கள் தேசத்தின் பெரும் பகுதியையே இழந்து நிற்கின்றனர்.
பாலஸ்தீன் வரலாறு
ஆசிய கண்டத்தின் தென்மேற்குப் பகுதியில் லெபனான், ஜோர்டான், சிரியா, சவூதி அரேபியா, எகிப்து ஆகிய அரபு நாடுகளின் மத்தியில் ஒரு சிறு புள்ளி போல் இருக்கும் நாடு தான் பாலஸ்தீன்.

வெறும் 6000 ச.கி.மீ பரப்பளவை மட்டுமே கொண்ட நாடு. நம் தமிழ்நாட்டில் ஒரு மாவட்டத்தின் அளவுதான். 45 லட்சம் மக்கள் இங்கு போராட்டத்தாடு வாழ்கின்றனர். 93 சதவிகிதத்திற்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்கின்றனர். வளமான நாடாக இருக்க வேண்டிய பாலஸ்தீன் இந்த நிலைக்கு உள்ளாகக் காரணம் இஸ்ரேல் என்ற நாட்டின் ஆக்கிரமிப்புதான். ஆம், இருக்க இடம் கொடுத்தால் படுக்க பஞ்சு மெத்தைக் கேட்ட கதைதான் இங்கு. பஞ்சு மெத்தையை பறித்த கதை என்று கூட சொல்லலாம்.

பாலஸ்தீன் தாக்குதல்
பாலஸ்தீன் தாக்குதல்

1875-ம் ஆண்டில் ஜியோனிஸ சித்தாந்தத்தை உருவாக்கிய தியோடர் ஹெஸில் (Theodor Herzl) யூதர்களுக்கு ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்கான முதலாவது மாநாடு 1897 ஆகஸ்ட் மாதம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியமர்த்தவும் அதற்காக தனிநாடு அமைக்கவும் முடிவு செய்தார்கள்.

அதன் பின், 1901ல் துருக்கி சென்ற தியோடர் ஹெஸில், உதுமானிய பேரரசின் தலைவராக இருந்த இரண்டாம் அப்துல் ஹமீத் கானிடம், பாலஸ்தீனத்தில் யூதர்களை குடியமர்த்தவும் அதற்கு சன்மானமாக 150 மில்லியன் பவுன்களை தருவதாகவும் கேட்க, அதை முற்றிலும் மறுத்துவிட்டார் ஹமீத் கான்.

`பால்ஃபர் பிரகடனம்'
Balfour Declaration

முதலாம் உலகப் போர் முடிவுக்கு வரும் சமயத்தில் உதுமானிய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்து பாலஸ்தீனப் பகுதி பிரிட்டனின் ஆட்சியின்கீழ் வந்தது. அப்போது பிரிட்டனின் வெளியுறவுச் செயலாளராக இருந்த ஆர்தர் பால்ஃபர், பிரிட்டன் யூதர்களின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த வால்டர் ராத்ஷில்ட் என்பவருக்கு 1917 நவம்பர் 2-ல் ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில், "பாலஸ்தீனத்தில் யூதர்களுக்குத் தாய்நாட்டை உருவாக்கித் தர வேண்டும் என்கிற ஜியோனிஸ சித்தாந்தத்தின் கோரிக்கைக்கு பிரிட்டன் அரசு ஒப்புதல் அளிக்கிறது. இந்த லட்சியத்தை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்து கொடுக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது இதுவே, பிரிட்டன் அரசின் பாலஸ்தீனத்துக்கான கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

”ஒரு நாடு (பிரிட்டன்), தனக்கு முற்றிலும் தொடர்பில்லாத அந்நிய நிலத்தில் (பாலஸ்தீனம்) புதிய தேசம் (இஸ்ரேல்) ஒன்றை உருவாக்கித் தருவதாக உறுதியளித்தது!”
பாலஸ்தீன் தாக்குதல்
பாலஸ்தீன் தாக்குதல்

பிரிட்டன் படை பாலஸ்தீனத்தை நோக்கி புறப்பட்டது. 1917 டிசம்பர் 11 அன்று ஜாபா கேட் வழியாக ஜெரூஸலத்தில் நுழைந்த பிரிட்டன் ஜெனரல் எட்மண்ட் ஆலன்பீ இன்றுடன் சிலுவையுத்தம் முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டார். பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு தனிநாடு என்ற பிரிட்டனின் திட்டத்துக்கு சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பும் 1922-ல் ஒப்புதல் வழங்க ஐரோப்பிய நாடுகளில் இருந்த யூதர்களில் 90 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே குடியமர்த்தப்படுகிறார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரித்து அரபு நாடு, யூத நாடு, ஜெரூஸலம் தனி என 1947 நவம்பர் 29-ல் அறிவித்தது. இதன்படி பாலஸ்தீனில் 70 சதவிகிதம் உள்ள முஸ்லிம்களுக்கு 43 சதவிகித இடமும், 30 சதவிகிதம் உள்ள யூதர்களுக்கு 56 சதவிகித இடமும் சொந்தம் என நியாயமற்ற வகையில் பிரித்தது. இதனை அரபுநாடுகள் எதுவும் ஏற்கவில்லை.

1948 வரை பாலஸ்தீனம் பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்தது. 1948-ம் ஆண்டு மே 14-ம் தேதி பிரிட்டன் அதிகாரபூர்வமாக பாலஸ்தீனிலிருந்து வெளியேறியது. இஸ்ரேல் என்கிற தேசம் உருவாகி விட்டதாக ஜியோனிஸ்ட்கள் அறிவித்துவிட்டார்கள். பாலஸ்தீனர்கள் இந்நாளை கறுப்பு நாளாக பார்க்கின்றனர். இஸ்ரேல் அதை சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

சரி, பாலஸ்தீனத்தைச் சுற்றி அரபு நாடுகள் இருக்கிறது என்று கூறினீர்களே?! இந்த யூத ஆக்கிரமிப்பை எதிர்த்து யாரும் குரல்கொடுக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அனைவரும் மௌனம் காத்தனர். காரணம் அமெரிக்காவும், அந்நாட்டின் அப்போதைய அதிபர் ட்ரூமனும்தான். அமெரிக்கா இஸ்ரேலை ஆதரித்தது. இதற்குப் பின்னால் ஒரு முதலாளித்துவ கதை இருக்கிறது. ஆம், மத்திய கிழக்கில் கிடைத்த அபரிமிதமான எண்ணெய் வளம் அதனால், முஸ்லிம் நாடுகளின் வளர்ச்சி... இதனைக் கண்டு அங்கு தனக்கு சார்பான ஒரு நாடு இருக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. அதற்கு இஸ்ரேலை பயன்படுத்திக் கொண்டது.

யாசர் அரபாத்
எனும் தலைவர்!

ஒரு சரியான தலைவன் இல்லையென்றால் நாடு என்ன நிலைக்கு ஆளாகும்?! மேற்கூறியது போன்று ஆக்கிரமிக்கப்படும், அழிவை நோக்கிச் செல்லும், அடிமைப்படுத்தப்படும். அப்படியான ஒரு காலகட்டத்தில்தான் பாலஸ்தீனத்திற்கு ஒரு சிறு நம்பிக்கையாக உருவெடுத்தார் யாசர் அரபாத்.

மற்ற நாடுகளை நம்பாமல் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிப்போம் என இறங்கிய பாலஸ்தீனர்கள் பல குழுக்களாக உருவாயினர். 1959-ல் பத்தாஹ் (Fatah movement) என்ற இயக்கத்தை யாசர் அரபாத் தோற்றுவித்தார். பிரிந்து செயல்பட்ட இயக்கங்கள் பாலஸ்தீன் விடுதலை இயக்கம் (Palestine Liberation Organization) என்ற பெயரில் ஒன்றிணைந்தன. இதற்கு யாசர் அரபாத் (Yasser Arafat) தலைவரானார். அவரை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டன. ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்தும் அளிக்கப்பட்டது.

1974-ஆம் ஆண்டு, பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா மன்றப் பொதுச்சபையில் நுழைந்து யாசர் அரபாத் உரையாற்றினார். தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொரு கையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன, எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்க வேண்டும் என்று அரபாத் அன்று ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆனால், ஒரு கட்டத்தில் யாசர் அரபாத் இஸ்ரேலுடன் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஹமாஸ் தோற்றம்:

அஷ்ஷைகு அஹமது யாசீன் என்பவர் 1987-களில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் (HAMAS) என்ற இயக்கத்தை உருவாக்கினார். இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் கருத்துகளை சொல்லி வந்த ஓர் அமைதியான இயக்கம். இவர்கள், போரின் போது பாதிக்கப்படும் சாலைகளை சீரமைத்தனர். பள்ளிக்கூடங்களை உருவாக்கி பாடங்களை கற்பித்தனர். மருத்துவ முகாம்களை நடத்தி வந்தனர். ஆனால், 1980-களில் இஸ்ரேலோடு அரபாத்தின் சமரசச் செயல், உள்ளிட்ட விஷயங்கள் ஹமாஸை ஆயுதம் தூக்கச் செய்தது. 1987-ல் இதன் அதிகாரப் பூர்வ தலைவராக அஹமது யாசீன் நியமிக்கப்பட்டார்.

பாலஸ்தீன்
பாலஸ்தீன்

எப்படியாவது பாலஸ்தீனத்தை மீட்டெடுத்த விட வேண்டும் என எல்லா முயற்சிகளிலும் இறங்கியது ஹமாஸ். யாசர் அரபாத் கொஞ்சம் கொஞ்சமாக ஹமாஸுக்கு எதிராக பார்க்கப்பட்டார். இஸ்ரேலோ ஹமாஸை தன்பக்கம் வளைத்து யாசர் அரபாத்துக்கு எதிராக திருப்பிவிட வேண்டும் என்று எண்ணியது. அஹமது யாஸீன் வளர்ந்தார், ஆனால் இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. இதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவிவருகின்றன. இன்றுவரை ஹமாஸ் இஸ்ரேலை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடுகிறது.

தற்போதைய சூழல்!
இஸ்ரேல் தற்போது அகண்ட இஸ்ரேல் என்ற ஒரே நாடு கொள்கையை கையிலெடுத்து பாலஸ்தீன் பகுதி முழுவதையும் தன்னுடன் இணைக்க முயன்று வருகிறது. அதில், கிழக்கு ஜெரூஸலத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று போரைத் தொடங்கியிருக்கிறது. பாலஸ்தீனின் தற்போதைய தலைநகரம் ரமல்லாஹ் (Ramallah). பெயரளவில் இது தலைநகராக இருந்தாலும் பாலஸ்தீன் மக்கள் கிழக்கு ஜெரூஸலத்தை தலைநகரமாக்க கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அல் அக்ஸா (Al-Aqsa Mosque)
அல் அக்ஸா (Al-Aqsa Mosque)

முஸ்லிம்களின் மிக முக்கியமான பள்ளிவாசல் என்றால் அது சவூதி அரேபியா நாட்டின் மக்கா நகரில் உள்ள கஃபா தான். அதையடுத்து இரண்டாவது புனித பள்ளிவாசலாக, ஜெரூஸலத்தில் உள்ள அல் அக்ஸா (Al-Aqsa Mosque) கருதப்படுகிறது. இந்த நிலையில் பாலஸ்தீனர்கள் அல் அக்ஸா பள்ளிவாசலில், ரமலான் மாத சிறப்பு தொழுகைகளை தொழுது வந்தனர். அப்பகுதி பாலஸ்தீனர்களை வெளியேற்றும் நோக்கில் இஸ்ரேல் இராணுவமோ அவர்கள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருகின்றது. தற்போதுவரை 100 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆயிரக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதில், பெரும்பாலானோர் குழந்தைகளும், பெண்களும்தான். நீங்கள் இதைப் படிக்கும் போது உயிரிழப்பு எண்ணிக்கை கூடியிருக்கலாம்.

73 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் 13 ஆயிரம் பாலஸ்தீனர்களை கொலை செய்து, 7.50 லட்சம் பேர்களை விரட்டியடித்து ஒரு நாட்டின் கண்ணீரில் சுதந்திர தினத்தை கொண்டாடிய இஸ்ரேல், இன்றும் இதே செயலில் ஈடுபட்டிருப்பது உலக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பாலஸ்தீன் நாட்டிற்கு ஆதரவாக, கிரிக்கெட் வீரர்கள் ரஷீத் கான், காகிஷோ ரபாடா, இர்பான் பதான், பாபர் ஆஜம், கால்பந்து வீரர்கள் முஹம்மது சலாஹ், சாடியோ மானே (Sadio Mane), ரியாத் மஹ்ரெஜ் (Riyad Mahrez) உள்ளிட்டோரும் குரல் கொடுத்து வருகின்றனர். முன்பு, கிரிக்கெட் வீரர் மொயீன் அலி தனது கைகளில் Save Palestine என்ற வாசகமுள்ள பேண்ட் அணிந்து மைதானத்தில் விளையாட வந்தது பேசுபொருளானது.

பாலஸ்தீன்
பாலஸ்தீன்

தற்போது அல் அக்ஸா பள்ளியில் ரமலான் பண்டிகையை பாலஸ்தீன் மக்கள் சக நண்பர்களின், உறவுகளின் உயிரற்ற சடலங்களுக்கு முன்பு கொண்டாடியிருக்கின்றனர். எங்கள் நம்பிக்கைக்கு முன் இஸ்ரேல் ஒன்றும் செய்து விட முடியாது என்ற முழக்கத்தையும் எழுப்பியிருக்கின்றனர்.

உலக நாடுகள் இனியாவது பாலஸ்தீன் விவகாரத்தில் தலையிட்டு அந்நாட்டின் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர முயல வேண்டும், பாலஸ்தீன் குழந்தைகள் இஸ்ரேலின் குண்டுகளோடு வாழும் நிலை மாறி கால்பந்துகளோடு மகிழ்ச்சியாக விளையாடும் நிலை உருவாக வேண்டும். இதுவே, மனிதாபிமானமுள்ள மக்களின் எண்ணம். இது நிறைவேறுமா?!

(பயணிப்போம்)