விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 38 சாலையில், கண்டாச்சிபுரம் காவல் நிலையம் அருகே சாலையைவிட்டு சுமார் 15 மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்டிருக்கும் நிழற்கூடம், குறுக்கே கால்வாய் இருப்பதால் பாதை இல்லாமல் பயன்பாடின்றி கிடக்கிறது என விகடனில் அண்மையில் செய்தி வெளிட்டிருந்தோம்.

இந்த நிலையில், தற்போது பேருந்து நிலையத்தின் முன்பு இருந்த கால்வாய் சீரமைக்கப்பட்டு, நீர் செல்லவும் பாதை அமைத்து, மண் பாதை அமைத்திருக்கிறது ஊராட்சி நிர்வாகம். கட்டியதிலிருந்து பயன்பாட்டில் இல்லாத பேருந்து நிலையம் விகடன் செய்தி எதிரொலியால் விரைவில் சீரமைக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஆனால், இன்னும் பேருந்துகள் சரிவர நிற்பதில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைத்திருக்கின்றனர். இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் கேட்டபோது, ``ரொம்ப மாசமா பயன்பாட்டுல இல்லாத நிழற்குடை, இப்ப சரிசெய்யப்பட்டிருக்கு... இப்போ வெயில், மழை காலங்கள்ல உதவியா இருக்கும். அதைச் சரிசெய்து கொடுத்ததுல ரொம்ப சந்தோஷம்.

ஆனா, பேருந்து இன்னும் சரியா நிக்கிறதில்லை, கூட்டமா ஒரு ஆறு, ஏழு பேர் கைகாட்டுனா நிக்குது. ரெண்டு, மூணு பேர் நின்னாங்கன்னா நிக்காமப்போயிடுது. ஒருத்தர் ஏறினாலும், பலர் ஏறினாலும் காசு கொடுத்துத்தானே பயணிக்கிறோம். இதுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தா புண்ணியமாப் போகும்" என்றனர்.