தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை இணைந்து, "பசுமை விமான நிலையம் - தமிழகத்தின் விரைவான வளர்ச்சிக்குத் தகுந்த தருணத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சி என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினரும், டாஃபே நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் டாஃபே நிறுவனத் தலைவர் மல்லிகா சீனிவாசன் பேசியதாவது, ``உள்கட்டமைப்பு என்பது தேச வளர்ச்சிக்கு மிக முக்கிய தூண்டுகோள் ஆகும். பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை ஆகியவற்றுக்கு உள்கட்டமைப்பு முதுகெலும்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நவீன விமான நிலையம் என்பது பல வளர்ச்சிகளுக்கு தூண்டுகோளாக இருக்கும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, 2028-ம் ஆண்டுக்குள் பரந்தூரில் விமான நிலையம் அமையவுள்ள செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.

பிரதம மந்திரியின் சக்தி என்னும் தொடக்கம் பன்முகத்தன்மை கொண்ட வளர்ச்சிக்கான பாதையை வழிவகுக்கிறது. சென்னை வரலாற்று ரீதியாகவும், புவியியல் ரீதியாகவும் பல நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல பெருநகரங் களுக்கு இல்லாத நன்மை சென்னைக்கு இருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இன்னும் ஏழு ஆண்டுகளில், பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியாக அதிகரிக்க உள்ளது. ஆனால், பத்தாண்டுகளில் 8 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்கக்கூடிய வசதி சென்னை விமான நிலையத்தில் உள்ளது. இந்தியாவில் அதிக பயணிகள் பயணிக்கக்கூடிய விமான நிலைய பட்டியலில், சென்னை விமான நிலையம் 3-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்துக்கு இறங்கிவிட்டது. நம்மைவிட பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையம் முன்னேறி வருகிறது. இதனால் தற்போது புதிய விமான நிலையம் அமைப்பது மிக முக்கியமாக ஆகிறது" என்று கூறினார்.
அடுத்ததாகப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ``கொரோனா பேரிடர் காலத்தில்கூட, தமிழ்நாடு வளர்ச்சி பாதையில்தான் சென்றுகொண்டிருந்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில், சென்னை சிறந்த பொருளாதார மையமாக இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர மு.க.ஸ்டாலின் லட்சியம் ஆகும். தமிழ்நாடு டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கு, புதிதாக அமையவிருக்கும் விமான நிலையம் சிறந்த காரணியாக அமையும். தற்போது இருக்கும் விமான நிலையம் வருங்கால தேவைகளைப் பூர்த்தி செய்யாது. தற்போதைய விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 300 - 400 ஏக்கர் நிலம் தேவையாக உள்ளது. விமான நிலையத்தைச் சுற்றி இருக்கும் ஆறுகள், குடியிருப்புகள், கட்டுமானங்கள் ஆகியவற்றால், அதை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாது. அதனால், புதிதாக அமைய இருக்கும் விமான நிலையம் நமது அனைத்து வருங்கால தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

தற்போதைய விமான நிலையத்தை மேம்படுத்தலாமே தவிர, விரிவாக்கம் செய்ய முடியாது. இதனால்தான் புதிய விமான நிலையம் அமைக்க உள்ளோம். அதற்காக அந்த விமான நிலையத்தை நாம் மூடப்போவது இல்லை. சென்னையைச் சுற்றியுள்ள இரண்டு முக்கிய நகரங்கள் - காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகும். இங்கே எல்லா இடங்களிலும் ஏரிகளும், விளைநிலங்களும் இருக்கின்றன. அதனால்தான் விமான நிலையத்துக்காக விளைநிலங்களை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள 11 இடங்களில் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையம், புதிய விமான நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டது. அதிலிருந்துதான் விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பரந்தூரை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில்தான் விமான நிலையம் அமைக்கப்படும். வெளிநாடுகளில், நான்கு மணி நேரத்துக்குள் கார்கோ பரிமாற்றம் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அத்தகைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், நம்மை நாமே மேம்படுத்துவது மிக அவசியம் ஆகிறது" என்று பேசினார்.

நிகழ்ச்சியில் ஆசிய-பசிபிக் ஏவியேசன் இயக்குநர் கபில் கவுல் கூறியதாவது, ``விமான நிலையம் கட்டும்போது அடுத்து வரும் 10-20 ஆண்டுகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல், அடுத்து வரும் 2 - 3 தலைமுறைகளுக்கு விமான நிலையத்தின் திறன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தற்போதைய விமான நிலையத்துக்கும், புதிதாக அமையவுள்ள விமான நிலையத்துக்கும் அதிக தூரம் உள்ளதால், இரண்டையும் விரைவாக இணைக்கக்கூடிய பாதையை அமைப்பது மிக அவசியம் ஆகும்" என்று பேசினார்.
Blue Dart Aviation நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் துளசி N மிர்சன்டனே பேசியதாவது, ``சென்னையின் வளர்ச்சி என்பது சென்னைக்கும் தமிழ் நாட்டுக்கும் மட்டும் ஆனது இல்லை. அது இந்தியாவுக்கு ஆனது" என்று பேசினார்.

Air Cargo Consultancy International Services அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பாலசுப்ரமணியன் கூறியாதவது, ``விமான நிலையம், ஏர்லைன்ஸ்களை வெறும் சேவை வழங்குபவர்களாக மட்டுமே கருதக்கூடாது, பங்குதாரராகக் கருத வேண்டும். மேலும், ஏர்லைன்ஸ் டிரெண்ட் செட்டராக இருக்க வேண்டும்" என்று பேசினார்.
Southern Region Travel Agents Association of India அமைப்பின் மண்டல தலைவர் தேவகி கூறியதாவது, ``பெரும்பாலும் பயணிகள் ஒரு இடத்துக்கு செல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட விமான நிலையத்துக்கு சென்று மாறி மாறி செல்வதை விரும்புவதில்லை. அதனால் முக்கிய இடங்களை இணைக்கும் வண்ணம் புதிய விமான நிலையம் அமைய வேண்டும். மேலும் விமான நிலையங்களில் உணவு ஸ்டால்கள் அமைப்பது மிக முக்கியம் ஆகும்" என்று பேசினார்.

தொழில், முதலீடு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் பேசியதாவது, ``முந்தைய காலங்களைவிட, தற்போது விமானத்துறை பல மடங்கு மேம்பட்டுள்ளது. மேலும் பெரிய வளர்ச்சிகளை புதிய விமான நிலையம் ஏற்படுத்தும்" என்று பேசினார்.