நகர்ப்புறத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பட்டுக்கோட்டை நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மக்களிடம் அட்டை ஒன்றை அச்சிட்டு. வீடு வீடாகக் கொடுத்து அதில் குறைகளை எழுதி வாங்கிக்கொள்வதுடன், 100 நாள்களில் அந்தக் குறைகள் தீர்க்கப்படும் எனக் கூறி பிரசாரம் செய்துவருகிறார்.

பட்டுக்கோட்டை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 17-வது வார்டில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான ஆதி.ராஜேஷ்வரன் என்கிற ராஜேஷ், அதிமுக சார்பில் லதா பாஸ்கர் போட்டியிடுகின்றனர்.
இதில் ஆதி.ராஜேஷ் வித்தியாசமான முறையில் பிரசாரத்தில் ஈடுப்பட்டுவருகிறார். அனைத்துப் பிரச்னைகளையும் நூறு நாளில் போர்க்கால அடிப்படையில் தீர்ப்பேன் எனக் கூறி வாக்கு சேகரித்துவருகிறார். ராஜேஷ் வீடு வீடாக ஓட்டுக் கேட்டுச் செல்லும்போது எல்லோரிடமும் அட்டை ஒன்றைக் கொடுக்கிறார். அதில் முதலமைச்சர் ஸ்டாலின்,உதயநிதி ஆகியோரின் படங்கள், உதயசூரியன் சின்னம் போடப்பட்டுள்ளன. அத்துடன் `உங்களில் ஒருவன்’ எனத் தனது பெயரை அச்சிட்டுள்ளார்.

அந்த அட்டையில் மக்கள் குறைகளை எழுதிக் கொடுப்பதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் `உங்களுக்கு என்ன குறை இருக்கோ அல்லது கோரிக்கை இருக்கோ அதை எழுதிக் கொடுங்க’ என்று கேட்டு வாங்கி, `கோரிக்கைகள் அனைத்தும் நூறு நாள்களில் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும். என்னைத் தேர்ந்தெடுங்கள்’ எனவும், `அதற்காகக் காத்திருக்கிறேன்’ எனவும் ஒவ்வொருவரிடமும் சொல்ல, அவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை எழுதிக் கொடுக்கின்றனர். வாக்குறுதிகள் கொடுத்தாலும் மக்களுக்கு என்னை தேவை என்பதை அறிந்து அதை முதலில் செயல்படுத்துவதற்காக ராஜேஷ் இதைச் செய்துவருவதாக திமுக-வைச் சேர்ந்த அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஆதி.ராஜேஷிடம் பேசினோம். ``என்னுடைய 17-வது வார்டு தொடர்ந்து மூன்று முறை அதிமுக வசம் இருந்தது. சாலை வசதி இல்லை, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சொல்லப்போனால் பட்டுக்கோட்டையில் வளர்ச்சி இல்லாத வார்டாக இருக்கிறது. இந்த முறை முதலமைச்சர் ஸ்டாலின் எனக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார். நான் வெற்றி பெறுவதற்காக வேலை செய்துவருகிறேன். மாதம்தோறும் மக்கள் மத்தியில் கூட்டம் நடத்தி, குறைகளைக் கேட்டு, அவை தீர்க்கப்படும். சிசிடிவி கேமரா அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்படும் என தொடக்கத்தில் வழக்கம்போல் வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் செய்தேன்.

அதன் பிறகு மக்களுக்கு என்ன தேவை, அவங்க மனசுல என்ன இருக்கு என்பதை அறிந்துகொள்ள நினைத்தேன். இதற்காக மக்கள் குறைகளையும்,கோரிக்கைகளையும் எழுதித் தரும் வகையில் அட்டை ஒன்றை அச்சிட்டு வீடு தவறாமல் கொடுத்தேன். அதில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை எழுதிக் கொடுத்துவருகின்றனர். நான் வெற்றி பெற்றால் அவை அனைத்தும் நூறு நாள்களில் நிறைவேற்றித் தரப்படும் எனவும் மக்களிடம் கூறிவருகிறேன்.
முதலமைச்சர் ஸ்டாலின் `உங்கள் தொகுதியில் முதல்வர்’ உள்ளிட்ட பல செயல்களின் மூலம் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறார். அவருடைய செயல் பலதரப்பாலும் பாராட்டப்பட்டுவருகிறது. அவர் வழியில் மக்கள் பிரச்னையை அறிந்து, விரைந்து தீர்ப்பதற்காக நான் இந்த ஐடியாவைச் செய்துவருகிறேன். இதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது” என உற்சாகத்துடன் தெரிவித்தார்.