அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

எங்களை உயிரோட கொளுத்திட்டு, ஏர்போர்ட் கொண்டுவாங்க... - கொதிக்கும் பரந்தூர் சுற்றுவட்டார மக்கள்!

பரந்தூர்
பிரீமியம் ஸ்டோரி
News
பரந்தூர்

ஏர்போர்ட் பத்தி எந்த அதிகாரியும் எங்களுக்குத் தகவல் சொல்லலை... டி.வி நியூஸ்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டோம்.

‘`நாங்க தண்ணியைக் காசு கொடுத்து வாங்கலை... காஸ் விலை ஏறினாலும், சமைக்கிறதுக்கு விறகு கிடைக்குது... இந்த மண்ணை நம்பி, விவசாயம் செஞ்சு கௌரவமா வாழுறோம். எங்களுக்கு இங்கே எல்லாமே கிடைக்குது. எங்களோட ரேஷன் கார்டு, ஆதார் கார்டை வேணாலும் அரசாங்கத்துக்கிட்டயே திரும்பக் கொடுத்துடுறோம்... எங்க ஊரை மட்டும் விட்டுடுங்க’’ என கையெடுத்துக் கும்பிடுகிறார்கள் பரந்தூர் சுற்றுவட்டார மக்கள்!

ஒருவழியாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இறுதி இடம் தேர்வு செய்யப் பட்டிருக்கிறது. “அது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது” என ஆகஸ்ட் 1-ல் மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, `பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தைச் செயல்படுத்துவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கான படிக்கட்டு. தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத் தின் மற்றொரு மைல் கல்’ எனப் பெருமிதமாக அறிக்கை வெளியிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எங்களை உயிரோட கொளுத்திட்டு, ஏர்போர்ட் கொண்டுவாங்க... - கொதிக்கும் பரந்தூர் சுற்றுவட்டார மக்கள்!

புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் ஆட்சியாளர்கள், தொழில்துறையினர், சென்னைவாசிகள் எனப் பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறது. அதேசமயம் குடியிருந்த வீட்டையும், விவசாய நிலத்தையும் தாரை வார்க்கப்போகும் 12 கிராம மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்பதை அறிய பரந்தூர் பகுதிக்குப் பயணப்பட்டோம்.

சாலையின் இருபுறமும் புளியமரங்கள், கொள்முதலுக்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகள், மாடுகள் உழும் விவசாய நிலங்கள், தரிசு நிலத்தில் மேயும் கால்நடை கள், தாமரை ஏரிகள் என்று அந்தப் பகுதியே விவசாய மண்டலமாகக் காட்சியளித்தது. சாலையோரக் கால்வாயில் நூறு நாள் வேலை செய்தபடி இருந்தது மக்கள்கூட்டம். அதனால், மேட்டுப்பரந்தூர், பள்ளப்பரந்தூர், நாகப்பட்டு, காட்டுப்பட்டூர் என பரந்தூர் ஊராட்சி மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களைச் சூழ்ந்துகொண்டு, அரசாங்கத்திடம் சொல்லவேண்டிய அனைத்தையும் ஒருவர் மாறி ஒருவராகக் கொட்டித் தீர்த்தார்கள்.

``ஏர்போர்ட் பத்தி எந்த அதிகாரியும் எங்களுக்குத் தகவல் சொல்லலை... டி.வி நியூஸ்ல பார்த்துத்தான் தெரிஞ்சுக்கிட்டோம். திடீர்னு ஏர்போர்ட் வருதுனு எங்களை காலி பண்ணச் சொல் லிட்டா நாங்க எங்க போவோம்?” எனக் கலங்கினார் வசந்தி.

பரந்தூர் வட்டார கிராம மக்கள் - ஏகனாபுரம் கிராம மக்கள்
பரந்தூர் வட்டார கிராம மக்கள் - ஏகனாபுரம் கிராம மக்கள்

``எங்களை மொத்தமா மண்ணெண்ணெய் ஊத்திக் கொளுத்திட்டு, அரசாங்கம் ஏர்போர்ட் கட்டிக்கிடட்டும்” என்று ஆற்றாமையில் அழுகிறார் கணவரைப் பிரிந்த மூன்று மகள்களையும், அவர்களுடைய குழந்தைகளையும் கூலி வேலைசெய்து காப்பாற்றும் ஜானகி. ``32 வருஷமா ஓலைக் குடிசையில வாழ்ந்தேன், இப்பதான் கடன் வாங்கி வீடு கட்டியிருக்கேன். மாசம் 10 ஆயிரம் கடன் கட்டுறேன்...” என்ற கஜேந்திரியின் தொண்டை அடுத்த வார்த்தை வராமல் அடைத்து நின்றது. ``அரசாங்கம் இப்போதான் குடிசை வீட்டுக் காரங்களுக்கெல்லாம் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுத்துருக்கு. அதை அவங்களே இடிக்கப் போறாங்களா?” என்று கேட்கிறார் பெயின்ட்டர் பெருமாள்.

செல்வப் பெருந்தகை
செல்வப் பெருந்தகை

அடுத்தடுத்து அக்கமாபுரம், நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம் பகுதிகளுக்குச் சென்றோம். ஏகனாபுரம் மக்கள் கொந்தளிப்புடன் காணப்பட்டார்கள். ``லேண்ட் வேல்யூ ஏறும், நல்ல விலைக்கு விக்கலாம்னு பரந்தூருக்கு அந்தப் பக்கம் இருக்குறவங்க விமான நிலையத்தை ஆதரிக்குறாங்க. ஆனா, எங்க ஏகனாபுரம் பஞ்சாயத்துதான் மொத்தமா காலியாகப் போகுது. 2,000 குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வரப்போகுது; இதைப் பாத்துட்டு எப்படிச் சும்மா இருக்க முடியும்... இந்தத் திட்டத்தை நிறுத்த உயிரைக் கொடுத்தாச்சும் போராடுவோம்” என்றார் இந்திரா.

``இந்தத் திட்டத்தால, ஐந்து பெரிய ஏரிகள் உட்பட 30 நீர்நிலைகள், 12 கிராமங்கள், 3,000 குடியிருப்புகள், விவசாய நிலங்கள் பாதிக்கப் படும்னு சொல்றாங்க. காங்கிரஸ் செல்வப் பெருந்தகைதான் எங்க தொகுதி எம்.எல்.ஏ. அவர் ஓட்டுக்கேட்க வரும்போது, ‘கட்டாயம் இந்த ஊருக்கு ஏர்போர்ட் வராது, வந்தாலும் தடுத்து நிறுத்துவேன்’னு சொன்னாரு. அதை நம்பித்தான் ஓட்டுப் போட்டோம். ஆனா ஜெயிச்சதும் அவரும் அமைதியாகிட்டாரு” என்று வேதனை தெரிவித்த மக்கள், ``இந்தத் திட்டத்தை நிறுத்த முதல்வர் வரைக்கும் மனு கொடுப்போம். மீறி திட்டத்தைக் கொண்டுவந்தா எதிர்த்து போராடுவோம். செத்தாலும் இந்த மண்ணுலதான் சாவோம்... வேற இடத்துக்குப் போக மாட்டோம்” என்றார்கள்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகையிடம் பேசினோம். ``தமிழ்நாட்டுக்கு வரப்போகும் இந்தப் பசுமை விமான நிலையத்தை முழுவதுமாக வரவேற்கிறேன். அதேசமயம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதபடி குடியிருப்புப் பகுதிகளை விட்டுவிட்டு, மற்ற தரிசு நிலங்களில் அமைக்க அரசு முன்வர வேண்டும். ஏகனாபுரம் மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அவர்கள் மட்டுமல்ல, மற்ற கிராம மக்களும் பல தலைமுறை களாக தாங்கள் வாழும் மண்ணைவிட்டு தங்களை அப்புறப்படுத்தக் கூடாது எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இது குறித்து முதல்வரிடமும், சட்டமன்றத்திலும் பேசுவேன்” என்றார்.

என்ன செய்யப்போகிறது அரசு?

*****

இரண்டாவது விமான நிலையம் ஏன்?

சென்னை மீனம்பாக்கத்திலுள்ள பன்னாட்டு விமான நிலையம், ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளைக் கையாள்கிறது. டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சரக்குகளைக் கையாளும் விமான நிலையமாகவும் திகழ்கிறது. பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதால், இடப்பற்றாக்குறையும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகின்றன. இதைச் சரிக்கட்டுவதற்காகவும், அடுத்த ஏழு ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும்விதத்திலும் சென்னை விமான நிலையத்தில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு தொலைநோக்குத் திட்டமாக ஆண்டுக்கு 10 கோடி பயணிகளைக் கையாளும்விதத்தில் இரண்டாவது விமான நிலையத்தை சென்னையில் அமைக்க முடிவெடுத்து, மத்திய அரசிடம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது தமிழ்நாடு அரசு. இந்த நிலையில், பரந்தூரில் சுமார் 4,751 ஏக்கர் பரப்பளவில் 20,000 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் உறுதியாகியிருக்கிறது!