தலைநகர் டெல்லி கடுமையான காற்று மாசுபாட்டால் சிக்கித் தவித்துவருகிறது. டெல்லியில் நிலவி வரும் காற்று மாசுபாடு பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஸ்க் அணியாமல் யாரும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் காற்று மாசு பிரச்னை டெல்லி மக்களை கவலைகொள்ளச் செய்கிறது. சுவாசக் கோளாறு நுரையீரல் பிரச்னைகளால் மக்கள் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில அரசு காற்று மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த முறை ஏற்பட்ட காற்று மாசு பிரச்னைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் நெல் மற்றும் வைக்கோல்களைத் தீ வைத்து எரித்ததால், அந்தப் புகை டெல்லியைப் பாதித்தது எனக் கூறப்படுகிறது. மொத்தத்தில் 44% அளவுக்கு அந்தப் புகையே டெல்லியைச் சூழ்ந்திருந்தது.

காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ``இப்படியான சூழலில் நாம் வாழ முடியுமா? இது வாழ்வதற்கான வழியா. இங்குள்ள மக்கள் யாரும் அவர்களின் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இல்லை. இது கொடுமையானது.
ஒவ்வொரு வருடமும் மக்கள் இந்த பிரச்னைகளை சந்திக்கின்றனர். டெல்லிக்கு யாரும் வர வேண்டாம், இங்கிருந்து வெளியேறுங்கள் என மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாநில அரசுதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி மக்களும் அண்டை மாநில மக்களும் இந்த மாசுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வோர் ஆண்டும் டெல்லி மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது. நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் இப்படி நடக்கும்போது இந்தக் கேள்வி நம் முன் எழுகிறது. மக்கள் சாகிறார்கள். இனிமேலும் விதிமீறல்களைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். மத்திய மாநில அரசுகள் குறை சொல்வதை நிறுதிவிட்டு ஆக்கபூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுங்கள். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இது நடக்கிறது. ஏன் உங்களால் இதைத் தடுக்க முடியவில்லையா.
மக்களை நீங்கள் சாகச் சொல்கிறீர்களா. உங்கள் மாநிலமும்தான் இதில் பாதிக்கப்படுகிறது. பஞ்சாப், ஹரியானாவில் நிர்வாகம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா. ஒவ்வொரு வருடமும் இப்படிதான் நடக்கிறது.
ஐ.ஐ.டி நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர்களை அரை மணி நேரத்தில் மத்திய அரசு அழைக்க வேண்டும். காற்று மாசு தடுப்பு நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகளை அளிக்க வேண்டும். அதிக தூசு உள்ள சாலைகளில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொலைக்காட்சி, வானொலி, ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்” என்றனர்.