
- தாதுமணலைப் பிரித்தெடுக்க வலுக்கும் எதிர்ப்பு!
தென்மாவட்ட கடற்கரையோர கனிம வளங்களை வணிகரீதியில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்த, தமிழ்நாடு அரசின் கனிம நிறுவனமும், இந்தியன் ரேர் எர்த்ஸ் (இந்தியா) நிறுவனமும் போட்டிருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.
கொட்டிக்கிடக்கும் தாதுமணல்... அள்ளத்துடிக்கும் அரசு!
தமிழ்நாட்டின் தென்மாவட்டக் கடற்கரையோரங்களில் உலகிலேயே அரிதாகக் கிடைக்கக்கூடிய பல தரப்பட்ட கனிமங்களும் புதைந்துகிடக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் அந்தக் கனிமங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆறுகளில் அடித்துவரப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட கடற்கரையோரங்களில் மில்லியன் டன் கணக்கில் சேர்ந்திருக்கின்றன. அப்படிச் சேர்ந்திருக்கும் கார்னட் (Garnet), இல்மனைட் (IImenite), ஜிர்கான் (Zircon), ரூடைல் (Rutile) போன்ற கனிமங்களை வணிக நோக்கில் பிரித்தெடுத்து சந்தைப்படுத்துவதற்கு, தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.

கடந்த ஜனவரி 9-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாடு கனிம நிறுவனமும், மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ரேர் எர்த்ஸ் (IREL- INDIA) நிறுவனமும் இணைந்து, ஒரு புதிய நிறுவனம் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் குதிரைமொழி, சாத்தான்குளம் ஆகிய இடங்களில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இரண்டு தொழிற்சாலைகள் தலா ரூ.1,500 கோடி முதலீட்டில் நிறுவப்படவிருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சாலையிலிருந்தும் ஆண்டுக்கு ரூ.1,075 கோடி வருவாய் ஈட்ட திட்டமிடப் பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது.
கிளம்பிய எதிர்ப்பு!
`தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு எதிரானது’ என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வனிடம் பேசினோம். ``தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டின் கனிம வளங்களைக்கொண்டு அரசின் வருவாயை அதிகரிக்க முனைப்பு காட்டுகிறது. இது தவறான பார்வை. கடந்த 2015-ம் ஆண்டு வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாகத் தாதுமணலைப் பிரித்தெடுத்து விற்றதில் ரூ.1 லட்சம் கோடி வரை ஊழல் நடந்ததாகச் செய்திகள் வெளியானபோது, தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த மு.க.ஸ்டாலின், ‘இது குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இந்தத் தாதுமணல் எடுப்பது அந்தப் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கிறது. இந்தத் தாதுமணல் குவாரிகள் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள் சிறுநீரக நோயால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்’ என நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், அதற்கு மாறாக தற்போது ஸ்டாலின் செயல்படுகிறார்.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகளை அமைக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கும் 5152.51 ஹெக்டேர் கொண்ட குதிரைமொழி தேரியும், 899.08 ஹெக்டேர் கொண்ட சாத்தான்குளம் தேரியும் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக, தேரிக்காடுகள் பார்ப்பதற்குப் பாலைபோலத் தெரிந்தாலும், அது மிகுந்த சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. தேரி நிலத்திலுள்ள பொறை மண், மழைக்காலங்களில் தண்ணீரை முழுவதுமாக உள்வாங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிசெய்கிறது. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை கனிம வள வருவாய்க்காக சீரழிக்கக் கூடாது.
ஏற்கெனவே, தென்மாவட்டங்களைச் சேர்ந்த குளச்சல், மணவாளக்குறிச்சி, பூந்துறை, மேல்மிடாலம், முருங்கவிளை, புத்தந்துறை ஆகிய இடங்கள் கடுமையான கடல் அரிப்பைச் சந்தித்து வருவதாக தேசிய புவி அறிவியல்துறையின் அறிக்கையே தெரிவிக்கிறது. இந்த நிலையில், அதை மேலும் சீரழிக்கும் இதுபோன்ற முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
`தனியாருக்குக் கொள்ளை லாபம், மக்களுக்கோ கொள்ளை நோய்!’
பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் சுப.உதயகுமாரிடம் பேசியபோது, ``கடற்கரையோர கனிமங்களின் சுரங்க அனுமதி, அரசு நிறுவனங்கள் அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று அணுசக்தி கனிம அனுமதி விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த விதிகளைத் தளர்த்தி, தனியார் நிறுவனங்களை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு தொடர்ந்து முயன்றுவருகிறது. ஏற்கெனவே, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, நாளையே IREL நிறுவனத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கலாம். பிறகு, தமிழ்நாட்டின் கடற்கரையோர கனிம வளங்களைச் சுரண்டி அதானியோ அல்லது வேறு ஏதேனும் ஒரு தனியார் நிறுவனமோ லாபம் ஈட்டும். மேலும், கடற்கரையோரம் பிரித்தெடுக்கப்படும் கனிமங்களில் பல கனிமங்கள் அபாயகரமான கதிரியக்க வீச்சு கொண்டவை. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் தாதுமணல் பிரித்தெடுக்கும் IREL நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும், அந்தப் பகுதியைச் சுற்றி வாழ்பவர்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது இதற்கோர் உதாரணம். எனவே, தென்மாவட்டங்களின் கனிம வளங்கள் அரசுகளுக்கோ, அண்ணாச்சிக்கோ, அதானிக்கோ உரிமைப்பட்டவை அல்ல. அவை அடுத்த தலைமுறைகளுக்கானவை. போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை” எனத் தெரிவித்தார்.

`முதல்வர் பரிசீலனை செய்வார்!’
இந்தக் கோரிக்கை, குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் விளக்கம் கேட்டோம். ``சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் முதல்வர் ஸ்டாலின். அதனால்தான் அவர் தலைமையிலேயே தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக்குழுவையும் அமைத்தார். கடற்கரையோர கனிம வளங்களை எடுப்பது தொடர்பாக எழுப்பப்பட்டிருக்கும் நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் முதல்வர் பரிசீலனை செய்வார். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில், மேற்கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என உறுதியளித்தார்.
பார்க்கலாம்!